ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?
அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
‘இல்முல் கை(g)ப்’ எனப்படும் ‘மறைவான ஞானம்’ அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் மறைவான விஷயங்கள் தெரியாது. நபிமார்களுக்கு அவன் அறிவித்துக் கொடுத்ததைத் தவிர எதுவும் தெரியாது. அதை அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையில் நபி (ஸல்) அவர்களைக் கூறுமாறு பணித்திருக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: –
(நபியே!) நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்: ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்-குர்ஆன் 6:50)
(நபியே!) நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது – நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.’ (அல்-குர்ஆன் 7:188)
தம்மை முஸ்லிம்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர், ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியும். நான் ஜின்களை வசப்படுத்தி வைத்திருக்கிறேன். அதன் மூலம் எனக்கும் மறைவான விஷயங்கள் தெரியும் என வாதிடுகின்றனர்.
இவர்கள் மார்க்கம் அறியா பாமர மக்களிடம்,
– காணாமல் போன பொருட்களை கண்டுபிடித்து தருவதாகவும்
– கண்களுக்கு தெரியாமல் மறைத்து செய்யப்பட்டிருக்கும் செய்வினை, சூன்யம், தட்டு, தகடு போன்றவைகளை நீக்குவதாகவும்
– ஜின்களுக்கு தெரிந்த வைத்திய முறைகளைக் கொண்டு நோய்களைத் தீர்ப்பதாகவும்
கூறிக்கொண்டு மார்க்க அறிவில்லா பாமர மக்களை ஏமாற்றி அவர்களின் கடின உழைப்பில் தங்களின் வயிறுகளை வளர்த்து வருகின்றனர்.
நிச்சயமாக இவர்கள் பொய்யான வழிகேடர்களே! ஏனென்றால் அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே மறைவான விஷயங்கள் ஜின்களுக்குத் தெரியாது என்று கூறியிருக்க இவர்கள் தெரியும் என்று வாதிடுகின்றனர். மேலும் அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களுக்கு மட்டும் தந்த ஜின்களை வசப்படுத்தும் ஆற்றல் தங்களுக்கும் இருக்கும் என வாதிடுகின்றனர்.
அல்லாஹ் கூறுகின்றான்: –
34:12 (அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது; மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).
34:13 அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. ‘தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே’ (என்று கூறினோம்).
34:14 அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை; அவர் கீழே விழவே; ‘தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிருந்திருக்க வேண்டியதில்லை’ என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது. (அல்-குர்ஆன் 34:12-14)
மேற்கண்ட வசனத்தில்,
சுலைமான் (அலை) அவர்களுக்கு ஜின்களை வசப்படுத்தி தந்நதாகவும், அவைகள் சிரமமான பல பணிகளை சுலைமான் (அலை) அவர்களுக்காகச் செய்ததாகவும் அல்லாஹ் கூறுகிறான்.
சுலைமான் (அலை) அவர்கள் இறந்தது கூடத் தெரியாமல் ஜின்கள் வேலை செய்து கொண்டிருந்தது. அப்போது அவர் சாய்திருந்த தடியை கரையான் அரித்தவுடன் அவர் கீழே விழவே ஜின்களுக்கு சுலைமான் (அலை) அவர்கள் இறந்த விஷயம் தெரியலாயிற்று. அப்போது ஜின்களின் மனநிலையை, ”தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிருந்திருக்க வேண்டியதில்லை’ என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது’ என்று அல்லாஹ் விளக்குகிறான்.
எனவே, முஃமினான சகோதர, சகோதரிகளே! மேற்கண்ட வசனங்களிலிருந்து தெளிவு பெற்றவர்களாய், தாங்கள் ஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பதாக் கொண்டு திரியும் போலிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறோம்.
ஏனென்றால் நிச்சயமாக அவர்களால் அந்த ஜின்களை வசப்படுத்த முடியாது. ஒரு வாதத்திற்காக அவர்கள் ஜின்களை வசப்படுத்துவதாக வைத்துக்கொண்டாலும் மேற்கண்ட வசனத்தின் படி ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது என்பது தெளிவான உண்மையாகும்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் மார்க்கத்தில் தெளிவைக் கொடுத்து நேரான வழியைக் காட்டுவானாகவும்.