முகஸ்துதியின் விபரீதம்

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

அல்லாஹ் கூறுகின்றான்:

‘வணக்கத்தை அல்லாஹ்வுக்கே உரித்தானவர்களாக அவனையே வணங்க வேண்டும் என்றே அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள்’ (அல்-குர்ஆன் 98:5)

அன்பு சகோதர, சகோதரிகளே! இந்த வசனத்தை நாம் நன்கு சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். தொழுகை, ஜக்காத், ஹஜ் முதற்கொண்டு நாம் செய்யக்கூடிய அனைத்து அமல்ககளும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முக்கிய இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன. அவைகள்:

  1. நாம் செய்யும் அமல்கள் அல்லாஹ்வுக்காகவே என்ற இஃக்லாஸ்
  2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் செய்தல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கும்’ அறிவிப்பவர்: உமர் (ரலி), ஆதாரம்: புகாரி

நாம் செய்கின்ற எந்த ஒரு அமலாக இருந்தாலும் அதில் அல்லாஹ்வுக்காகவே என்ற எண்ணம் இல்லாமல் இருந்தால் அல்லது அந்த எண்ணத்தில் களங்கம் ஏற்படுமாயின் அந்த அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது மட்டுமல்லாமல் அதன் மூலம் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாகவும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

‘தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்கு கேடுதான். அவர்கள் பிறருக்கு காட்டுவதற்காகத் தொழுகின்றனர். அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர்’ (107-4-7)

இந்த வசனத்தில் தொழாமல் இருப்பவர்களைப் பற்றிக் கூறவில்லை! மாறாக பிறரிடம் தாம் தொழுகையாளி எனக் காண்பிப்பதற்காகத் தொழுபவர்களைப் பற்றி எச்சரிக்கை செய்கின்றான். இந்த வசனத்திலிருந்து நாம் பல படிப்பினைகளைப் பெறலாம்.  நாம் செய்யக் கூடிய அனைத்து செயல்களையும் இந்த வசனத்தைக் கொண்டு நாம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

தம்மை பிறர் பார்த்து இவர், ‘சிறந்த தொழுகையாளி, நோன்பாளி அல்லது கொடைவள்ளல்’ என்று போற்றுவதற்காக ஒருவர்  அமல்களைச் செய்வாராயின் அவற்றைக் கொண்டு மறுமையில் எவ்விதப் பயனும் அவருக்கு ஏற்படப்போவதில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ‘தஜ்ஜாலை விட உங்களின் மீது நான் மிகவும் பயப்படக்கூடிய ஒன்றை அறிவிக்கட்டுமா?’ எனக் கேட்டார்கள். நாங்கள் அறிவியுங்கள் என்றோம். அதற்கு அவர்கள், ‘அது மறைமுகமான ஷிர்க் ஆகும். அதாவது ஒருவர் தொழுவதற்காக நிற்கிறார், அப்போது அவரை வேறொருவர் பார்க்கிறார் என்பதற்காக அத்தொழுகையை அவர் அழகுறச் செய்வதாகும்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத்  (ரலி), ஆதாரம்: இப்னுமாஜா.

இன்று பெயருக்கும், புகழுக்கும் அடிமையான நம்மில் சிலர் மிகுந்த சிரமங்களுக்கிடையே பொதுமக்களுக்கு நன்மை பயக்கின்ற வகையினிலே பல நற்காரியங்களைச் செய்கின்ற வேளையிலே தங்களின் பெயர்களை முன்னிருத்தி அவற்றை தம்பட்டம் அடிக்கின்றதை பார்க்கின்றோம். மக்களுக்காகச் செய்யப்படுகின்ற இத்தகைய நற்கருமங்கள், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற வேண்டுமென்பதல்லாமல் மக்களிடம் புகழ்பெற வேண்டும்; அதன் மூலம் தாம் வளரவேண்டும் என்று எண்ணத்தில் செய்யப்படுமானால், இது மிகவும் வருத்தத்திற்குரியது! நாம் எந்தவொரு செயலைச் செய்தாலும் நம் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிகின்றவனாக இருக்கின்றான் என்பதை நாம் ஒருகணமேனும் மறந்துவிடலாகாது.

அல்லாஹ் கூறுகின்றான்:

“(நபியே) நீர் கூறுவீராக! உங்களின் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் மறைத்தாலோ வெளிப்படுத்தினாலோ அதை அல்லாஹ் அறிகிறான்” (3:29)

அல்லாஹ்வுக்காக என்றில்லாமல் பிறர் தம்மைப் புகழ வேண்டும் என்பதற்காக ஒருவர் ஒரு செயலைச் செய்தால் அது ‘முகஸ்துதி’ என்றழைக்கப்படுகின்ற மறைமுக ஷிர்க் என்பதை நாம் உணர்ந்துக் கொண்டு அதிலிருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் தவிர்ந்து இருக்கவேண்டும். அது போல அழைப்புப் பணியில் ஈடுபடுவோரும் தம்முடைய செயல்களை அல்லாஹ்வுக்காகவே என்று ஆக்கிக்கொள்ள வேண்டும். எத்தகைய காரணத்தைக் கொண்டும் ஷைத்தானின் வலையில் விழுந்துவிடக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சந்தேகமில்லாத மறுமை நாளில் முன்னோர், பின்னோர் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்க்கும் போது அறிவிப்புச் செய்பவர், ‘எவர் அல்லாஹ்வுக்காகச் செய்த ஒரு செயலில் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்தாரோ அவர் அதற்குரிய கூலியை அல்லாஹ் அல்லாதவரிடம் வேண்டிக் கொள்ளட்டும். ஏனெனில் இணைவைப்போரின் இணைவைப்பை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்’ என அறிவிப்புச் செய்வார். அறிவிப்பவர்: அபூசயீது பின் ஃபளாலா, ஆதாரம்: இப்னுமாஜா.

எனவே, அன்பு சகோதர, சகோதரிகளே! நாம் மிகுந்த சிரமங்களுக்கிடையே கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த செல்வங்களைக் கொண்டும், நமது பொண்ணான நேரத்தையும் செலவிட்டு செய்கின்ற அமல்களில் இவ்வுலக புகழை விரும்பாமல் அல்லாஹ்வுக்காகவே, அவனுடைய திருப்பொருத்தத்திற்காகவே என்பதாக நமது எண்ணங்களை ஆக்கிக் கொண்டு அதன்படி செயலாற்றக் கூடியவர்களாக நாம் மாறவேண்டும்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். வந்தவர், ‘(மறுமையில்) கூலியையும், (இவ்வுலகில்) புகழையும் எதிர்பார்த்துப் போரிடும் மனிதனைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டார்.

‘அவனுக்கு ஒன்றுமே கிடைக்காது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மீண்டும் மீண்டும் மூன்று முறை அதையே அவர் கேட்டார். ஒவ்வொரு முறையும் அதே பதிலையே நபி (ஸல்) அவர்கள் அளித்தார்கள். பிறகு கூறினார்கள்: ‘தனக்காக மட்டுமே செய்யப்படும் அமலையும், தன்னுடைய திருமுகத்தை மனதிற்கொண்டு செய்யப்பட்ட அமலையும் மட்டுமே அல்லாஹ் ஒப்புக்கொள்வான்’ அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி), ஆதாரம்: அபூதாவுது, நஸயீ.

நம்முடைய அமல்களை அல்லாஹ்வுக்கே உரித்தானவைகளாக ஆக்கி  அவனை மட்டுமே வணங்கக்கூடியவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாகவும். ஆமீன்

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
2 thoughts on “முகஸ்துதியின் விபரீதம்”
  1. Now, this subject is very important , we must avoid from it i can ask you what can we do to avoid this one please tell me our nabi( sal)said any duva for this one , you can write next subject, jazakallahu kair.

  2. Assalamu Alaikkum, alhamdhulillah you have provided a valuable artcles and collections quran aayaths and sunnahs, these are very usefull to us.
    Barakallah feekkum.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *