அடக்கஸ்தலங்களில் இருக்கும் பள்ளிவாசல்களில் தொழலாமா?
அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது.
பொதுவாக அடக்கஸ்தலங்களில் தொழுகை நடத்தவோ அல்லது அந்த இடங்களில் பள்ளிவாசல் கட்டுவதோ இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. கப்ருகள் இருக்கும் இடங்களில் பள்ளிகள் கட்டப்பட வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால் அங்கே இருக்கும் கப்ருகள் தோண்டியெடுக்கப்பட்டு அந்த கப்ரில் மீதமிருப்பவைகளை பொது மையமாவடிகளுக்கு எடுத்துச் சென்று அங்கே இருக்கும் மற்ற கப்ருகளோடு தனித்தனியாக புதைக்க வேண்டும்.
பள்ளிவாசல்களில் கப்ருகள் இருப்பதற்கு அனுமதியில்லை. அந்த கப்ரு எத்தகைய பெரிய மனிதருடையதாக இருந்தாலும் அல்லது எத்தகைய இறை நேசருடையதாக இருந்தாலும் சரியே!
ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் இதை தடை செய்திருப்பதோடு மட்டுமல்லாமல் எச்சரிக்கையும் செய்திருக்கிறார்கள். இவ்வாறு அடக்கஸ்தலங்களை பள்ளிவாசல்களாக மாற்றிய யூத கிறிஸ்தவர்களை சபித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
‘அல்லாஹ் யூத, கிறிஸ்தவர்களை சபிப்பானாக! அவர்கள் தங்களுடைய நபிமார்களுடைய கப்ருகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்’
‘அவர்கள் செய்த செயல்களுக்காக (நபி {ஸல்}) அவர்கள் எச்சரித்தார்கள்’ என ஆயிஷா (ரலி) கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
“உம்மு ஸலமா (ரலி) மற்றும் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் உருவப் படங்கள் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தைப் பற்றி தெரிவித்தபோது, நபி (ஸல்) அவர்கள், ‘அவர்களில் உள்ள ஒரு நல்ல மனிதர் இறந்துவிடும் போது அவருடைய கப்ரின் மீது ஒரு வணக்கஸ்தலத்தை (மஸ்ஜிதை) நிறுவி அதிலே அந்த உருவங்களை வரைந்துவிடுவார்கள். அல்லாஹ்விடத்தில் இவர்கள் தான் மிகவும் மோசமான மனிதர்கள்” ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் மற்றும் புகாரி.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
“உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள், தங்கள் நபிமார்களின் கப்ருகளையும், நல்லடியார்களின் கப்ருகளையும் வணங்குமிடமாக ஆக்கிவிட்டனர். அறிந்து கொள்க! கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிவிடாதீர்கள்! அதை நான் தடுக்கிறேன்” அறிவிப்பவர் : அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி), நூல் : முஸ்லிம்.
எனவே, அடக்கஸ்தலங்களை பள்ளிவாசல்களாக ஆக்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பதோடு அவ்வாறு செய்பவர்களைச் சபித்தும் இருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து நாம் அறிய முடிகிறது. மேலும் அடக்கஸ்தலம் உள்ள ஒரு பள்ளிவாசலில் தொழும் போது, ஷைத்தான் அங்கே அடக்கமாகி இருக்கும் இறைநேசரை அழைத்து உதவிதேடுமாறு தூண்டுவான். இது இணை வைத்தல் என்ற மகா கொடிய பாவமாகும். இது தான் யூத, கிறிஸ்தவர்களின் செயலாகும்.
ஆகையால் நாம் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டு கப்ருகள் இருக்கும் இடத்தில் பள்ளிவாசல்கள் கட்டுவதை தவிர்ப்பதோடல்லாமல் இதை செய்பவர்களுக்கும் அறிவுரை கூறி அவர்கள் அவ்வாறு செய்வதை விட்டும் தடுத்திட முயற்சிக்க வேண்டும். இல்லையேல் நாமாவாது அத்தகைய தீமையிலிருந்து தவிர்ந்து இருக்கவேண்டும். இதுவே நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதும் அல்லாஹ்வின் சாபத்திலிருந்து தவிர்ந்துக் கொள்வதும் ஆகும்.
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.