நற்குணமுடையோராக இருப்பதன் அவசியம்

புகழ் அனைத்தும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும், அவனது சாந்தியும் சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு உரித்தாகட்டும்.

நற்குணம் என்பது நபிமார்களதும், உண்மையாளர்களதும், நல்லடியார்களதும் உயர்ந்த பண்பாகும், இதனாலேயே நல்லொழுக்கமுடைய ஒரு அடியான் சிறந்த அந்தஸ்தையும் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் பெற்றுக் கொள்கின்றான். இறைவன் தனது திருக்குர் ஆனில் இறுதி நபி (ஸல்) அவர்களின் நற்குணத்தை பற்றிக் குறிப்பிடும் பொழுது,  “நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது    இருக்கின்றீர்” (அல்குர் ஆன் 68:04) என்று கூறுகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் நற்குணத்தின்பால் மக்களுக்கு ஆர்வம் காட்டி இருக்கின்றார்கள். நற்குணத்தையும் இறையச்சத்தையும் இணைத்துக் கூறி அதனை கடைபிடிக்குமாறும் கூறி இருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அதிகமானவர்கள் சுவர்க்கம் நுழைவது இறையச்சத்தினாலும், நற்குணத்தினாலுமேயாகும்” (ஆதாரம்: திர்மிதி, ஹாகிம்)

நபி (ஸல்) அவர்கள் அபூ ஹுரைரா (ரழி) அவர்களுக்கு சிறந்த ஒரு நல்லுபதேசம் செய்கின்றார்கள்:

“அபூ ஹுரைராவே நீர் நற்குணத்தை கடைபிடிப்பீராக! அதற்கு அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! நற்குணம் என்றால் என்ன? என்று வினவினார். அதற்கு நபியவர்கள் கூறினார்கள், ‘துண்டித்து நடக்கும் உறவினர்களுடன் சேர்ந்து நடப்பீராக! உமக்கு அநியாயம் செய்தவரை மன்னிபீராக!” (ஆதாரம்: அல்பைஹகீ)

பிரமாண்டமான நன்மையையும் உயர்தரமான அந்தஸ்தையும் இந்த நற்குணத்தினால் ஒரு அடியான் எளிதில் பெற்றுக் கொள்கின்றான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நற்குணம் உள்ள ஒரு அடியான் நின்று வணங்கி நோன்பு நோற்பவனின் அந்தஸ்தை அடைந்து கொள்கின்றான்” (ஆதாரம்:அஹ்மத்)

நபி (ஸல்)அவர்கள் நற்குணத்தை பூரண இறை விசுவாசத்திற்கு  உரிய அடயாளங்களில் ஒன்றாக கணிப்பிட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எவரிடத்தில் நற்குணம் என்ற பண்பு இருக்கின்றதோ அவரே பூரண இறை விசுவாசியாவர்”

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“மனிதர்களுக்கு பிரயோஜனம் அளிக்கக் கூடியவற்றை செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்; ஒரு முஸ்லிமுக்கு சந்தோசமளிக்ககூடிய செயல்களை செய்வது அல்லது கஷ்டத்தை விட்டும் நீக்குகின்ற அல்லது அவனின் கடனை நிறைவேற்றுவது அல்லது பிறரின் பட்டினியை நீக்குவது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்துக்குரிய செயல்களாகும். ஒரு முஸ்லிமின் தேவயை நிறைவேற்றுவதற்காக செல்வதென்பது பள்ளிவாசலில் ஒரு மாத காலம் இஃதிகாப் இருப்பதனை விடவும் என்னிடத்தில் விருப்பதுக்குரிய செயலாகும்” (ஆதாரம்:தபரானி)

ஒரு முஸ்லிம்  நல்ல விஷயங்களை பேசுவதற்கு இஸ்லாம் கட்டளை பிறப்பிக்கின்றது. அவ்வாறு  நல்ல விஷயங்களை பேசுவதற்கும் நன்மையுண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நல்ல வார்த்தைகளை பேசுவது சதகா(தர்மமாகும்)”  (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

இதே போன்று மனிதர்களிடம் எந்த ஒன்றையும் எதிர்பார்க்காத புன்முறுவலுக்கும் நன்மையுண்டு! அதுவும் நற்குணத்திலிருந்து உள்ளதுதான் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்துகின்றார்கள்:

“உமது சகோதரனின் முகத்தை பார்த்து புன்முறுவல் பூர்ப்பதும் சதகாவாகும்.” என்றார்கள். (ஆதாரம்: திர்மிதி)

நற்குணத்தின்பால் தூண்டக்கூடிய நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் ஏராளம்! அவர்களது வாழ்வில் தனது மனைவியர்களுடன், அண்டை வீட்டார்களுடன், ஏழ்மையாக இருந்த நபித்தோழர்களுடன், அறிவீனர்களுடன், இவற்றுக்கெல்லாம் அப்பால் இறை நிராகரிப்பாளர்களுடன் அனைவர்களுடனும் சிறந்த நற்குணமுள்ளவர்களாகவும் எடுத்துக்காட்டாகவும் முன்னுதாரணமுள்ளவராகவும் வாழ்ந்து காட்டி சென்றார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக!” (3:159)

நற்குணத்திற்கான அடயாளங்கள் ஏராளமானவை! அவற்றில் அதிகம் வெட்கமுள்ளவர்களாகவும், பிறரை துன்பப்படுத்துவதனை விட்டும் விலகி நடத்தல், அதிக சீர்திருத்தவாதியாக இருத்தல், உண்மை பேசக்கூடியவராகவும், குறைவான பேச்சு அதிக செயலுடையவராகவும், பொறுமை, நன்றியுணர்வு, தாழ்மை, கருனை, இன்முகமுள்ளவர்களாக இருப்பதோடு பிறரை திட்டாமலும் கோல், புறம், பெருமை போன்ற தீய செயல்களை விட்டும் விலகி, அல்லாஹ்வுக்காக வேண்டி ஒருவரை விரும்பி அவனுக்காகவே ஒருவரை ஒதுக்கி அவனுக்காகவே ஒருவரை பொருந்திக்கொள்ள வேண்டும்.

நற்குணத்தை இல்லாமல் ஆக்கக்கூடியவைகள்:

பெருமை, பொறாமை, கல்நெஞ்சம், நல்லுபதேசத்தை ஏற்க மறுத்தல், தலைமைத்துவம் உயர்ந்த பதவிகளையும் எதிர்பார்த்தல், தான் செய்த செயலுக்கு புகழை எதிர்பார்த்தல் போன்ற அனைத்து விஷயங்களும் நற்குணைத்தை இல்லாமலாக்குகின்ற  காரியங்களாகும். இவைகள் அனைத்துமே தற்பெருமை உள்ளவர்களிடமிருந்தே உருவாகின்றன. தீய விஷயங்கள் அனைத்துமே நற்குணத்தை பாழாக்கக் கூடியவை ஆகும். நல்ல விஷயங்கள் அனைத்துமே நற்குணத்திற்கே உரிய பண்பாகும்!                            .

நற்குணம்  என்பது உயர்ந்த பண்பாகும், அதனது கூலியையும் பண்பையும் எடுத்து நடக்க பழகிக்கொள்ள வேண்டும். அதனை விட்டு தடுக்கக்கூடிய பொறாமை, பிறரை நாவினால் நோவினை செய்தல், நேர்மையின்மை,. கோல், புறம், கஞ்சத்தனம், உறவினர்களை துண்டித்து நடத்தல் போன்றவற்றிலிருந்து தவிர்ந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு முஸ்லிம் நாளாந்தம் ஐந்து தடவைகள் தனது மேனியை சுத்தம் செய்கின்றான். உலகத்தில் மக்களுக்கு மத்தியில் ஏற்படுகின்ற பிரச்சினைகளையும், தீய குணங்களைவிட்டும் நீக்க வருடத்தில் ஒரு முறையாவது முயற்ச்சிக்காதது ஆச்சரியமான விஷயமாகும்!

கோபத்தை விட்டு விட்டு நம்மை சூழ உள்ள பெற்றோர்கள், மனைவியர்கள், குழந்தைகள், நண்பர்கள், அறிந்தவர்கள் அனைவர்களுடனும் சிறந்த முறையில் வாழ்ந்தவர்கள், இனிமையான பேச்சுக்களையும், முக மலர்ச்சியுடனும் இருக்கின்றவர்கள் இவர்கள் அனைவருமே நற்குணத்தின் மூலம் உயர்ந்த நற்கூலியை பெறத்தகுதியானவர்களே!.

நபி (ஸல்) அவர்கள்  நல்லுபதேசத்தின் போது சுருக்கமாக அழகாக நற்குணத்தைப் பற்றி  குறிப்பிட்டார்கள்:

“எங்கிருந்த போதிலும் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்! ஒரு தீமையை செய்தால் அதனை தொடர்ந்து நல்ல விஷயங்களை செய்யுங்கள்! இதனால் தீமைகள் அழிந்துவிடும். மக்களுடன் நற்குணத்துடன் நடந்துகொள்ளுங்கள்”

நாம் அனைவரும் நபிகளார் கூறிய “மறுமையில் எனக்கு மிகவும் நெருக்கமாக உள்ளவர்கள், நற்குணமுடையவரே!” எனற கூட்டத்தில் இருக்க அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
2 thoughts on “நற்குணமுடையோராக இருப்பதன் அவசியம்”
  1. சுவனத்தென்றல் தள வழிகாட்டி நிர்வாகிகள் அனைவருக்கும் அல்லாஹுத் தஆலா புனித சுவர்க்கத்தை கொடுக்க வேண்டும் என இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன். காரணம் சுவனத்தென்றல் வாய்லாக நான் பல அறியாத விடங்களையள்ளாம் அறிந்து கொன்டோன் அல்ஹம்துலில்லாஹ்.

  2. this informations r mr useful for all muslims
    jazakallahu hair…….
    ungal sevayai thodara allah arulpalippanaha!!
    aamin!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *