ஷாதுலிய்யா தரீக்காவின் ஹல்கா – ஓர் இஸ்லாமிய பார்வை

அல்லாஹ் கூறுகிறான்: –

“(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்” (அல் குர்ஆன் 7:205)

இந்த வசனத்தில் வசனம் மூலம் நாம் பெறும் படிப்பினைகள்: –

மேற்கண்ட வசனத்தில், திக்ரு செய்யும் போது மெதுவாகவும், பணிவோடும், உரக்கச் சப்தமின்றியும், அச்சத்தோடும் செய்ய வேணடும் என இறைவன் கட்டளையிட்டிருக்கிறான். ஆனால் சூஃபியாக்கள் திக்ரு செய்கிறோம் என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத பித்அத்தான ஹல்கா போன்றவைகளைச் செய்யும் போது ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும், இருந்து விட்டு அல்லாஹ்வை திக்ரு செய்ததாக எண்ணிக் கொள்கின்றனர்.

இதில் வேதனையான விசயம் என்னவென்றால் சூபியாக்கள் கொள்கையைப் பற்றித் தெரியாதவர்கள் கூட அறியாமையினால் தாங்களும் இறைவனை திக்ரு செய்வதாக எண்ணிக்கொண்டு இதுபோன்ற மஜ்லிஸ்களில் கலந்து கொள்கின்றனர். காரணம் என்னவெனில் அவர்கள் ஊரில் உள்ள பெரும்பாண்மையானவர்கள் இந்த மாதிரியான பித்அத்களைச் செய்வதினால் அவர்களும் இதையும் மார்க்கம் என்று கருதுகின்றனர். உதாரணமாக, இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நான் கூட சிறுவயதில் சூஃபியா கொள்கைகளைப் பற்றிய அறியாமையினால், எங்கள் ஊரில் பெரும்பாலோர் செய்வது போன்று, “ஹல்கா” என்ற பெயருடைய திக்ரு மஜ்லிஸ்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அல்லாஹ் என் போன்றவர்கள் அறியாமையினால் செய்த பாவங்களை மன்னித்தருள வேண்டும் என இறைஞ்சுகிறோம்.

இவர்கள் நபிவழிக்கு மாற்றமான பலவகையான திக்ரு முறைகளை செய்கிறார்கள். அவைகளில் தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரபலமானவை ‘ஷாதுலிய்யா தரீக்கா’ மற்றும் ‘காதிரிய்யா தரீக்கா’ என்ற பிரிவுகளைச் சேர்ந்தவைகளாகும். இவர்கள் செய்யக்கூடிய இந்த வகையான திக்ரு முறைகளில் மாாரக்கத்திற்கு முரணான ஏராளமான செயல்களைச் செய்கின்றனர். இந்த வகை திக்ரு முறைகளில் ஷாதுலிய்யா தரீக்காவில் இவர்கள் செய்யக்கூடிய திக்ரு முறையைப் பற்றி சற்று பார்ப்போம்.

ஷாதுலிய்யா தரிக்காவின் ஹல்கா (திக்ரு?) முறை: –

இதில் முதலில் இவர்கள் வட்டமாக அமர்ந்துக் கொள்கின்றனர். பின்னர் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்ற திக்ரை அந்த மஜ்லிஸின் தலைவர் கூறி அரம்பம் செய்ய அங்கு கூடியிருப்போர் அனைவரும் உரத்த குரலில் அதை கூறுகின்றனர். இவ்வாறு குறிப்பிட்ட எண்ணிக்கை வரை அவர்கள் கூறி முடித்ததும் அவர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒவ்வொருவரும் தமது பக்கவாட்டில் உள்ளவரிடம் கையைக் கோர்த்துக் கொண்டு, தத்தமது உடல்களை அசைத்தவராக ‘அல்லாஹ்’ ‘அல்லாஹ்’ என கூறுகின்றனர். பின்னர் அந்தக் கூட்டத்திலிருந்த சிலர் குழுவாக அமைத்துக் கொண்டு அரபிப் பாடல்களை ‘பைத்து’ என்று பாடுகின்றனர்.

அவ்வாறு பாடும் போது அன்றைய காலக்கட்டத்தில் வெளியாகியிருக்கும் சினிமாப் பாடலின் இராகத்திற்கேற்ப மெட்டு அமைத்துக் கொண்டு பாடுகின்றனர். அவ்வாறு பாடும் போது மற்றவர்கள் ‘அஹ்’ என்றும் ‘ஆஹ்’ என்றும் அந்த சினிமாப் பாடலின் இராகத்தில் அமைந்த அந்த அரபி பாடலுக்கு ஏற்றவாறு தமது உடலை அசைக்கின்றனர். இதில் வேதனை என்னவென்றால் அவ்வாறு ஆடும் போது ‘சுதி’ (அவர்கள் பாஷையில் ‘ஜதப்’ என்கின்றனர்) ஏற்றுவதற்காக சிலர் வேகமாக கையைத் தட்டுகின்றனர். பின்னர் அவர்கள் அமர்ந்துக் கொண்டு அனைவரும் உரத்தகுரலில் ‘யா லத்திஃப்’ என்று கூறுகின்றனர். பின்னர் அவர்களில் ஒருவர் குர்ஆனிலிருந்து ஒரு சில ஆயத்துக்களை ஓத அக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் பாத்திஹா ஒதி அந்த திக்ரு? முறையை நிறைவு செய்கிறார்.

அல்லாஹ்வோ, அவனது ரஸுலோ காட்டித் தராத நூதன அனுஷ்டானங்களைச் செய்யும் இவர்கள் ‘அல்லாஹ்’ என்ற அழகிய திருநாமத்தை கூட ‘ஆஹ்’ என்றும் ‘அஹ்’ என்றும், ‘ஹு’ என்றும் திரித்து தனித்தனியாக உச்சரித்து, திக்ரு செய்வதயையே கேலிக் கூத்தாக்குகின்றனர். அல்லாஹ்வின் பெயரை இவ்வாறு திரித்துக் கூறுபவர்களைப் பற்றி குர்ஆனிலே அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கின்றான்.

அல்லாஹ் கூறுகிறான்: –

“அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன: அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களைத் (திரித்துத்) தவறாகப் பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டுவிடுங்கள்- அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்” அல்குர்ஆன் (7:180)

ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த மக்கத்து நிராகரிப்பாளர்களின் செயலான கைத் தட்டுதலை வணக்கமாக கருதுபவர்களைப் பற்றி அல்லாஹ் கடுமையாக எச்சரித்திருக்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: –

‘அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) ‘நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள’ (என்று).” (அல் குர்அன் 8:35)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: –

“மனதிற்குள் அடக்கமாகப் பிரார்த்தனை (திக்ர்) செய்யுங்கள்: நீங்கள் செவிடனையோ மறைவானவனையோ பிரார்த்திக்க வில்லை. எல்லாவற்றையும் உங்களுடன் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கின்ற இறைவனிடம் தான் பிரார்த்தனை செய்கின்றீர்கள்” அறிவிப்பவர்: அபூமுஸா அல் அஷ்அரி (ரலி) , ஆதாரம்: புகாரி

இவர்கள் செய்யக்கூடிய இந்த வகையான திக்ருமுறைகளை அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கற்றுத்தரவில்லை. மாறாக அல்லாஹ்வினால் முழுமையாக்கப்பட்ட மார்க்கத்தில் இவ்வாறு புதிய அமல்களை உருவாக்குபவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: –

‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும்செய்தால் அது நிராகரிக்கப்படும்’

“(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரம்: அஹ்மத்

அல்லாஹ்வின் பெயரை திரிப்போர்களின் கூட்டத்தை விட்டு தவிர்ந்தவர்களாக, அல்லாஹ் மற்றம் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில், அச்சத்தோடும், அமைதியாகவும், உரக்க சப்தமில்லாமலும் அல்லாஹ்வை திக்ரு செய்யும் நல்வழியில் நம்மை சேர்த்தருள அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed