ஈசா நபிக்கும், இறைவனுக்கும் மறுமையில் நடக்க இருக்கும் உரையாடல்
அகிலங்களின் ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறுகிறான்: –
“இன்னும் ‘மர்யமுடைய மகன் ஈஸாவே,
“அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?”
என்று அல்லாஹ் கேட்கும் போது அவர்
“நீ மிகவும் தூய்மையானவன் எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய் என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய் உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன் நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார். (அல் குஆன் 5:116)
“நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி) ‘என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன் அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும்)” (அல் குஆன் 5:117)
சூரத்துல் மாயிதாவில் இடம் பெறும் இந்த வசனங்களின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகள் பல உள்ளன. அவைகளில் முக்கியமானவைகள்:-
- ஈஸா நபி (அலை) அவர்கள் தம்மையும், தம்முடைய தாயாரைரையும் வணங்குமாறு தம்மைப் பின்பற்றியவர்களிடம் கூறவில்லை
- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் அல்லாஹ் அறிந்தவண்ணம் இருக்கிறான்
- மனதில் உள்ளதை அறிபவன் அல்லாஹ் மட்டுமே
- இறைவனுடைய நாட்டத்தை யாரும் அறிந்துக் கொள்ள முடியாது
- மறைவானவற்றை அறிபவன் அல்லாஹ் மட்டுமே
- அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும்
- ஈஸா நபி (அலை) அவர்கள் இப்பூவுலகில் இருந்தவரை அவர்களைப் பின்பற்றியவர்கள் நபியவர்களின் கண்காணிப்பில் இருந்தனர்
- ஈஸா நபி (அலை) அவர்களை அல்லாஹ் உயர்த்திக் கொண்ட பிறகு, ஈஸா நபி (அலை) அவர்களைப் பின்பற்றியவர்கள் என்ன செய்தார்கள் என்று ஈஸா நபி (அலை) அவர்களுக்குத் தெரியாது. அதாவது கிறிஸ்துவர்கள் தம்மையும், தம் தாயாரையும் வணங்குவது கூட ஈஸா நபி (அலை) அவர்களுக்குத் தெரியாது.
அல்லாஹ்வின் பால் உயாத்தப்பட்டுள்ள ஒரு மிகச்சிறந்த நபிக்கே அவரைப் பின்பற்றியவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாது என அல்லாஹ் கூறியிருக்கும் போது இறைவனை விடுத்து இறைநேசர்களிடம் கையேந்தி நிற்கும் நமது சகோதர, சகோதரிகளின் பிரார்த்தனைகளையும், கோரிக்கைகளையும் அவர்கள் தெரிந்துக் கொள்வதோடு அவற்றை நிறைவேற்றவும் செய்கின்றனர் என்று நம்புவது மேற்கூறிய அல்லாஹ்வின் வசனங்களுக்கு எதிரான நம்பிக்கையாகும்.