ஜனாஸா தொழுகை முறை
ஜனாஸா தொழுகையில் கலந்துக் கொள்வதின் சிறப்புகள்: –
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
“யார் ஜனாஸாவில் அதற்கு தொழுகை வைக்கப்படும் வரை கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு கிராத் அளவு நன்மை உண்டு. அடக்கம் செய்யப்படும் அளவிற்கு கலந்து கொள்பவருக்கு இரண்டு கிராத் நன்மை உண்டு” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இரண்டு கிராத் என்றால் என்ன? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது மிகப்பெரிய இரண்டு மலையளவு என்று பதில் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
ஜனாஸா தொழுகை முறை: –
1) பிற தொழுகைகளைப் போலவே ஜனாஸா தொழுகைக்கும் உடல், உடை சுத்தமாக இருத்தல், உளு செய்தல், ஜனாஸா தொழுகைக்காக நிய்யத்து செய்தல், கிப்லாவை முன்னோக்குதல் போன்றவைகள் முக்கியமானதாகும்.
2) மய்யித் ஆணாக இருந்தால் இமாம் அதனுடைய தலைக்கு அருகிலும், பெண்ணாக இருந்தால் இமாம் அதற்கு மத்தியிலும் நிற்பார்.
3) தொழக் கூடியவர்கள் இமாமின் பின்னால் நிற்க வேண்டும்.
4) ஜனாஸா தொழுகைக்கு இமாம் நான்கு தக்பீர் கூறுவார்.
5) முதல் தக்பீருக்குப் பிறகு, அவூது பிஸ்மியுடன் சூரத்துல் ஃபாத்திஹா ஓதவேண்டும்
6) இரண்டாவது தக்பீருக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓத வேண்டும். (ஸலவாத்து என்பது பிற தொழுகையில் அத்தஹிய்யாத்துக்குப் பிறகு நாம் ஓதக் கூடிய ஸலவாத்து ஆகும்)
7) மூன்றாவது தக்பீருக்குப் பிறகு மய்யித்துக்காக நாம் துஆச் செய்ய வேண்டும். (பார்க்கவும் : ஜனாஸா தொழுகையில் ஓதக்கூடிய துஆ).
8.) நான்காம் தக்பீருக்குப் பிறகு சிறிது நேரம் நின்று விட்டு வலது பக்கம் மட்டும் திரும்பி ஒரே ஒரு சலாம் கொடுக்க வேண்டும். (ஒரு சலாம் மட்டுமா அல்லது இரண்டு சலாம் கொடுக்க வேண்டுமா என்பதில் அறிஞர்களிடையில் கருத்து வேறுபாடு உள்ளது)