இஸ்லாம் விரும்பும் மென்மையும் அமைதியும்
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
அல்லாஹ் மென்மை மற்றும் அமைதியை விரும்புகிறான்: –
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் மென்மையானவன். எல்லாக் காரியங்களிலும் அவன் மென்மையை விரும்புகிறான்’. அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.
‘உம்மிடம் அல்லாஹ் விரும்பக் கூடிய இரு குணங்கள் உள்ளன. அவை மென்மையும், அமைதியுமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் அஷஜ்ஜூஅப்துல் கைஸ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.
நபி (ஸல்) அவர்களின் மென்மையைப் பாராட்டும் அல்லாஹ்: –
“அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்¢ (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்” (அல்-குர்ஆன் 3:159)
மென்மையான முறையில் இறைவழியில் அழைக்க வேண்டும்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (அல்-குர்ஆன் 16:125)
அழகுபடுத்தும் மென்மை!
‘மென்மை ஒரு காரியத்தில் இருந்தால் அதனை அது அழகு படுத்தும். ஒரு காரியத்திலிருந்து அது (மென்மை) எடுபட்டுவிட்டால் அது அதனைக் கெடுத்துவிடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.
மென்மையில்லையேல் நன்மையில்லை!
‘மென்மையை இழந்தவர் நன்மையையும் இழந்தவராவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.