நாம் விரும்புபவற்றிலிருந்து தானம் செய்யாதவைரை…

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள்:

மதீனா (முஸ்லிம்களான) அன்சாரிகளிலேயே அபூ தல்ஹா (ஸைத் இப்னு ஸஹ்ல் (ரலி) அவர்கள் அதிகமான பேரிச்சந் தோட்டங்கள் உடையவராய் இருந்தார்கள். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரேயிருந்த ‘பீருஹா’ (அல்லது ‘பைருஹா’) எனும் தோட்டம் தம் சொத்துக்களிலேயே அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாயிருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , அந்த தோட்டத்திற்குச் சென்று அதிலுள்ள நல்ல(சுவையான) நீரைப் பருகும் வழக்கமுடையவராய் இருந்தார்கள்.

‘நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 03:92 வது) இறைவசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா(ரலி) எழுந்து நின்று,

‘இறைத்தூதர் அவர்களே! ‘நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்’ என அல்லாஹ் கூறினான். என் சொத்துகளில் எனக்கு மிகவும் விருப்பமானது ‘பீருஹா’ (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனிமேல்,) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். இதற்கான நன்மையையும் (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இது இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர் பார்க்கிறேன். எனவே, இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தங்களுக்குக் காட்டியுள்ள வழியில் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நல்லது. அது (அழிந்து) போய்விடும் செல்வம் தானே! (அழிந்து) போய்விடும் செல்வம் தானே! (அதைத் தர்மம் செய்து, மறுமைக்குச் சேமிப்பாக்கிக் கொள்வது நல்லதுதான்.)’ என்று சொல்லிவிட்டு, நீர் கூறியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அ(ந்தத் தோட்டத்)தை உம்முடைய நெருங்கிய உறவினர்களிடையே (தர்மமாக) வழங்குவதையே நான் (பெரிதும்) விரும்புகிறேன்’ என்றார்கள்.

அபூ தல்ஹா (ரலி), ‘அவ்வாறே செய்கிறேன் இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறிவிட்டுத் தம் உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் அந்தத் தோட்டத்தைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

ரவ்ஹ் இப்னு உபாதா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், (‘அது அழிந்துபோய்விடும் செல்வம்தானே!’ என்பதற்கு பதிலாக) ‘அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம் தானே’ என்று (நபிகளார் கூறினார்கள் என) இடம் பெற்றுள்ளது.   யஹ்யா இப்னு யஹ்யா (ரஹ்) கூறினார்:

நான் மாலிக்(ரஹ்) அவர்களிடம் ‘அது (அழிந்து) போய்விடும் செல்வம்தானே’ என்று வாசித்துக் காட்டினேன். (அவர்கள் அதை மறுக்கவில்லை.)

ஆதாரம்: புகாரி.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *