பெண்கள் பலதார மணம் செய்ய தடை ஏன்?

மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:

கேள்வி எண்: 2

ஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம்  பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்வது ஏன்?

பதில்:

இஸ்லாமியர்கள் உட்பட – ஏராளமான பேர்கள் – ஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம்  பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்திருப்பது ஏன்?. என்கிற தர்க்க ரீதியான கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள்.

இஸ்லாம் அடிப்படையிலேயே நீதியையும் – சமத்துவத்தையும் நிலை நாட்டும் மார்க்கம் என்பதை நான் உங்களிடம் உறுதியாக சொல்ல விரும்புகிறேன். ஆணையும் – பெண்ணையும் சமமாகவே படைத்த அல்லாஹ் ஆணுக்கும் – பெண்ணுக்கும் வித்தியாசமான பொறுப்புகளையும் – இயல்புகளையும் கொடுத்தான். உடல் ரீதியாகவும் – உள ரீதியாகவும் ஆண்களும் – பெண்களும் வித்தியாசமானவர்கள். சமுதாயத்தில் ஆண்களுக்கும் – பெண்களுக்கும் அவரவருக்குரிய வித்தியாசமான பங்குகளும் – பொறுப்புகளும் உள்ளன. இஸ்லாத்தின் பார்வையில் ஆண்களும் – பெண்களும் சமமானவர்களேத் (Equal) தவிர – ஒரே மாதிரியானவர்கள் (Identical) அல்ல.

அல்-குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 22வது வசனம் துவங்கி 24வது வசனம் வரை ஆண்கள் யார் யாரை திருமணம் செய்து கொள்ளலாம் – யார் யாரை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதை பட்டியலிடுகிறது. யார் யாரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற பட்டியலில் ‘கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டள்ளது‘. (அல்-குர்ஆன் 4:24) எனக்கூறி ஆண்கள் திருமணம் ஆன பெண்களை மணமுடிப்பதை தடை செய்கிறது.

இஸ்லாம் – பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்வதை ஏன் தடை செய்கிறது – என்பதை கீழ்க்காணும் குறிப்புகள் இன்னும் விளக்கமாக நமக்கத் தெரிவிக்கின்றன.

1. ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்திருந்தால் – ஒவ்வொரு மனiவிக்கும் பிறக்கும் குழந்தைகள் இவருக்குத்தான் பிறந்தது என்பதை அடையாளம் காண்பது எளிது. இவர்தான் இந்தக் குழந்தையின் தந்தை என்று அடையாளம் காண்பதும் – இவர்தான் இந்த குழந்தையின் தாய் என அடையாளம் காண்பதும் மிக எளிது. அதே சமயத்தில் ஒரு பெண் பல கணவர்களை திருமணம் செய்திருந்து அந்தத் திருமணத்தின் மூலம் பிறக்கும் – குழந்தையின் தாய் இவர்தான் என அடையாளம் கண்டு கொள்வது எளிதாக இருக்கலாம். ஆனால் குழந்தையின் தந்தை – இன்னார்தான் என அடையாளம் கண்டு கொள்வது இயலாத ஒன்று. குழந்தைகளின் தாயும் – தந்தையும் – இன்னார்தான் என்று அடையாளம் – கண்டு கொள்ளும் விஷயத்திற்கு இஸ்லாம் மிகப்பெரிய முக்கியத்துவம் வழங்குகிறது. தனது பெற்றோர் இன்னார்தான் என்று அறியாத குழந்தைகள் – குறிப்பாக தனது தந்தை இன்னார்தான் என அறியாத குழந்தைகள் – மனோநலம் குன்றியவர்களாக மாறுகிறார்கள் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அவர்களது குழந்தைப் பருவம் மகிழ்ச்சியானதாக இருப்பதில்லை.

மேற்கூறப்பட்ட காரணங்களினால்தான் விலைமாதுகளுக்குப் பிறந்த குழந்தைகளின் – குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொண்டு – அதனால் பிறந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது – ஒரே குழந்தைக்கு – இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தகப்பனாரின் – பெயர்களை சொல்லக்கூடிய நிலை உருவாகலாம். ஆனால் சமீபத்திய அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக – மரபணுச் சோதனை செய்து – ஒரு குழந்தையின் தாய் இன்னார்தான் என்றும் – ஒரு குழந்தையின் தந்தை இன்னர்தான் என்றும் அடையாளம் கண்டு கொள்ளலாம் என்பதும் நான் அறிந்தவிஷயம். எனவே நான் எடுத்து வைத்த இந்த வாதம் கடந்த காலத்துக்குப் பொருந்துமேத் தவிர – இன்றைய கால கட்டத்திற்குப் பொருந்தாது.

2. ஆணையும் பெண்ணையும் ஒப்பிடும்போது – ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள தகுதியான உடலமைப்பை இயற்கையிலேயே பெற்றவன் என்பதை அறியலாம்.

3. ஓரு ஆண் – பல பெண்களை திருமணம் செய்து கொண்டாலும் கணவன் என்ற முறையில் தனது கடமைகளை செய்ய உடலியல் ரீதியாக ஆணுக்கு அந்த பணி மிக எளிதானதாகும். பல ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண்ணால் – மனைவி என்ற முறையில் தனது கடமைகளை ஒவ்வொரு கணவருக்கும் செய்து முடிப்பது கடினமானதாகும். ஓரு பெண் – மாதவிலக்காகும் கால கட்டங்களில் – மனோ ரீதியாகவும் – நடைமுறை பழக்கவழக்கங்கள் ரீதியாகவும் – ஏராளமான மாற்றங்களுக்கு உள்ளாகிறாள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

4. பல கணவர்களை கொண்டிருக்கும் ஒரு பெண் – ஒரே கால கட்டத்தில் – பல ஆண்களுடன் உடல்உறவு கொள்வதால் – பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். மேற்படி பாலியல் நோய்கள் – எந்தவித பாவமும் செய்யாத – மற்ற கணவர்களுக்கும் தொற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் மிகவும் அதிகம். மேற்படி பிரச்னை பல பெண்களை மணந்து கொள்ளும் ஒரு ஆணுக்கு ஏற்படுவதில்லை.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் மனிதனால் எளிதாக அடையாளம் காணப்பட முடிந்தவை. ஒரு பெண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதை தடை செய்த அல்லாஹ்தான் மற்றுமுள்ள காரணங்களை அனைத்தையும் அறிந்தவன்.

எனவேதான் இஸ்லாத்தில் பெண்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன்  அனைத்து மதத்தவர்களும்

ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *