அன்னை மேரி மற்றும் இயேசு நாதர் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?
அன்னை மேரி (அலை) உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட மேன்மையானவர்: –
(நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள் (Angels); மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்’ (என்று கூறினர்) (அல்-குர்ஆன் 3:42)
ஆண் துணையின்றி குழந்தை இயேசுவை பெற்றெடுத்த அற்புத அன்னை மேரி (அலை): –
மலக்குகள் கூறினார்கள்; ‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
‘மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.’
(அச்சமயம் மர்யம்) கூறினார்: ‘என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும் போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?’ (அதற்கு) அவன் கூறினான்: ‘அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ‘ஆகுக’ எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.’
இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான். (அல்-குர்ஆன் 3:45-48)
இயேசு நாதர் (அலை) அவர்கள் செய்த அற்புதங்கள்: –
இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) ‘நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது’ (என்று கூறினார்). (அல்-குர்ஆன் 3:49)
அப்பொழுது அல்லாஹ் கூறுவான்: ‘மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், ‘இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை’ என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும். (அல்-குர்ஆன் 5:110)
இயேசு நாதர் (அலை) அனுப்பப்பட்டதன் நோக்கம்: –
இயேசு நாதர் (அலை) இஸ்ரவேலர்களைப் பார்த்துக் கூறினார்: –
‘எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.’
‘நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.’ (அல்-குர்ஆன் 3:50-51)
இயேசு நாதர் (அலை) அவர்களின் சீடர்கள் அல்லாஹ்வை ஈமான் கொண்ட முஸ்லிம்களாவார்கள்: –
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: ‘அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?’ என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: ‘நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்’ எனக் கூறினர்.
‘எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!’ (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) (அல்-குர்ஆன் 3:52-53)
தோராவையும் இன்ஜீலையும் வழங்கியவன் அல்லாஹ்வே!
இறைவன் கூறுகிறான்: –
நிச்சயமாக நாம் தாம் ‘தவ்ராத்’தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் – அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.
அவர்களுக்கு நாம் அதில், ‘உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;’ எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. (அல்-குர்ஆன் 5:44-46)
இயேசு நாதர் (அலை) அவர்கள் கொல்லப்படவும் இல்லை, சிலுவையில் அறையப்படவும் இல்லை அல்லாஹ் அவரை உயர்த்திக் கொண்டான்: –
இறைவன் கூறுகிறான்: –
(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
‘ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்’ என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! (அல்-குர்ஆன் 3:54-55)
மேலும் அவர்கள் தம் நிராகரிப்பி(ல் எல்லை மீறிவிட்டத)னாலும் மர்யம் மீது பெரியதொரு அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வுடைய தூதரும் மர்யமின் மகனுமான ஈஸா – மஸீஹை நாங்கள் தாம் கொன்றோம். என அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). – உண்மையில் அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை, அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. மாறாக, அவருடைய நிலைமை அவர்களுக்குச் சந்தேகத்துக்குரியதாக ஆக்கப்பட்டு விட்டது. மேலும், எவர்கள் ஈஸா விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்கள் இதுபற்றி சந்தேகத்திலே இருக்கின்றார்கள். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர இதுபற்றி வேறு எந்த அறிவும் அவர்களிடத்தில் இல்லை. நிச்சயமாக அவர்கள் அவரை – மஸீஹை – கொலை செய்யவேயில்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்பக்கம் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 4:157-158)
அன்னை மேரியின் (அலை) மகன் இயேசு நாதர் (அலை) அல்லாஹ்வின் அடியரே அன்றி வேறில்லை: –
அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம். (அல்-குர்ஆன் 43:59)
இயேசு நாதர் (அலை) அவர்கள் திரும்பவும் இவ்வுலகிற்கு வருவார்கள்: –
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மகன் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) செல்வம் (பெரும்) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகி விடும்.
இந்த நபிமொழியை அறிவித்துவிட்டு அபூ ஹுரைரா(ரலி), வேதம் அருளப்பட்டவர்களில் யாரும் அவர் (ஈஸா) மரணமாவதற்கு முன்னால் அவர் மீது நம்பிக்கை கொள்ளாமலிருக்க மாட்டார்கள். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கு எதிராக அவர் சாட்சி சொல்பவராய் இருப்பார்’ (திருக்குர்ஆன் 04:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். ஆதாரம்: பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3448
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
எனக்கும் அவருக்கும் இடையில் வேறு எந்த நபியும் இல்லை; அதாவது ஈஸா (அலை) அவர் (வானத்திலிருந்து பூமிக்கு) இறங்குவார். அவரை நீங்கள் பார்க்கும் போது நீங்கள் (அவர் தான் ஈஸா {அலை} என) உணர்ந்து கொள்வீர்கள். (அவர்) நடுத்தர உயரத்திலும், செந்நிறமுடையவராகவும், இரண்டு இலேசான மஞ்சள் நிறமுள்ள ஆடையணிந்தவராகவும், ஈரமில்லாமல் இருப்பினும் நெற்றியிலிருந்து (வியர்வைத்) துளிகள் வழிவதைப்போன்றும் (காணப்படுவார்). அவர் இஸ்லாத்திற்காக மக்களிடையே போரிடுவார். சிலுவையை உடைத்தெறிவார்; பன்றிகளைக் கொல்லூர்; ஜிஸ்யா (என்னும் வரியை) நீக்குவார். அல்லாஹ் இஸ்லாத்தைத் தவிர அனைத்து மார்க்கங்களையும் அழித்து விடுவான். அவர் தஜ்ஜாலைக் கொல்லுவார்; இந்த உலகத்தில் நாற்பது வருடங்கள் வாழ்ந்து பின்னர் மரணமடைவார். முஸ்லிம்கள் அவருக்கு தொழுவிப்பார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: ஸூனன் அபூதாவுத்.
நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனுக்கும் இயேசு நாதருக்கும் (அலை) நடக்கவிருக்கும் உரையாடல்: –
‘இன்னும் ‘மர்யமுடைய மகன் ஈஸாவே ‘அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும் போது அவர் ‘நீ மிகவும் தூய்மையானவன் எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய் என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய் உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன் நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறுவார்’
{மேலும் ஈஸா (அலை) கூறுவார்} ‘நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி) ‘என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன் அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும் கூறுவார்.)’ (அல் குர்ஆன் 5:116-117)
anpulla pathipalarea neengal yeasu entru pathivu seithulla peayarin keel esha napiyin varalarum matrum avargalin thanmai.. pathiya pattullathu.. aanal.. yeasu entru pathiyamal Esha entru unmai peayargalai thalaipil pathiyavum…
இயேசு நாதர் (அலை) ithu thavaru.
ஈஸா (அலை) ithu sariyana ontru
allah anaithayum arinthavan mikka nganamullavan. . .
Assalamyu Alaikkum (varh)
Thangalin Katturaiyal Islam pattri arinthukolla uthaviyathu. Thangal ithupol Sahabakkalin Valkkai patri katturai veliyedumaru vendukirein.