தொழுகையில் வரிசைகளை நேர் செய்தல் – ஷைத்தானை விரட்டுதல்
தொழுகையில் வரிசைகளை நிலை நாட்டுவதும் அதை நேராக்குவதும் பற்றி ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் நமக்கு விளக்குகின்றன. மேலும் அவ்வாறு செய்வது முஸ்லிம்களின் இதயங்கள் ஒன்று படுவதற்கும், ஷைத்தானை விரட்டுவதற்கும் முக்கியமானதாக அமைகிறது. இது போன்ற ஹதீஸ்கள் மக்களுக்கு தெரியாமல் இல்லை. இருந்த போதிலும் அவைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி அலட்சியமாக உள்ளனர். ஆகையால் இவைகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஹதீஸகளை விளக்க வேண்டியது மிக அவசியமானதாக இருக்கிறது.
நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –
“நபி (ஸல்) அவர்கள் மக்களின் பக்கம் திரும்பி நின்று உங்களுடைய வரிசையை நேராக்குங்கள் (மூன்று முறை கூறினார்கள்) அல்லாஹ் உங்களுடைய தரங்களை ஒன்றாக்குவான். இல்லையெனில் அல்லாஹ் உங்களுடைய இதயங்களில் வேற்றுமைகளை போட்டுவிடுவான்” என்று கூறினார்கள்.
மேலும் அவர் கூறினார் ‘நான் என்னுடைய தோழர்கள் ஒருவர் மற்றவருடைய தோழோடு தோள் சேர்த்து, முழங்காலோடு முழங்கால் சேர்த்து, கணுக்காலோடு கணுக்கால் சேர்த்து நின்றதைப் பார்த்தேன்’ (ஆதாரம் : அபூதாவுத், இப்னு ஹிப்பான், அஹ்மத்)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ ஒருவர் மற்றவரோடு நெருக்கமாக நில்லுங்கள். இடைவெளியை நிரப்பி தோளோடு தோள் சேர்த்து நில்லுங்கள். ஏனெனில் யார் கையில் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆனையாக, நிச்சயமாக ஷைத்தான் வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் ஏவுகனைகளைப் போல வருவதை நான் பார்க்கிறேன்’ (ஆதாரம் : அபூதாவுத், அஹ்மத்)
இந்த இரண்டு ஹதீஸ்களின் மூலம், ஷைத்தான் வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் நுழைந்து அவர்களுக்கிடையே குரோதத்ததை உண்டாக்கி அவர்களைப் பிரிக்கிறான் என்று காண முடிகிறது. எனவே தான் வரிசையில் நேராக நின்று இடைவெளியை நிரப்புவதன் முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்கு உணர்த்தி அதை பின்பற்றுவதற்கு கட்டளையிட்டுள்ளார்கள்.
தொழுகையில் நேராக நிற்பது ஷைத்தானை பலவீனப்படுத்தோடல்லாமல் தொழுகையாளர்க்கு இடையே குழப்பத்தை உண்டாக்க நினைக்கின்ற அவனுடைய எதிர்பார்ப்பு முறியடிக்கப்படுகின்றது.
ஆகையால் தொழுகையாளிகளே! நபி (ஸ்ல்) அவர்களின் வழிமுறைப்படி நடந்து அதனைப் பின்பற்றி மக்களையும் அதன்பால் அழைப்போம். அதன் மூலம் மக்கள் ஒன்று திரண்டு ஷைத்தானின் வலையில் இருந்து பாதுகாவல் பெறுவோம். இல்லையெனில் அல்லாஹ் உங்களுடைய இதயத்தில் வேறுபாடுகளை உண்டாக்கிவிடுவான்.
எழுத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக வாசிப்பது போல, கணுக்காலோடு கணுக்கால் சேராமல், தோளோடு தோள் சேராமல் வரிசையை நேராக்க முடியாது. முதலில் இருந்து முடிவு வரை உடலோடு உள்ளமும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய மார்க்கத்திற்காவும் இணவோம்.