நிழலின் பெறுமதியை அறிய முதலில் இந்த செய்திகளைப் படியுங்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“நீங்கள் மறுமை நாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்றுதிரட்டப்படுவீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 6527).
===============================
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் (மனிதர்களின் தலைக்கருகில் நெருங்கிவரும் சூரியனால்) ஏற்படும் வியர்வை, தரையினுள் இரு கை நீட்டளவில் எழுபது முழம்வரை சென்று, (தரைக்குமேல்) “அவர்களின் வாயை” அல்லது “அவர்களது காதை” எட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 5496).
===============================
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:
1- நிழல் பெறும் 7 கூட்டத்தினர்:
1. நீதி மிக்க ஆட்சியாளர்.
2. இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞன்.
3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.
4. இறைவனுக்காகவே நேசித்து, அவனுக்காகவே இணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர்.
5. தகுதியும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை(த் தவறுசெய்ய) அழைத்தபோதும் “நான் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறேன்” என்று கூறியவர்.
6. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்.
7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்திய மனிதர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1869).
===============================
2- இறைவனுக்காக ஒருவரை ஒருவர் நேசித்துக் கொண்டவர்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில், “என்னைக் கண்ணியப்படுத்துவதற்காக ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டவர்கள் எங்கே? எனது நிழலைத் தவிர வேறு நிழலில்லாத இன்றைய தினத்தில் அவர்களுக்கு நான் எனது நிழலில் நிழலளிக்கிறேன்” என்று கூறுவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 5015).
===============================
3- கடனுக்கு அவகாசம் அல்லது தள்ளுபடி:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தர வேண்டிய கடனுக்கு) அவகாசம் அளிக்கிறாரோ, அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருகின்றான். அறிவிப்பவர்: அபுல்யசர் (ரலி) அவர்கள் (முஸ்லிம் 5736)
யார் கடன் பெற்றவருக்கு எளிதாக்குகின்றாரோ, அல்லது கடனை தள்ளுபடி செய்து விடுகின்றாரோ மறுமையின் அர்ஷின் நிழலில் இருப்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி) அவர்கள் முஸ்லிம் 1563
===============================
4- செய்த தர்மம்:
“நாளை மறுமையில் ஒவ்வொருவரும் அவரவர் செய்த தர்மத்தின் நிழலில் இருப்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: உக்பதிப்னு ஆமிர் (ரலி) அவர்கள், அஹ்மத் 17333
யா அல்லாஹ் உனது நிழலைப் பெற்ற கூட்டத்தில் எம்மை ஆக்கியருள்வாயாக!
===============================
இந்தத் தலைப்பில் உரையை கேட்க விருமபினால் கீழுள்ள தலைப்பின் மீது அழுத்தவும்