இஸ்லாம், கேள்வி பதில்கள் பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)

Q1) “ஸிஹாஹ்  ஸித்தஹ்” என்று கூறப்படும் ஹதீஸ் நூல்களின் பெயர் என்ன?

A) 1) புஹாரி 2) முஸ்லீம் 3) அபூதாவுத் 4) திர்மிதி 5) நஸயி 6) இப்னுமாஜா

Q2) அல்லாஹ்வின் எந்த இரு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) ‘ஆரோக்கியம், ஓய்வு நேரம் ஆகிய இந்த இரண்டு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்’ என  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி)

Q3) உங்களில் (முஸ்லிம்களில்) சிறந்தவர்கள் என யாரைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) ‘உங்களில் (முஸ்லிம்களில்) சிறந்தவர்கள் யார் எனில், யார் குர்ஆனைக் கற்று, (பிறருக்கும்) கற்றுத் தருகிறார்களோ அவர்கள்’ (அறிவிப்பவர் : உதுமான் (ரலி), நூல்: புகாரி)

Q4) ஹுதைபிய்யா உடன்படிக்கையில் எந்த வார்த்தை இடம்பெறக் கூடாது என மக்கத்து காஃபிர்கள் கூறினர்?

A) “ரஸுலுல்லாஹ்” என்ற வார்த்தை இடம்பெறக்கூடாது என்று மக்கத்து காபிர்கள் கூறினர்.

Q5) தச்சராக இருந்த இறைத்தூதர் யார்?

A) ஜக்கரிய்யா (அலை) (முஸ்லிம்)

Q6) எந்த மூன்று இடங்களைத் தவிர நன்மையை நாடி பிரயாணம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) 1) மஸ்ஜிதுல் ஹரம் 2) மஸ்ஜிதுல் அக்ஸா 3) மஸ்ஜிதுன் நபவி. (புகாரி)

Q7) காலத்தைத் திட்டுவது குறித்து கூறப்படும் நபிமொழி எது?

A) ‘காலத்தைத் திட்டுவதன் மூலம் மனிதர்கள் எனக்கு தீங்கிழைக்கிறார்கள். காலத்திற்குச் சொந்தக்காரன் நானே! இரவையும் பகலையும் மாறி வரச்செய்பவனும் நானே! என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்’ (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)

Q8) நீதிபதிகள் எத்தனை வகைப்படுவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர்: அவர்களில் ஒரு வகையினர் சுவனத்திற்கும், இரு வகையினர் நரகத்திற்கும் செல்வர்: உணமையை அறிந்து அதன் படி தீர்ப்பு வழங்கியவர் சுவனம் செல்வர். உணமையை அறிந்திருந்தும் அநீதமாக தீர்ப்பு வழங்கியவரும், உணமையை அறியாமலேயே தீர்ப்பு வழங்கியவரும் நரகம் புகுவார். (அறிவிப்பவா : புரைதா (ரலி), நூல் : அபூதாவுது)

Q9) ‘அஸ்ரத்துல் முபஸ்ஸரா’ என்று அழைக்கப்படக் கூடக் கூடிய சுவர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட நபித்தோழர்கள் யாவர்?

A) (1) அபூபக்கர் (ரலி) (2) உமர் (ரலி) (3) உதுமான் (ரலி) (4) அலி (ரலி) (5) தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) (6) ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) (7) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) (8) ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி) (9) ஸயித் இப்னு ஜைத் (ரலி) (10) அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி) (ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா)

Q10) மனிதன் மரணித்த பின்பும் பயன் தரக் கூடிய அமல்கள் யாவை?

A) ‘மனிதன் இறந்து விடடால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அமல்கள் அனைத்தும் அவனை விட்டும் துண்டிக்கப்படுகின்றது’  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று விஷயங்கள் 1) நிரந்தர தாமம் 2) பயன் தரும் கல்வி 3) இறந்தவருடைய சாலிஹான பிள்ளைகள் செய்யும் துஆ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)

Q11) எந்த இரு விஷயங்கள் ஒருவரிடம் இருந்தால் அவனை நன்றி உள்ளவன் என்றும், பொறுமை உள்ளவன் என்றும் இறைவன் குறித்துக் கொள்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) 1) இறை நெறியை மேற்கொள்வதில் தன்னைவிட மேலானவரைப் பார்த்தல் 2) உலக வசதிகளைப் பொருத்தவரை தன்னை விடக் கீழானவரைப் பார்த்து இறைவனுக்கு நன்றி செலுத்துதல் (திர்மிதி)

Q12) எல்லாவற்றையும் விட சிறந்த செல்வங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியவை எவை?

A) 1) இறைவனை நினைவு கூறும் நாவு 2) இறைவனுக்கு நன்றி செலுத்தும் உள்ளம் 3) இறை வழியில் நடந்திட கனவனுக்கு உதவிடும் நம்பிக்கையுள்ள மனைவி. (திர்மிதி)

Q13) எந்த ஐந்து கேள்விகளுக்கு விடைதராமல் மனிதன் மறுமையில் இறைவனின் நீதி மன்றத்திலிருந்து அகன்று செல்ல முடியாது என்று நபி (ஸல்) கூறினார்கள்?

A) 1) வாழ்நாளை எப்படி கழித்தான் 2) வாலிபத்தை எவ்வாறு கழித்தான் 3) எவ்வாறு செல்வத்தை ஈட்டினான் 4) அந்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான் 5) அவன் அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டான். (திர்மிதி)

Q14) முனாஃபிக்குகளின் அடையாளங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியவை எவை?

A) 1)பேசினால் பொய் கலந்து பேசுவான் 2) வாக்குறுதியை மீறுவான் 3) நம்பினால் மோசடி செய்வான் (புஹாரி)

Q15) வாழ்நாள் அதிகரிக்கப்படவும், உணவு விஸ்தீரிக்கப்படவும் விரும்புகிறவர்கள் என்ன செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) ‘வாழ்நாள் அதிகரிக்கப்படவும், உணவு விஸ்தீரிக்கப்படவும் விரும்புகிறவர்கள் தம் சுற்றத்தினருடன் (உறவினர்களுடன்)  நல்லுறவு பாராட்டுவாராக’ (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), ஆதாரம் :புகாரி)

Q16) எந்த ஏழு நபர்களுக்கு மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்?

A) 1) நீதமான ஆடசியாளர் 2) அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த வாலிபன் 3) யாருடைய உள்ளம் அல்லாஹ்வின் பள்ளியை நினைத்த வண்ணம் இருக்கிறதோ அவர் 4) அல்லாஹ்வுக்காகவே விருப்பம் கொண்டு, சந்தித்து, பிரிந்த இருவர் 5) அழகும் அந்தஸ்தும் உள்ள பெண் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்த போது, நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர் 6) வலக்கரம் என்ன கொடுத்தது என்று தன் இடக்கரம் அறியாத அளவுக்கு இரகசியமாக தர்மம் செய்தவர் 7) தனிமையில் அல்லாஹ்வின் அச்சத்தால் கண்ணீர் மல்க அல்லாஹ்வை நினைவு கூர்பவர். (புகாரி)

Q17) நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைக் கூறுக.

A) நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்து ஒன்று தான்.

அல்லாஹ் நபி (ஸல்) அவாகள் மீது ஸலவாத் கூறுமாறு திருக்குர்ஆனில் வசனம் 33:56 ல் கட்டளையிட்ட போது, நபி தோழாகள் நபி (ஸல்) அவர்களிடம் எப்படி ஸலவாத் கூறவேணடும் என கேட்டபோது, பின் வரும் ஸலவாத்தை ஓதிக்காட்டினார்கள்.

அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலாமுஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராகீம இன்னக்க ஹமீதுன் மஜீத்

Q18) அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறை கூறிய நயவஞ்சகன் யார்?

A) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு உபை ஸலூல் (புகாரி)

Q19) ஆயிஷா (ரலி) அவாகள் மீது கூறப்பட்ட அவதூறு சம்பந்தமாக இறங்கிய குர்ஆன் வசனம் எது?

A) எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு. (அல்-குர்ஆன் 24:11)

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)

Q20) என்ன காரணங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள் என நபி (ஸல) அவர்கள் கூறினார்கள்?

A) ‘ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். அவளின் செல்வத்திற்காக, அவளின் அந்தஸ்திற்காக, அவளின் அழகிற்காக, அவளின் மார்க்கத்திற்காக. நீ மார்க்கப் பற்றுள்ளவளைத் தேர்ந்தெடுத்து அவளை மணமுடித்துக் கொள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

Q21) குழந்தைகளின் எத்தனை வயதில் அவர்களை தொழுகைக்கு ஏவுமாறு நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்?

A) ‘உங்களின் குழந்தைகளுக்கு எழு வயது ஆகும் போது தொழும்படி கட்டளையிடுங்கள்: அவர்கள் பத்து வயது ஆகும் போது (தொழ மறுத்தால்) அவர்களை அடியுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்)

Q22) “நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன” என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த இரு சந்தோஷங்கள் யாவை?

A) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன. ஓன்று நோன்பு திறக்கும் போது. மற்றது தனது நாயனை (மறுமையில்) சந்திக்கும் போது ஏற்படுகின்ற சந்தோஷமாகும். (ஆதாரம் : திமிதி)

Q23) ஹிஜ்ரி எத்தனையாவது ஆண்டில் ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டது?

A) ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது.

Q24) நெருப்பு விறகை அழித்து விடுவதைப் போல் எந்த செயல் நன்மையை அழித்து விடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினாகள்?

A) நெருப்பு விறகை அழித்து விடுவதைப் போல் பொறாமை நன்மையை அழித்து விடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அபூதாவுத்)

Q25) மறுமை நாளில் முஃமினின் தராசில் எவற்றை விட வேறெதுவும் கணமானதாக இருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) ‘மறுமையில் ஒரு அடியானின் தராசில் நற்குணங்களைத் தவிர வேறெதுவும் கணமானதாக இருக்காது. அசிங்கமான கெட்ட வார்த்தை பேசுபவனை அல்லாஹ் வெறுக்கிறான்’ (அறிவிப்பவர் : அபுதர்தா (ரலி), ஆதாரம் : திமிதி மற்றும் அஹ்மத்)

Q26) பெருமை என்றால் என்ன என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த விளக்கம் என்ன?

A) ‘எவனுடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவன் சொர்க்கம் செல்ல முடியாது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அப்போது ஒரு மனிதர் ‘என்னுடைய உடையும், என் காலனிகளும் அழகாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புவது பெருமையா?’ என்று கேட்டார். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘இறைவன் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறைப்பதும், மக்களை இழிவாகக் கருதுவதுமாகும்’ என விளக்கினார்கள். (அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம்: முஸ்லிம் மற்றும் திர்மிதி)

Q27) திருடர்களில் மிகவும் மோசமான திருடன் என்று யாரைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) ‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தனது ருகூவையும், ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தாகள். (அறிவிப்பவர் : அபூகதாதா ரலி, நூற்கள் அஹ்மத், ஹாகிம், தப்ரானி)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
5 thoughts on “இஸ்லாம், கேள்வி பதில்கள் பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)”
  1. ஒவ்வொரு மனிதனும் நபிகள் நாயகத்தின் அருள் மொழியை தவறாது கடைபிடித்து வாழ்வானேயானால் இவ்வுலகில் துன்பம் எனும் பேச்சுக்கேது இடம்? தொழுகை செய்ய இயலாத ஒரு மனிதன் நபிகளாரிடத்தில் சென்று, தான் செய்த பாவதிற்கு என்ன விமோசனம் என்று வினவ, அதற்க்கு அவர் “இது வரையில் தொழுகை செய்யாத பாவத்தை நிவர்த்தி செய்ய உன் தாய்க்கு பணிவிடை செய். இறைவன் மனம் குளிர்வான்” என்று அருளியவரல்லவா அப்பெருமான்? “தாயின் காலடியில்தான் சுவர்க்கம் இருக்கிறது. வேறுங்கும் இல்லை” எனக்காட்டியவரல்லவா அண்ணலார்? உலகம் உய்ய இறைவன் அருளிசெய்த உத்தமராம் அவர்தம் புகழ் ஓங்கட்டும்.

  2. உங்களில் (முஸ்லிம்களில்) சிறந்தவர்கள் யார் எனில், யார் குர்ஆனைக் கற்று, (பிறருக்கும்) கற்றுத் தருகிறார்களோ அவர்கள்’

  3. (செயல்கள் அனைத்தும் எண்ணத்தைப் பொறுத்தே அமையும்) என்பதற்கு தெளிவான பொருள் என்ன?

    1. நாம் செய்யக் கூடிய நல்ல செயல்களுக்கான கூலி எமது எண்ணங்களைப் பொருத்தே இருக்கும் என்பதாகும். ஸஹீஹுல் புகாரியின் முதலாவது ஹதீஸாகிய மேற்படி ஹதீஸீன் இருதியில் நபியவர்கள் இதனை விளக்குகின்றார்கள். நாம் ஒரு செயலை அல்லாஹ்வுக்காக செய்கின்றோம் என்ற எண்ணத்துடன் செய்யும் போது அதற்கான முழுமையான கூலியை அல்லாஹ் வழங்குவாகுவான். ஆனால் அதே செயலை பிற மனிதனுக்காக அல்லது உலகதில் ஒரு விடயத்தை சாதித்துக் கொள்ளும் எண்ணத்தில் செய்யும் போது அதற்கான கூலியை அல்லாஹ்விடம் எதிர்பார்க்க முடியாது. நபியவர்கள் ஹிஜ்ரத் பயணத்தை இந்த ஹதீஸில் விளக்கினார்கள். “யாருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்தில் அல்லாமல் உலகில் ஒரு காரியத்தை அடைந்து கொள்ள அல்லது ஒரு பெண்னை திருமணம் முடிக்கும் நோக்கில் இருக்குமோ அவரது ஹிஜ்ரதின் ஊடாக அந்த நோக்கங்களை அடைந்து கொள்வார்” என்றார்கள். எனவே அமல் செய்ய முன் அல்லாஹ்வுக்காக என்று எண்ணங்களை தூய்மையாக்கிக் கொள்வோம்.

  4. Q12) எல்லாவற்றையும் விட சிறந்த செல்வங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியவை எவை?

    A) 1) இறைவனை நினைவு கூறும் நாவு 2) இறைவனுக்கு நன்றி செலுத்தும் உள்ளம் 3) இறை வழியில் நடந்திட கனவனுக்கு உதவிடும் நம்பிக்கையுள்ள மனைவி. (திர்மிதி)

    திர்மிதி number ???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *