1- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்’ என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 969)
===============================

2- அபூஹுரைரரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஒருவர் தமது இடுப்பில் கை வைத்தவாறு தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்”. (முஸ்லிம் 948)
===============================
3- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தொழும்போது அவர் தம் இறைவனுடன் இரகசியமாக உரையாடுகிறார். எனவே, அவர் தமக்கு முன்னாலோ (அதாவது கிப்லாத் திசையிலோ) வலப் பக்கமோ உமிழ வேண்டாம். (வேண்டுமானால்) அவர் தமது இடப் பக்கத்தில் பாதத்திற்கடியில் உமிழ்ந்து கொள்ளட்டும்.” இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 956)
===============================
4- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தாச் செய்யும்படியும், (எனது) ஆடையையோ முடியையோ (தரையில் படாதவாறு) நான் பிடித்துக்கொள்ளக் கூடாது எனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.” (இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம்845).
===============================
5- ஒரு தடைவைக்கு மேல் செய்து கொள்வதற்கு வந்துள்ள தடை: முஐகீப் பின் அபீஃபாத்திமா அத்தவ்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், சஜ்தாச் செய்யுமிடத்தில் கிடக்கும் சிறு கற்களை அப்புறப்படுத்துவது பற்றிக் கூறுகையில், “அவ்வாறு செய்துதான் ஆக வேண்டும் என்றிருந்தால் ஒரு தடவை மட்டும் செய்துகொள்க” என்றார்கள். (முஸ்லிம் 949).
===============================
6- அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “சில மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? தொழும்போது அவர்கள் வானத்தை நோக்கித் தமது பார்வையை உயர்த்துகின்றனர்!” என்று கூறினார்கள். இவ்வாறு செய்வது குறித்து நபி (ஸல்) அவர்கள் வன்மையாகவே கண்டித்தார் கள்; “இதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர்களின் பார்வை பறிக்கப்பட்டுவிடும்” என்று குறிப்பிட்டார்கள். (புஹாரி 750).
===============================
7- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சஜ்தாவில் நடுநிலையைக் கையாளுங்கள். உங்களில் எவரும் தம் கைகளை நாய் பரப்பி வைப்பதைப் போன்று பரப்பி வைக்க வேண்டாம்.” இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 850).
===============================
8- “ஷைத்தான் உட்காருவதைப் போன்று (கால்களை நட்டுவைத்து, புட்டத்தைத் தரையில் படியவைத்து) உட்கார வேண்டாம் என்றும், மிருகங்கள் உட்காருவதைப் போன்று முழங்கைகளைத் தரையில் பரப்பி வைத்து உட்கார வேண்டாம் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துவந்தார்கள்.” (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம் 857).
===============================
9- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்: ருகூஉ அல்லது சஜ்தாச் செய்துகொண்டிருக்கையில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று நான் தடை விதிக்கப்பெற்றுள்ளேன். ருகூஉவில் வலிவும் மாண்பும் உடைய இறைவனை மகிமைப்படுத்துங்கள். சஜ்தாவில் முனைந்து பிரார்த்தியுங்கள். உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும்” என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (முஸ்லிம் 824).
===============================
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉ அல்லது சஜ்தாவில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று எனக்குத் தடை விதித்தார்கள்.” (முஸ்லிம் 826)
===============================
10- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தொழும்போது எவரையும் தமக்கு முன்னால் கடந்து செல்ல அவர் அனுமதிக்க வேண்டாம். இயன்றவரை அவரைத் தடுக்கட்டும். அவர் (விலகிச்செல்ல) மறுக்கும்போது அவருடன் சண்டையிட(நேர்ந்தால் சண்டையிட்டு தடுக்க)ட்டும்! ஏனெனில், அவன்தான் ஷைத்தான்.”
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 875)
===============================
11- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தம் தோள்களை மறைக்காமல் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழ வேண்டாம்.” இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 894).
===============================
12- “அல்லாஹ் உங்களுக்கு தொழுகையைக் கட்டளையிட்டுள்ளான், எனவே உங்களில் ஒருவர் தொழும் போது திரும்பிப் பார்க்க வேண்டாம். ஒரு அடியான் தொழுகையில் தனது முகத்தை திருப்பாது வைத்திருக்கும் வரை அல்லாஹ் தனது முகத்தை அவனை நோக்கி வைத்திருக்கிறான்” என யஹ்யா அலைஹிஸ்ஸலாம் தனது மக்களுக்கு நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டார்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள், (அறிவிப்பவர்: அறிவிப்பவர்: ஹாரிஸ் இப்னுல் ஹாரிஸ் அல் அஷ்அரிய் (ரலி) அவர்கள், திர்மிதி 2863).
===============================
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழு கையில் ஒருவர் திரும்பிப் பார்ப்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அ(வ்வாறு செய்வ)து உங்களின் தொழு கையை ஷைத்தான் பறித்துச் செல்வ(தற்கு வழிவகுப்ப)தாகும்” என்று பதிலளித் தார்கள் (புஹாரி 3291).
===============================
13- ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது நாங்கள் சலாம் கொடு(த்து தொழுகையை முடி)க்கும்போது எங்கள் கைகளால் சைகை செய்தவாறு அஸ்ஸலாமு அலைக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள்மீது சாந்தியுண்டாகட்டும், உங்கள்மீது சாந்தியுண்டாகட்டும்) என்று சலாம் கூறிவந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி, ஏன் நீங்கள் உங்கள் கைகளால் சண்டிக் குதிரை வாலை (உயர்த்துவதை)ப் போன்று சைகை செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களில் ஒருவர் சலாம் கொடு(த்து தொழுகையை முடி)க்கும் போது (தமக்கு அருகிலிருக்கும்) தம் தோழரின் பக்கம் திரும்பட்டும்; கையால் சைகை செய்ய வேண்டாம் என்று கூறினார்கள். (முஸ்லிம் 738)
===============================
14- “உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்தால் ஒட்டகத்தைப் போன்று உட்காரக் வேண்டாம் . மற்றும் அவரது முழங்கால்களுக்கு முன் அவரது கைகளை வைக்கட்டும்” என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், அபூதாவுத் 840).
===============================
15- ஸைத் பின் வஹ்ப் அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (தொழுகையில்) தமது ருகூஉவையும் சஜ்தாவையும் முழுமையாக நிறைவேற்றாத ஒரு மனிதரை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கண்டார்கள்.
அப்போது அவர்கள் (அந்த மனிதரிடம்), “நீர் தொழவே இல்லை. (இதே நிலையில்) நீர் இறந்துவிட்டால், முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் எந்த நெறியில் அமைத்தானோ அந்த நெறிக்கு மாற்றமான ஒன்றிலேயே இறக்கிறீர் (புஹாரி 791)
===============================
“முஸ்லிம்களே! தொழுகையின் ருகூவிலும், ஸுஜுதிலும் தனது முதுகை சீராக வைக்காதவருக்கு தொழுகை இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அலீ இப்னு ஷைபான் (ரலி) ஸஹீஹ் இப்னு மாஜா 718).
===============================
16- முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ்-ரலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூஉவில்) என் இரு கைகளையும் கோத்து என் இரு தொடைகளின் நடுவில் வைத்துக் கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, “நாங்கள் இவ்வாறு (முதலில்) செய்துகொண்டிருந் தோம். பின்னர் அவ்வாறு செய்யக் கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள்மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம்” என்று கூறினார்கள். (புஹாரி 790)
===============================
17- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் (தொழுகையில்) இமாமை முந்திக்கொண்டு தமது தலையை உயர்த்துவதால் அவரது தலையைக் கழுதையின் தலையாக அல்லாஹ் ஆக்கி விடுவதை, அல்லது அவரது உருவத்தைக் கழுதையின் உருவமாக அல்லாஹ் ஆக்கிவிடுவதை அஞ்ச வேண்டாமா?” இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி 691)
===============================
18- “தொழுகையில் கைகைளை(க் கட்டிக் கொள்ளாமல்) தொங்க விடுவதையும், வாயை மறைத்துக் கொள்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.” (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், அபூதாவுத் 643).
===============================
19- அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த பல வண்ண திரைச் சீலை ஒன்று இருந்தது. அதைக் கொண்டு வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அல மாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய இந்தத் திரைச் சீலையை நம்மிடமிருந்து அகற்றிவிடு! ஏனெனில், இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் குறுக்கிட்டுக் கொண்டே இருக்கின்றன” என்று சொன்னார்கள். (புஹாரி 374).
===============================
20- வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்வதற்கு வந்துள்ள தடை: அபூபக்ரா (நுஃபைஉ பின் அல்ஹாரிஸ்-ரலி) அவர்கள் கூறியதாவது: (தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்துகொண்டிருந்தபோது, நான் சென்று வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்துவிட்டேன். (பின்னர்) இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்து வானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்” என்று கூறினார்கள். (புஹாரி 783).
===============================
21-அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய துணைவியார் ஸைனப் பின்த் முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது; “நீங்கள் (ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்வதற்காகப்) பள்ளிவாசலுக்குச் செல்லும் போது நறுமணம் பூசாதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள். (முஸ்லிம் 759).
===============================
22- கொட்டாவி விடுவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவருக்குத் தொழுகையில் கொட்டாவி ஏற்பட்டால், தம்மால் முடிந்த வரை (அதைக்) கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகிறான்.” இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 572).
===============================
23- “தொழுகையின் வரிசையில் (ஸஃப்ஃபில்) ஷைத்தான்களுக்கு இடைவெளி விடாதீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், ஸஹீஹ் அபூதாவுத் 666).
===============================
24- அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ (ரலி) அவர்கள் கூறியதாவது: “(ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது (வேகமாக வரும்) சிலரது காலடி ஓசையை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். தொழுது முடித்ததும், “உங்களுக்கு என்ன ஆயிற்று (ஏன் சலசலப்பு எழுந்தது)?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் (அதனால் சலசலப்பு ஏற்பட்டது)” என்று பதிலளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங் கள். (இமாமுடன்) கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) நிறைவு செய்யுங்கள்” என்று கூறினார்கள். (புஹாரி 635).
===============================
25- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப் பட்டால், என்னை நீங்கள் பார்க்காத வரை எழ(வோ செல்லவோ) வேண்டாம்; நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.” இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி 638).
===============================
இந்தத் தலைப்பில் உரையை கேட்க விருமபினால் கீழுள்ள தலைப்பின் மீது அழுத்தவும்

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *