இறைகட்டளைகள் அனைத்தும் வணக்கமாகும்
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
அல்லாஹ் கூறுகிறான்:
மனிதர்களே! உங்களுடைய இரட்சகனை நீங்கள் வணங்குங்கள்! (அல்-குர்ஆன் 2:21)
வணக்கம் என்றால் என்ன என்று நம்மில் பலரைக் கேட்டால் கிடைக்கும் பதில் என்னவென்றால் தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் செய்வது என பதில் வரும்.
வணக்கம் என்பது இவைகள் மட்டுமல்ல! அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்கள் இட்ட கட்டளைகள் அனைத்தும் வணக்கமாகும்.
இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் வணக்கம் என்பதற்கு விளக்கமளிக்கையில், ‘மனிதன் என்ன நோக்கங்களை முன் வைத்து படைக்கப்பட்டானோ அவையனைத்தும் வணக்கங்களாகும்’ என சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறினார்கள்.
அந்த வகையில் வணக்கம் என்பது மேற் கூறப்பட்ட இஸ்லாமியக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் போன்ற கிரியைகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி மனிதனின் வாழ்க்கையில் அன்றாடம் கடைபிடித்து ஒழுகும் அனைத்து செயல்களையும் உள்ளடக்கியது ஆகும்.
ஒருவனின் நற்குணங்கள் அனைத்தும் வணக்கமாகும்!
ஒருவரிடம் காணப்படும் நற்குணங்களான உண்மை பேசுதல், அமானிதத்தை ஒப்படைத்தல், பெற்றோர் மற்றும் உறவினரைப் பேணி வாழ்தல், வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், ஆகியவை அனைத்தும் வணக்கத்தில் உட்பட்டவைகளே ஆகும்.
மேலும் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல், அனாதைகளை ஆதரிப்பதும், ஏழைகள் மற்றும் வழிப்போக்கர்களுக்கு உதவுவதும், அண்டை வீட்டாரை உபசரிப்பதும், பிற உயிரினங்களிடம் பரிவு காட்டுவதும், வணக்கங்களாகும்.
வணக்கங்களை அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும்!
அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டிய வணக்கங்களான குர்பானி, நேர்ச்சை, பிரார்த்தனை செய்தல், மன்றாடுதல், ஆதரவு வைத்தல், தவக்குல் வைத்தல், அழைத்து உதவி தேடுதல், பாதுகாவல் தேடுதல் போன்றவைகளை இறைவனைத் தவிர்த்து வேறு யாரிடமும் செய்யாதிருப்பதும் வணக்கமாகும். இறைவனல்லாத பிறரிடம் இத்தகையை செயல்களைச் செய்யும் போது அவைகள் இணைவைத்தல் என்னும் மன்னிக்கப்படாத மாபெரும் பாவமாகும்.
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு வாழ்வதும் வணக்கமாகும்!
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிப்பது மற்றும் அவர்கள் இட்ட கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்வதும் வணக்கமாகும். மேலும் இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுதல், அவனுக்கு நன்றி செலுத்துதல், அல்லாஹ்வின் கலா கத்ரை பொருந்திக் கொண்டு இன்ப, துன்ப நேரங்களில் பொருமையைக் காத்தல், சகல காரியங்களையும் அவனிடமே ஒப்படைத்தல், அவனது அன்பையும் அருளையும் ஆதரவு வைத்து அவனது தண்டனைகளுக்கு அஞ்சி வாழ்தல் ஆகிய இவைகள் அனைத்தும் வணக்கங்களைச் சார்ந்தது ஆகும்.
சுருக்கமாக கூற வேண்டுமென்றால் வணக்கம் என்பது அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்கள் ஏவியவற்றை செய்வதும் அவர்கள் தடுத்தவைகளை விட்டும் விலகியிருப்பதும் ஆகும். ஆகவே நம் மேற்கண்ட அடிப்படையில் நாம் அன்றாட வாழ்வில் செய்யும் அனைத்துக் காரியங்களையும் அல்லாஹ்வுக்காகவே என்ற அடிப்படையில் அமைத்துக் கொண்டோமேயானால் அவைகளும் வணக்கமாகும் என்பதை அறிய முடிகிறது.
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்!