1- உள்ளச்சமுடையவர்கள் கஷ்டங்களை பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள்;
“(நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்(வின் திரு நாமம்) கூறப்பெற்றால், அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும்; அன்றியும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வோராகவும், தொழுகையைச் சரிவரக் கடைப்பிடிப்போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (இறைவனின் பாதையில்) செலவு செய்வோராகவும் இருப்பார்கள்.” (அல்குர்ஆன் 22: 34, 35).
===============================
2- பயபக்தியுடையவர்கள் பொறுமையுடன் செயல்படுவார்கள்:
“(வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).” (அல்குர்ஆன் 02: 177).
===============================
3- பொறுமையாளர்களுக்கு வெற்றி:
“முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!” (அல்குர்ஆன் 03: 200).
===============================
4- பொறுமையாளர்களுக்கு இரட்டிப்புக் கூலி:
“இதற்கு முன்னர், எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கிறோமோ அவர்களும் இதன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.”
“மேலும் (இது) அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: “நாங்கள் இதை நம்புகிறோம்; நிச்சயமாக இது நம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய (வசன)மாகும், இதற்கு முன்னரே நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்” என்று கூறுகிறார்கள்.”
“இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள்.” (அல்குர்ஆன் 28: 52-54).
===============================
5- பொறுமையாளர்களுக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படும்:
(நபியே!) நீர் கூறும்: “ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் – அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது; பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்.” (அல்குர்ஆன் 39: 10).
===============================
6- தலைமைத்துவத்திற்கான பண்பு:
“இன்னும் அவர்கள் பொறுமையுடனிருந்து, நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்ட போது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை – இமாம்களை – அவர்களில் நின்றும் உண்டாக்கினோம்.” (அல்குர்ஆன் 32: 24).
===============================
7- பொறுமையாளர்களுக்கு 3 நற் செய்திகள்:
“பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.” (அல்குர்ஆன் 02: 155-157).