அகில உலகத்தார்களுக்கும் பொதுவான மார்க்கம் இஸ்லாம்
மனிதர்களில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை! அனைவரும் சமமானவர்கள்!
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல்-குர்ஆன் 49:13)
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்-குர்ஆன் 4:1)
(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான். (அல்-குர்ஆன் 2:213)
மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறுல்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர். உமது இறைவனிடமிருந்து (இம்மையின் கூலி மறுமையில் பூரணமாகக் கொடுக்கப்படும் என்ற) ஒரு வார்த்தை முந்தி ஏற்பட்டிருக்காவிட்டால் அவர்கள் எந்த விஷயத்தில் மாறுபட்டிருக்கின்றனரோ, அதைப்பற்றி அவர்களிடையே (இதற்குள்) முடிவு செய்யப்பட்டிருக்கும். (அல்-குர்ஆன் 10:19)
நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம். (அல்-குர்ஆன் 17:70)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அகில உலகத்தார்களுக்கெல்லாம் தூதராவார்கள்: –
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (அல்-குர்ஆன் 34:28)
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்-குர்ஆன் 21:107)
அல்-குர்ஆன் அகில உலகத்தார்களுக்கெல்லாம் ஓர் நல்லுபதேசமாகும்: –
ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசமேயன்றி வேறில்லை. (அல்-குர்ஆன் 68:52)
இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டதன் நோக்கம்: –
மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ‘அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்’ என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். (அல்-குர்ஆன் 16:36)
(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்: நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர். (அல்-குர்ஆன் 22:67)
ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் – அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்-குர்ஆன் 10:47)
நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை. (அல்-குர்ஆன் 35:24)
யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒரே இறைவனான அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிவாராயின் ஈடேற்றம் பெறுவார்கள்: –
முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன் 5:69)
ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன் 2:62)
சுவனபதியில் நுழைபவர்கள் யார்?
திடனாக, ஈமான் கொண்டார்களே அவர்களுக்கும்; யூதர்களாகவும், ஸாபியீன்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், மஜூஸிகளாகவும் ஆனார்களே அவர்களுக்கும், இணைவைப்போராய் இருந்தார்களே அவர்களுக்கும் இடையில் (யார் நேர்வழியில் இருந்தார்கள் என்பது பற்றி) நிச்சயமாக அல்லாஹ் கியாம நாளில் தீர்ப்புக் கூறுவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியமாக இருக்கிறான். (அல்-குர்ஆன் 22:17)
‘யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்’ என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களின் வீணாசையேயாகும்; ‘நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக! அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக)
அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன் 2:111-112)
நஷ்டத்திலிருக்கும் மனிதன் ஈடேற்றம் பெற என்ன செய்ய வேண்டும்?
காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (அல்-குர்ஆன் 103:1-3)