உலகின் பல்வேறு திசைகளிலும் பரவும் இஸ்லாம்
1400 ஆண்டுகளுக்கு முன்னர் நபி (ஸல்) அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட்டது உண்மையாகிறது. இது அப்துல் ஹக்கீம் குயிக் அவர்கள் ஆற்றிய ஆங்கில உரையின் எழுத்து வடிவம் ஆகும். இந்த வீடீயோ உரை பிரபல இஸ்லாமிய தொலைக் காட்சி சேனல் “ஹுதா” டி.வி. யில் ஒளிபரப்பப்பட்டதாகும் – நிர்வாகி
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். அவனது சந்தியும் சமாதானமும் அவனது திருத்தூதர் (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தார்கள் மற்றும் அவர்களின் உற்ற தோழர்கள் அனைவரின் மீதும் என்றென்றும் உண்டாவதாக!
முதலில் சுவர்க்கத்தின் வாழ்த்துரையாகிய “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பதைக் கூறி உங்களை வாழ்த்துகிறேன்.
அல்லாஹ்விடமிருந்து இந்த சமுதாயத்திற்கு, இந்த உம்மத்திற்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய கிருபை என்னவென்றால் அவனுடைய அடியாரும், அல்லாஹ்வின் இறுதித் தூதருமான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள். நபி (ஸல்) அவர்கள் சுயமாக எதையுமே பேசியதில்லை. இறைவனிடமிருந்து வஹி மூலம் அருளப்பட்டதையே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்ராஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை) அவர்களைப் போல முஹம்மது (ஸல்) அவர்களும் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த இறைவன் புறத்திலிருந்து அவனுடைய தூதுத் செய்தியைப் போதித்தார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு சிறப்புத் தகுதியை அல்லாஹ் தந்திருந்தான். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய ஒரு தோற்றத்தைக் காட்டினான். 1400 ஆண்டுகளுக்கு முன்னரே நபி (ஸல்) அவர்கள் வாழ்திருந்த போதிலும் இந்த பரந்து விரிந்த உலகின் பல்வேறு பகுதிகளை அவர்களால் பார்க்க முடிந்தது. அதன் மூலம் அவர்கள் காலத்திலும் சரி, ஏன் உலக சரித்திரத்தில் இது வரையிலும் கூட எந்த மனிதராலும் பார்த்திருக்க முடியாத காட்சியை நபி (ஸல்) அவர்களால் பார்க்க முடிந்தது.
ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –
“நிச்சயமாக அல்லாஹ் எனக்கு பரந்து விரிந்த இந்த உலகின் எல்லைகளைக் காட்டினான். அவன் எனக்கு கிழக்கையும் காட்டினான், அவன் எனக்கு மேற்கையும் காட்டினான். மேலும் அவன் என்னிடம், என்னுடைய உம்மத்து (சமுதாயம்) நான் கண்ட எல்லை வரையிலும் பரவும் என்று கூறினான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸின் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய துல்லியமான ஒரு அற்புதக் காட்சி காட்டப்பட்டிருப்பதை நாம் அறிகிறோம். சத்தியத் திருத்தூதரான நபி (ஸல்) அவர்கள் உண்மையையே கூறியிருக்கிறார்கள்.
இன்று இஸ்லாம் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிளெல்லாம் பரவுவதைப் நாம் பார்க்கிறோம். நாம் அரேபியாவிருந்து பார்த்தோமேயானால் பகல்-இரவு கோட்டிற்கு அருகிலுள்ள நியூசிலாந்தின் பாலினீஸியா (Polynesia) தீவுகளைச் சேர்ந்த மயோரி (Māori) இனத்தைச் சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள் என்று சமீபத்தில் நமக்கு வந்த தகவல்கள் கூறுகிறது. இது முன்னர் அறியப்படாத புதிய செய்தியாகும். இதன் மூலம் அரேபியாவின் கிழக்கின் கோடியிலிருந்தும் மக்கள் இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
அரேபியாவின் மேற்கே எடுத்துக்கொண்டால், மொராக்கோ மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டினால் அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் ஆயிரக்கணக்கில் மக்கள் இஸ்லாத்தை தழுவியிருக்கிறார்கள். இன்றளவும் அவ்வாறு தழுவிக்கொண்டிருக்கிறார்கள். மேற்கே தொடர்ந்து சென்றோமேயானால் ஹவாய் தீவுகளிலிருந்து மக்கள் அதிக அளவில் இஸ்லாத்தைத் தழுவுவது தெரிகிறது.
சத்தியத்தை போதிக்க வந்த தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாமாகவே எதையும் கூறவில்லை. அவர்களுக்கு வஹீ மூலம் அருளப்பட்டதையே கூறியிருக்கிறார்கள்.
எனக்கு வடக்கின் மூலையிலுள்ள அலாஸ்கா என்ற பிரதேசத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அந்தப் பிரதேசத்தில் இயற்கையாகவே சில அசாதாரண நிகழ்வுகள் நடைபெறுகின்றது. நாங்கள் அலாக்ஸாவிற்கு கோடையில் சென்றோம். அங்கு மஃரிப் தொழுகைக்காக நாங்கள் காத்திருந்த போது இமாம் தமது கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு “இது மஃரிப் தொழுகைக்கான நேரம்” என்று கூறினார். ஆனால் அப்போதும் வானத்தில் சூரியன் இருந்துக் கொண்டிருந்தது. அதே போல இஷாவுடைய நேரம் வந்ததும் இமாம் மீண்டும் தமது கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு “இது இஷாத் தொழுகைக்கான நேரம்” என்று கூறினார். ஆனால் அப்போதும் சூரியன் வானத்தில் இருந்துக் கொண்டிருந்தது.
தொடர்ந்து அன்று இரவு 12 மணிக்கு நாங்கள் தூங்குவதற்காக எத்தனித்த போது வானத்தைப் பார்த்தோம், அப்போதும் சூரியன் நடுபகலைப் போல் இருந்துக் கொண்டிருந்தது. இது “நடு இரவு சூரியன்” (mid night sun) என்றழைக்கப்படுகிறது. அல்லாஹ்வுடைய படைப்பான இந்த பூமியில் இது ஒரு வித்தியாசமான நிகழ்வாகும். இஸ்லாத்தில் இத்தகைய சூழ்நிலைகளிலும் எவ்வாறு செயல்படுவது என்ற சட்ட நெறி முறைகள் இருக்கிறது.
தொடர்ந்து நாம் வடக்கே சென்றோமேயானால், அங்கு மத்திய கிழக்கு நாடுகளைப் போல் சம அளவிளான பகலை உடையதாக அல்லாமல் இருக்கக் கூடிய பிரதேசங்களைக் காணலாம். அங்கு ஓரிரு மாதங்களுக்கு தொடர்ந்து பகலாகவும் மேலும் ஓரிரு மாதங்களுக்கு தொடர்ந்து இரவாகவும் இருக்கும். அந்தப் பிரதேசங்களை நாம் அடைந்தோமேயானால் நாம் அருகிலுள்ள நகரங்களின் நேரத்தைக் கணக்கிட்டு அந்த நேரங்களை நமது தொழுகைக்கான நேரமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். மேலும் சில அறிஞர்கள் மக்கத்துல் முகர்ரமாவின் நேரப்படி கணித்துக்கொள்ளலாம் என்பதாக கூறுகின்றனர். எனவே இஸ்லாம் என்பது எல்லாக் காலங்களுக்கும் எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்புடையதாகக் கூடிய ஒரு (dyanamic) மார்க்கமாக இருக்கிறது.
மேலும் அந்தப் பிரதேசங்களில் நாம் பனிக்கட்டியினாலே தமது வீடுகளை அமைத்துக் கொண்டிருக்கின்ற எஸ்கிமோக்கள் என்ற மக்களைச் சந்தித்தோம். அந்தப் பிரதேசமே கடுங்குளிர் உடையதாக இருக்கிறது. பனிக்கட்டியினால் அமைந்த அவர்களின் வீடுகளின் உட்பகுதியில் தோலினால் கூரையிட்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் கிருபையினால் அந்த வீட்டின் உட்புறம் இளம் சூடான பகுதியாக மாறிவிடுகிறது. இத்தகைய பிரதேசங்களிலும் இந்த எக்ஸிமோக்கள் இஸ்லாத்தை தழுவுகிறார்கள். இந்தப் பிரதேசம் பூமியின் வடக்கின் எல்லைப்பிரதேசமாகும்.
இந்தப் பகுதியில் சில நேரங்களில் தட்ப வெப்பநிலை மைனஸ் 60 டிகிரியை எட்டுகின்ற அளவிற்கு மிகவும் கடுமையான குளிர் பிரதேசமாகும். அல்லாஹ்வின் அளப்பெருங் கிருபையினால் பூமியின் கடுங்குளிர் பிரதேசமான வடதுருவப் பகுதிகளிலும் இஸ்லாம் வளர்ந்து வருகின்றது.
எனவே உலகில் தற்போது நிகழும் அரசியல் குழப்பங்களிடையிலேயும் உலகின் அனைத்துப் பாகங்களிலும் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருகிறது. இஸ்லாத்தைப் பற்றி அறிவியல் நுணுக்கம் வாய்ந்த மீடியாக்களின் மூலம் தவறாக விமர்சிக்கப்பட்ட போதிலும் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருகின்றது. ஏனெனில் இஸலாம் என்பது காகிதத்தால் உருவான மார்க்கமன்று! மாறாக இஸ்லாம் என்பது முழுமையான வாழ்க்கை நெறிமுறை ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் அரஃபாத் தினத்தன்று தமது தோழர்களுக்கு ஆற்றிய உரையான “இங்கே வந்திருக்கின்ற நீங்கள் இங்கே வராதவர்களுக்கு என்னுடைய செய்தியை எடுத்துக் கூறுங்கள்” என்று சொன்னதை நாம் மறந்து விடக்கூடாது.
– அது தான் “ஒரே இறைவனை நம்பிக்கை கொள்ள வேண்டும்” என்ற செய்தியாகும்!
– அது தான் “நாம் எவ்வித அநியாயங்களிலும், அடக்கு முறைகளிலும் ஈடுபடக் கூடாது” என்ற செய்தியாகும்!
– அது தான் “வெள்ளையர்கள் கறுப்பர்களை விடவும் எவ்விதத்திலும் உயர்ந்தவர்களில்லை, அதே போல் கறுப்பர்கள் வெள்ளையர்களைவிட எவ்விதத்திலும் உயர்ந்தவர்களில்லை. மேலும் அரேபியர்கள், அரேபியர் அல்லாதவர்களைவிட எவ்விதத்திலும் உயர்ந்தவர்களில்லை, அதே போல் அரேபியர் அல்லாதவர்கள் அரேபியர்களைவிட உயர்ந்தவர்களில்லை. அவர்களிடையே வேறுபாடு எதில் உண்டு என்றால் அவர்களிடையே இருக்கும் இறையச்சத்தினால் தான்” என்ற செய்தியாகும்.
– அது தான் ஆண்களுக்குப் பெண்களின் மீது உரிமைகள் இருக்கிறது. அது போன்று பெண்களுக்கும் ஆண்களின் மீது உரிமைகள் இருக்கிறது” என்ற செய்தியாகும்.
– அது தான் “நீங்கள் இரண்டைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கும் காலமெல்லாம் வழி தவற மாட்டீர்கள், ஒன்று அல்லாஹ்வின் வேதம், மற்றொன்று றபி (ஸல்) அவர்களின் வழிமுறை” என்ற செய்தியாகும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்தச் செய்தியானது அவர்களின் தோழர்களின் மூலம் உலகின் நான்கு மூலைகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் இன்றளவும் முஸ்லிம்கள் இஸ்லாத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இஸ்லாத்தை வளர்ப்பது ஆயுதபலத்தினாலோ அல்லது வலுக்கட்டாயமாகவோ அல்ல! மாறாக அவர்கள் மக்களிடையே நடந்துக் கொள்ளும் முறைகளினால்.
உண்மையான இஸ்லாத்தை ஒருவர் தமது வாழ்வில் கடைப்பிடிக்கும் போது அது அவரது வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பிரதிபலிக்கின்றது. அது ஆண்மீக வாழ்வை மட்டுமல்லாது உலக வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அது, பள்ளிவாசலில் மட்டுமல்லாமல் வெளியிலும் அவரது வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது. அவரது வியாபாரம் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். மேலும் அவர் தமது வியாபாரத்தில் நேர்மையாக இருக்க வேண்டும். அவர் பள்ளிக் கூடத்திலே நேர்மையாக இருக்க வேண்டும். எவ்வித ஏமாற்று வேலையும் செய்யாமல் நேர்மையாக பரீட்சை எழுத வேண்டும்.
மேலும் அவரது கை, கால், முகம், உடல் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருப்பதோட மட்டுமல்லாது அவர் தமது வாய் மற்றும் கண் ஆகியவற்றை தூய்மைப் படுத்தவேண்டும். அவரது முழு வாழ்வும் தூய்மையானதாக இருக்க வேண்டும். தன்மானம், அடக்கம் அவரது வாழ்வில் ஏற்படும்.
மேலும் ஒருவர் உண்மையாக இஸ்லாத்தைப் பின்பற்றும் போது அது அவரது பொருளாதார வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவர் வட்டியின் அனைத்து சாயல்களிலிருந்தும் தவிர்ந்திருப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும். அது அவரது அரசியல் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவர் ஒரு அரசியல் கட்சியின் அடிமையாகவோ அல்லது அரசியல் மற்றும் பொருளாதார இலாபங்களுக்கு அடிமையாகவோ மாறமாட்டார். ஆனால் அவர் அவரபை் படைத்த இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமையாக இருப்பார்.
எனவே, நபி (ஸல்) அவர்களுக்கு பரந்து விரிந்த உலகின் பல்வேறு பாகங்கள் காட்டப்பட்டது. அவர்களுக்கு மலைகளும், பள்ளத்தாக்கும், ஆறுகளும், பாலைவனங்களும் காட்டப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் இந்த உலகின் கிழக்கு மற்றும் மேற்கின் எல்லைகளுக்கும் பரவும் என்று நமக்குத் அவர்களின் தோழர்களின் மூலம் தெரிவித்தார்கள். இது இந்த உம்மத்திற்கு கிடைக்கப்பெற்ற மிகப்பெரும் கிருபையாகும். மறுமையில் உயிர்தெழுப்படும் நாளில் எல்லா நபிமார்களை விடவும் அதிக அளவில் இருக்கும் இந்த உம்மத்துக்கு கிடைக்கப் பெற்ற ஒரு அரும் பாக்கியம் ஆகும்.
ஆனால் நாம் பெயரளவில் மட்டும் முஸ்லிமாக இருப்பதின் காரணமாக இறைவனின் இந்த அருள் நிறுத்தப்பட்டுவிடக் கூடாது. நபி (ஸல்) அவர்களின் தோழர்களின் காலத்தில் இஸ்லாம் எவ்வாறு வளர்ச்சியடைந்தது, எவ்வாறு மக்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்பதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.
இவ்வுலகின் பல்வேறு பாகங்களிலுள்ள மக்களிடம் அழகிய இஸ்லாமிய மார்க்கத்தை எத்திவைப்பதற்கு இந்த சமுதாய மக்கள் முயற்சி எடுக்க வேண்டும் என நாம் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம். மேலும் நாம் வழி தவறிவிடக் கூடாது என்றும் இறைவனிடம் இறைஞ்சுவோம். இந்த சிந்தனைகளை உங்களிடையே வைத்து அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் அவனது கருணையை புரிவானாக என்று கேட்டுக்கொள்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.