சிந்திக்கத் தூண்டும் வேதம் எது?
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
சில நாட்களுக்கு முன்பு நான் கிறிஸ்தவ சமயத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய பொறியியல் வல்லுனர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவரிடம் ” பைபிளில் நிருபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு முரணான கருத்துக்களும் மற்றும் பல முரண்பாடுகளும், தவறுகளும் காணப்படுகின்றனவே! நீங்கள் கிறிஸ்தவராக இருந்த சமயத்தில் இதைக் குறித்து உங்களுக்கு சந்தேகமே எழுந்ததில்லையா? மேலும் உங்கள் மத குருமார்களிடமோ அல்லது பைபிளின் அறிஞர்களிடமோ இவைகளைப் பற்றி கேள்வி கேட்டதுண்டா? என்று வினவினேன்.
அதற்கு அந்த சகோதரர் “கிறிஸ்தவ மதத்தில் பைபிளைக் குறித்து கேள்வி கேட்கப்படுவதை வரவேற்பதில்லை. ஏனென்றால் பைபிளை குறித்து கேள்வி கேட்பது சாத்தானின் செயல் என்று கூறுவார்கள். மேலும் பைபிளில் கூறப்பட்டிருப்பவை அனைத்தும் கடவுளின் வார்த்தைகள் என்றும் எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே நம்ப வேண்டும் என்றும் கூறுவார்கள். அதனால் நாங்கள் பைபிளைப் பற்றி ஒன்றுமே கேள்வி கேட்க மாட்டோம். அதை அப்படியே நம்பி வந்தோம்.” என்று கூறினார் .
என தருமை கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே! நாம் சற்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். நாம் ஒரு நூலை “இறைவனின் வார்த்தைகள்” எனக் கூறுவதாக இருந்தால் அவைகள் குறைந்த பட்சம்
1) தவறுகள் அற்றவைகளாகவும்
2) முரண்பாடுகள் அற்றதாகவும்
3) எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாகவும்
4) நிருபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு எதிரானதாக இல்லாமலும்
5) குறிப்பாக அதைப் படிப்பவர்களுக்கு எவ்வித சந்தேகமும் எழ இடமில்லாமல் இது இறைவனிட மிருந்து வந்த திருவேதம் என்ற நினைப்பை தோற்றுவிக்கிறதாகவும் இருக்க வேண்டும்.
ஒருவர் பைபிளைப் படித்து விட்டு அதில் எழக் கூடிய சந்தேகங்களை யாரிடம் கூறி தெளிவு பெறுவர் ? பைபிளைக் கற்ற அறிஞர்களிடம் மட்டுமே! ஆனால் அந்த அறிஞர்களோ பைபிளைக் குறித்து எழும் சந்தேகங்கள் சாத்தான் புறாத்திலிருந்து வருவது என்று கூறி பயமுறுத்தினால் அவர் எங்கே சென்று தெளிவு பெறுவார்? அவ்வாறு பயமுறுத்துவது மூலம் கேள்விகளைத் தவிர்ப்பது கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே நம்ப வேண்டும் என்பதற்காகத் தான்.
ஆனால் சத்திய மார்க்கமாகிய இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துக் கொண்டால் இஸ்லாமிய அறிஞர்களால் நடத்தப்படும் பெரும்பாலான நிகழ்ச்சிகளின் இறுதியில் கேள்வி-பதில் என்ற நிகழ்ச்சியும் இடம் பெறுவதை நீங்கள் காணலாம்.
இந்த கேள்வி-பதில் நிகழ்ச்சிகளில்,
– உரையாற்றிய தலைப்பில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தாலும்
– இஸ்லாமிய சட்ட திட்டங்கள் குறித்து எழும் சந்தேகங்கள் குறித்தும்
– இஸ்லாத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியினால் இஸ்லாம் மீது வாரியிறைக்கப்படும் அவதூறுகள் குறித்தும்
– மாற்று மத சகோதர சகோதரிகளுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் இஸ்லாத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற சவாலுடன் கேள்வி கேட்க அவர்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு வேதங்களைப் பற்றி எழக்கூடிய ஐயங்களைக் குறித்து கேள்வி கேட்டு தெளிவு பெற இஸ்லாம் வலியுறுத்துகிறது.
அகில உலகங்களின் இரட்சகனான அல்லாஹ் அவனுடைய படைப்பினமான மனித குலம் முழுமைக்கும் நேர்வழி காட்டுவதற்காக அருளிய சத்திய திருமறையில், அனைத்து மனிதர்களையும் நேக்கி இந்தக் குர்ஆனைக் குறித்து சித்தனை செய்யுமாறும் ஆராய்சி செய்யுமாறும் பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறான்.
இறைவன் கூறுகிறான்: –
4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
38:29 (நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.
முன்னாள் கிறிஸ்தவ மத போதகராகவும் தற்போதைய இஸ்லாமிய மார்க்க போதகராகவும் திகழ்கின்ற அறிஞர் அஷ்ஷெய்க் யூசுஃப் எஸ்டஸ் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் தாம் ஏன் இஸ்லாத்தை தேர்தெடுத்தேன் என்று பேசுகையில் அவர் கூறியது என் நினைவுக்கு வருகிறது.
அவர் கிறிஸ்தவராக இருந்த போது ஒரு முஸ்லிமானவரை கிறிஸ்தவராக்க முயற்சித்திருக்கிறார். அப்போது அந்த முஸ்லிமான நபர் ‘நீங்கள் இஸ்லாத்தை விட கிறிஸ்தவம் சிறந்தது என்று நிருபித்தால் நான் கிறிஸ்தவத்தை ஏற்க தயாராக இருக்கிறேன்’ என கூறியிருக்கிறார். அதைக்கேட்டு மகிழ்ந்த யூசுஃப் அவர்கள், அந்த முஸ்லிமான நபரிடம், ‘நீங்கள் கிறிஸ்தவத்தை தழுவினால் உங்கள் மார்க்த்தில் செய்வது போன்று நோன்பு நோற்க தேவையில்லை, ஜகாத் கொடுக்க தேவையில்லை மற்றும் ஹஜ் செய்யத் தேவையில்லை’ என்பது போன்றவற்றைக் கூறி கிறிஸ்தவ மார்க்கம் எளிமையானது என கூறியிருக்கிறார்.
ஆனால் அந்த முஸ்லிமான சகோதரரோ ‘எனக்கு எளிமையான மார்க்கம் தேவையில்லை. நான் உங்களிடம் கேட்டது கிறிஸ்தவ மார்க்கம் இஸ்லாத்தை விடச் சிறந்தது’ என்பதற்கான ஆதாரம் (proof) தான் என கூறியிருக்கிறார்.
உடனே அவர் “பைபிள் என்பது கடவுளின் வார்த்தைகள். இதற்கு ஆதாரம் எல்லாம் கேட்கக் கூடாது. அப்படியே நம்பிக்கைக் கொள்ள வேண்டும்” என சொன்னதாக கூறி, இவ்வாறு தான் தாமும் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகக் கூறினார்.
ஆனால் இஸ்லாம் இறைவனின் திருமறையின் வசனங்களைப் பற்றி சிந்தித்து நல்லுணர்வு பெறுமாறு பல்வேறு இடங்களில் கூறுகிறது.
இறைவன் கூறுகிறான்: –
6:126 (நபியே!) இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும் – சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம்.
15:75 நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
16:44 தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம் நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.
4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
39:27 இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.
14:52 இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.
எனவே கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே இறைவன் சிந்திக்க தூண்டுகின்ற வேதத்தைப் படித்து அவன் நமக்கு வழங்கியிருக்கும் அறிவைக் கொண்டு சிந்தித்து அதன் படி செயலாற்ற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
உங்களின் சிந்தனையில் ஏற்படுகின்ற ஐயங்களுக்கு விடைகான எங்களால் முடிந்த வரை உதவ காத்திருக்கிறோம்.
நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 37:155)