1- அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களின் சிறப்புகள்:
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூமஸ்ஊத் (உக்பா பின் ஆமிர் – ரலி) அவர்களை இறையில்லம் (கஅபா) அருகில் சந்தித்தேன். அவர்களிடம் “அல்பகரா அத்தியாயத்தின் இரு வசனங்கள் குறித்துத் தாங்கள் அறிவித்த ஹதீஸ் எனக்கு எட்டியது” என்று கூறினேன். அதற்கு அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள், “ஆம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “எவர் அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதுகிறாரோ அவருக்கு அந்த இரண்டுமே போதும்” எனக் கூறினார்கள்” என்றார்கள். (முஸ்லிம் 1473).
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)” என்று கூறினார்கள். அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் “இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லை” என்று கூறினார்கள். அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, “உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். “அல்ஃபாத்திஹா” அத்தியாயமும் “அல்பகரா” அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை”என்று கூறினார். (முஸ்லிம் 1472).
===============================
2- நபி (ஸல்) அவர்கள் பஃஜ்ருடைய முன் சுன்னத்தில் ஓதிய வசனங்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் (முதல் ரக்அத்தில் அல்பகரா அத்தியாயத்திலுள்ள) “கூலூ ஆமன்னா பில்லாஹி வ மா உன்ஸில இலைனா…”(என்று தொடங்கும் 2:136ஆவது) வசனத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) “ஆலு இம்ரான்” அத்தியாயத்திலுள்ள “தஆலவ் இலா கலிமதின் சவாயிம் பைனனா வ பைனக்கும்…” (என்று தொடங்கும் 3:64ஆவது) வசனத்தையும் ஓதுவார்கள். (முஸ்லிம் 1318).
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் முதலாவது ரக்அத்தில் “அல்பகரா” அத்தியாயத்திலுள்ள “கூலூ ஆமன்னா பில்லாஹி வ மா உன்ஸில இலைனா…’ (என்று தொடங்கும் 2:136ஆவது) வசனத்தையும்,இரண்டாவது ரக்அத்தில் “ஆமன்னா பில்லாஹி வஷ்ஹத் பிஅன்னா முஸ்லிமூன்” (என்று முடியும் 3:52ஆவது வசனத்தையும்) ஓதுவார்கள். (முஸ்லிம் 1317).
===============================
3- ஆயதுல் குர்ஸியின் சிறப்பு:
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அபுல்முன்திர், இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?” எனக் கேட்டார்கள். நான் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினேன். அவர்கள் “அபுல்முன்திர், இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?” என (மீண்டும்) கேட்டார்கள். நான் “அல்லாஹு லாயிலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்… எனத் தொடங்கும் (2:255 ஆவது) வசனம்” என்று விடையளித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் (ஓர் அடி) அடித்துவிட்டு “அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (வாழ்த்துகள்), அபுல்முன்திரே!” என்றார்கள். (முஸ்லிம் 1476).
‘‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ‘ஆயத்துல் குர்சி’யை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதுவீராக! அவ்வாறு ஓதினால், விடியும்வரை அல்லாஹ்விவிடருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; ஷைத்தான் உம்மை நெருங்கமாட்டான்” என்று என்னிடம் அவன் கூறினான் என அல்லாஹ்வின் தூதரிடம் தெரிவித்த போது அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும், உம்மிடம் அவன் உண்மையே சொல்லியிருக்கிறான். எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 2311). ஹதீஸின் ஒரு பகுதி.
===============================
4- அல்கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களின் சிறப்பு:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார். (இதை அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 1475).
===============================
5- ஆலு இம்ரான் இறுதிப் 10 வசனங்களின் சிறப்பு:
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் (ஒரு நாள்) இரவு தங்கினேன். நான் தலையணையின் அகலவாக்கில் (தலை வைத்துப்) படுத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் வீட்டாரும் அதன் நீளவாக்கில் (தலைவைத்துப்) படுத்திருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை, அல்லது அதற்கு சற்று முன்புவரை, அல்லது சற்றுப் பின்புவரை உறங்கினார்கள். (பின்னர்) அவர்கள் விழித்தெழுந்து அமர்ந்து, தமது கரத்தால் தமது முகத்தில் தடவித் தூக்க(க் கலக்கத்)தைத் துடைக்கலானார்கள். பிறகு ‘ஆலு இம்ரான்’ அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். (புஹாரி 183). ஹதீஸின் ஒரு பகுதி.
===============================
6- அரஃபா தினத்தில், அரஃபாத்தில் அருளப்பட்ட வசனம்:
தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (அமீருல் முஃமினீன்!) நீங்கள் ஓதிக் கொண்டிருக்கும் உங்கள் வேதத்தில் ஒரு வசனம் உள்ளது. அது யூதர்களாகிய எங்கள்மீது அருளப்பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக்கொண்டிருப்போம்” என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் “அது எந்த வசனம்?” எனக் கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், “இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக முழுமை யாக்கிவிட்டேன். உங்கள்மீது எனது அருட்கொடையை நிறைவாக்கிவிட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாக நான் பொருந்திக்கொண்டுவிட்டேன்” (அல்மாயிதா 5: 3) (என்பதே அந்த வசனமாகும்)” என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் “இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் ‘அரஃபா’ பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டிருக்கும்போதுதான் (இவ்வசனம் அருளப்பெற்றது; அந்த நாள் எங்களுக்குப் பண்டிகை நாள்தான்)” என்றார்கள். (புஹாரி 45).