நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்டவர்கள்
சூனியக்காரன், துறவி, சிறுவன் மற்றும் நெருப்புக்குண்டத்தில் வீசப்பட்டவர்களின் வரலாறு
முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-
“உங்களுக்கு முன்னால் வந்தவர்களில் ஒரு அரசனும் அவனுடைய மந்திரவாதியும் இருந்தனர். அந்த மந்திரவாதி வயது முதிர்ந்த போது அரசனிடம்,”நான் வயதானவனாகி விட்டேன்; என்னுடைய காலம் முடியபோகிறது; ஆகையால் ஒரு சிறுவனை அனுப்பினால் அவனுக்கு மந்திரத்தை கற்றுக் கொடுப்பேன்” என்று கூறினான். அவ்வாறே அரசனும் மந்திரவாதியிடம் ஒரு சிறுவனை அனுப்பினான்; மந்திரவாதியும் சூனியத்தை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான்.
எப்பொழுதெல்லாம் அந்த சிறுவன் மந்திரவாதியிடம் செல்கிறானோ அப்போதெல்லாம் வழியில் உள்ள ஒரு துறவியை சந்தித்து அவர் சொல்வதை கேட்டு அதில் கவரப்பட்டான். இவ்வாறு துறவியை தினமும் சந்தித்துவிட்டு பிறகு தாமதமாக மந்திரவாதியிடம் செல்வதால் அவர் அந்த சிறுவனை அடிக்கலானார். இதைப்பற்றி அந்த சிறுவன் துறவியிடம் கூறிய போது “நீ அந்த மந்திரவாதியைப் பற்றி பயப்படும்போதெல்லாம் ‘என் வீட்டார்கள் மூலம் எனக்கு அதிக வேலை தந்ததனால் தாமதமாகிவிட்டது’என்றும், உன்னுடைய வீட்டாரிடம் நீ பயப்படும்போதெல்லாம் ‘மந்திரவாதியால் தாமதமாகி விட்டது’ என்றும் சொல்லிவிடு” என்று கூறினார். இவ்வாறே அந்த சிறுவனும் சில நாட்கள் செய்து கொண்டு இருந்தான்.
ஒரு நாள் பெரிய விலங்கு ஒன்று பாதையில் அமர்ந்து கொண்டிருந்தது. மக்கள் அதை கடந்த செல்ல இயலாதிருந்தனர். அப்போது அந்த சிறுவன் இன்று அந்த மந்திரவாதி சிறந்தவரா அல்லது துறவி சிறந்தவரா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து, ஒரு கல்லை எடுத்து கூறினான், “இறைவனே மந்திரவாயின் செயல்களை விட துறவியின் செயல் உனக்கு விருப்பமானதாக இருந்தால் இந்த விலங்கை கொன்று விடு! இதன் மூலம் மக்கள் இந்த பாதையில் நடக்க ஏதுவாக இருக்கும்” (என்று கூறி) பிறகு கல்லால் எறிந்து அதை கொன்று விட்டான். மக்களும் அந்த பாதை வழியே கடந்து சென்றனர்.
அந்த சிறுவன் துறவியிடம் நடந்தவற்றை விளக்கிய போது அவர் “என்னுடைய மகனே! இன்று நீ என்னை விட சிறந்தவனாகிவிட்டாய்! நான் நினைத்ததை நீ அடைந்து விட்டாய்! நீ சோதனைக்கு உட்படுத்தப்படுவாய்! அப்படி சோதனைக்குள்ளாக்கப் படும் போது என்னைப் பற்றி அவர்களிடம் தெரியப்படுத்த வேண்டாம்” என்று கூறினார்.
அந்த சிறுவன் பிறவிக் குருடர்களையும் தொழுநோயாளிகளையும் மற்ற நோய்களையும் நிவர்த்தி செய்து வந்தான். அரசவையில் உள்ள ஒரு அறிஞர் குருடராக ஆகியிருந்தார். (அந்த சிறுவனைப் பற்றிக் கேள்வியுற்ற அவர்)அந்த சிறுவனுக்கு நிறைய அன்பளிப்புகளை கொண்டு வந்து “நீ என் நோயை குணப்படுத்துவதற்காக இந்த அன்பளிப்புகளை கொண்டு வந்தேன்” என்று கூறினார். பிறகு அந்த சிறுவன் “நான் யாரையும் குணப்படுத்துவதில்லை! அல்லாஹ்தான் மக்களை குணப்படுத்துகிறான்; ஆகையால் அல்லாஹ்வை நம்பி அவனிடம் பிரார்த்தனை செய்! அல்லாஹ் குணப்படுத்துவான்” என்று கூறினான். அவ்வாறே (அந்த குருடர்) அல்லாஹ்வை நம்பி பிரார்த்தனை செய்தபோது, அல்லாஹ் அவருடைய நோயை குணமாக்கினான்.
பின்னர் அந்த அறிஞர் அரசவைக்கு வந்து தாம் வழமையாக அமரும் இடத்தில் அமர்ந்த போது, “உனக்கு பார்வையை தந்தது யார்?” என்று (அரசன்) கேட்டான். “என்னுடைய இறைவன்” என்று (அவர்) சொன்ன போது, “இல்லை! நான் கொடுத்தேன்” என்று அரசன் கூறினான்.
பிறகு அந்த மனிதர், “இல்லை! என்னுடைய மற்றும் உன்னுடைய இறைவனாகிய அல்லாஹ்” என்று சொன்ன போது “என்னை தவிர வேறு இறைவன் இருக்கிறானா?” என்று அரசன் கேட்டான். பிறகு அந்த மனிதர் “ஆம் உன்னுடைய மற்றும் என்னுடைய இறைவன் அல்லாஹ்” என்று கூறினார். (பிறகு) அந்த அரசன், அந்த சிறுவனைப் பற்றிய உண்மையை சொல்லும் வரை அந்த மனிதரை சித்திரவதை செய்தான்.
ஆகையால் அந்த சிறுவன் அரசனுக்கு முன்னால் கொண்டு வரப்பட்டபோது அரசன் கேட்டான், “ஒ சிறுவனே! நீ பிறவிக் குருடர்களையும் தொழுநோய்க்காரர்களையும், மற்ற நோய்களையும் குணப்படுத்தும் அளவுக்கு மந்திரக்கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டாயா?” என்று கேட்டான். அந்த சிறுவன் “நான் யாரையும் குணப்படுத்தவில்லை; அல்லாஹ் தான் குணப்படுத்துகிறான்” என்று சொன்னான்.
அரசன் கேட்டான், ‘நான்?’. சிறுவன் பதிலளித்தான், ‘இல்லை! அல்லாஹ்.’
“என்னைத்தவிர வேறு இறைவன் உண்டா? என்று அரசன் கேட்ட போது, “என்னுடைய இறைவனும் உன்னுடைய இறைவனும் அல்லாஹ்” என்று (சிறுவன்) கூறினான்.
பிறகு துறவியைப்பற்றி சொல்லும்வரை அந்த சிறுவன் துன்புறுத்தப்பட்டான். பிறகு அந்த துறவி அரசன் முன்பு கொண்டு வரப்பட்டு அவருடைய மார்க்கத்தை விட்டு விடும்படி கட்டளை இடப்பட்டார். துறவி மறுத்தபோது ரம்பம் கொண்டுவரப்பட்டு துறவியின் தலை நடுவில் வைத்து இரண்டாக அறுக்கப்பட்டார்.
பிறகு அந்த குருடராயிருந்த அந்த அறிஞர் கொண்டு வரப்பட்டு அவருடைய மார்க்கத்தை விட்டு விடும்படி கட்டளை இடப்பட்டபோது அவரும் மறுத்துவிட்டார். அவருடைய தலையின் மையப் பகுதியில் ரம்பத்தை வைத்து இரண்டாக அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு விட்டார்.
பிறகு அந்த சிறுவன் கொண்டு வரப்பட்டு அவனிடம் அவனுடைய மார்க்கத்தை விட்டு விடும்படி கேட்ட போது அவனும் மறுத்துவிட்டான். ஆகையால் அரசன் அந்த சிறுவனை சிலருடன் இன்னின்ன மலை உச்சிக்கு அனுப்பினான். (அனுப்புவதற்கு முன்) அவர்களிடம் “அந்த சிறுவனுடன் மலை உச்சிக்கு ஏறுங்கள். உச்சியை அடைந்தவுடன், அந்த சிறுவன் தன்னுடைய மார்க்கத்தை விட்டுவிடுகிறானா என்று பாருங்கள்! இல்லையென்றால் மலை உச்சியிலிருந்து அவனை எறிந்து விடுங்கள்’ என்று கூறினான்.
அவ்வாறே அவர்கள் அந்த சிறுவனை மலை உச்சிக்கு எடுத்து சென்ற போது அந்த சிறுவன் தன் இறைவனிடம் “நீ விரும்பக்கூடிய எந்த வழியிலாவது என்னை காப்பாற்று” என்று கேட்டான். பிறகு அந்த மலை உலுக்கப்பட்டது. அவனுடன் வந்தவர்கள் இறந்து விட்டனர்.
அந்த சிறுவன் அரசனிடம் வந்தபோது “உன்னுடன் வந்தவர்களை என்ன செய்தாய்?” என்று கேட்டான். அந்த சிறுவன் “அல்லாஹ் அவர்களிடமிருந்து என்னை காப்பாற்றினான்” என்று (அந்த சிறுவன்) கூறினான்.
பிறகு சிலருடன் அந்த சிறுவனை ஒரு படகில் கடலில் நடுபகுதிக்கு அனுப்பி “அவனுடைய மார்க்கத்தை விட்டு விட கூறுங்கள்!! இல்லை எனில் கடலில் தள்ளி அவனை மூழ்கடித்துவிடுங்கள்” என்று கூறினான். அந்த சிறுவனை கடலுக்குள் எடுத்துச் சென்ற போது “ஓ இறைவனே இவர்களிடமிருந்து நீ விரும்பக்கூடிய எந்த வழியிலாவது என்னை காப்பாற்று” என்று வேண்டினான். அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்து விட்டனர்.
அந்த சிறுவன் அரசனிடம் வந்த போது “உன்னுடன் வந்தவர்கள் உன்னை என்ன செய்தார்கள்?” என்று அரசன் கேட்டான். “அல்லாஹ் அவர்களிடமிருந்து என்னை காப்பாற்றினான்” என்று (அந்த சிறுவன்) கூறினான்.
பிறகு அந்த சிறுவன் “நான் கூறுகிற வழியில் தவிர வேறு எந்த வழியிலும் உன்னால் என்னை கொல்ல முடியாது” என்று சொன்னான்.
“அது என்ன வழி?” என்று அரசன் கேட்டான்.
(அதற்கு அந்த சிறுவன்) “ஒரு உயர்ந்த இடத்தில் மக்களை ஒன்று சேர்த்து என்னை ஒரு மரத்தின் கிளையில் வைத்து கட்டிவிட்டு! என்னுடைய வில்லில் இருந்து ஒரு அம்பை எடுத்து, ”இந்த சிறுவனின் இறைவனாகிய அல்லாஹ்வின் பெயரால்’ என்று சொல்லி அம்பை எறிந்தால் நீ என்னைக் கொல்ல முடியும்” (என்று கூறினான்).
அரசனும் அவ்வாறே ஏற்பாடு செய்து அம்பை எடுத்து வில்லில் வைத்து “இந்த சிறுவனின் இறைவனாகிய அல்லாஹ்வின் பெயரால்” என்று சொல்லி எறிந்தான். அது அவனுடைய நெற்றிப் பொட்டில் பாய்ந்து அந்த சிறுவன் தன்னுடைய நெற்றி பொட்டில் காயத்தின் மீது கையை வைத்தவாறே இறந்து விட்டான்.
உடனே மக்கள் ‘நாங்கள் அந்த சிறுவனின் இறைவனின் மீது நம்பிக்கை கொள்கிறோம்’என்று பிரகடனப்படுத்தினார்கள். அந்த அரசனிடம் “நீ எதைப்பற்றி பயந்தாயோ அது நடந்துவிட்டது” என்றும் கூறப்பட்டது. இறைவன் மீது ஆணையாக அனைவருமே (அந்த சிறுவனின் இறைவனை) நம்பிக்கை கொண்டு விட்டனர்.
பிறகு அரசன் “ஒவ்வொரு பாதையின் நுழைவாயிலும் அகழியை வெட்டி அதில் நெருப்புகளை எரிய விடுங்கள்” என ஆணையிட்டான். அவ்வாறே செய்யப்பட்டது.பிறகு அந்த அரசன் யாரெல்லாம் அந்த சிறுவனின் மார்க்கத்தை விட்டு விடுகிறார்களோ அவர்களை விட்டுவிடுங்கள்; யாரெல்லாம் மறுத்து விடுகிறார்களோ அவர்களை நெருப்பில் எறிந்து விடுங்கள்” என்று கூறினான்.
அவ்வாறு அந்த மக்கள் நெருப்புக் குண்டத்தில் வேதனை செய்யப்பட்டு கரிக்கப்பட்ட போது,ஒரு தாய் தன் பால்குடி குழந்தையுடன் நெருப்பை அடைந்து அதில் விழ சிறிது தடுமாற்றமடைந்த போது அந்த கைக்குழந்தை “பொறுமையை கடைபிடி! நிச்சியமாக நீ உண்மையான மார்க்கத்தை பின்பற்றுகிறாய்!” என்று கூறியது.
இமாம் முஸ்லிம் அவர்களும் இதை தம்முடைய ஸஹீஹ் முஸ்லிமில் இந்த ஹதீஸை பதிவு செய்துள்ளார். முஹம்மது பின் இஸ்ஹாக் பின் யாசர் தம்முடைய நூலில் மேற் கூறப்பட்ட தகவலுக்கு சிறிது மாற்றமாக பதிவு செய்துள்ளார். இவர் தம்முடைய நூலில் கூறுகிறார்: –
அந்த சிறுவனின் மரணத்திற்குப் பிறகு நஜ்ரான் தேசத்து மக்கள் அந்த சிறுவனின் மார்க்கமான கிறிஸ்துவ மதத்தை பின்பற்ற ஆரம்பித்தனர். பின்னர் (அரசன்) து நுவாஸ் தம் படையினருடன் வந்து, அந்த மக்களை யூத மதத்திற்கு அழைத்தான்.
அவன் நீங்கள் யூத மதத்தை தழுவுங்கள் அல்லது கொல்லப்படுவீர்கள் என்று கூறி இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு கூறினான். அந்த மக்களோ மரணத்தை தேர்வு செய்தார்கள். எனவே அவன் நெருப்புக் குண்டம் வளர்த்து பலரை அதில் தள்ளி எரித்தும் மற்றும் பலரை தம் வாளுக்கு இரையாக்கியும் கொன்றொழித்தான். அவன் இவ்வாறு 20,000 மக்களை கொன்றதாக இந்த ஆசிரியர் கூறுகிறார்.
நெருப்புக் குண்டத்தில் போடப்பட்டு எரிக்கப்பட்ட மக்களைப் பற்றி அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே பின்வருமாறு கூறுகிறான்.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக, இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக, மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக, (நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர். விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்). அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது, முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான். நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் – அதுவே மாபெரும் பாக்கியமாகும். (அல்-குர்ஆன் 85:1-11)
ஆதாரம் : தப்ஸீர் இப்னு கதீர்.
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.