சந்தோசம் மற்றும் மன அமைதியைத் தேடி
நான் பல கோடிகளுக்கு அதிபதி! பல நிறுவனங்களின் உரிமையாளர்! ஆனால் எனக்கு வாழ்விலே கொஞ்சமும் நிம்மதியில்லை!
என்னிடம் பலவித சொகுசு பங்களாக்களும் சொகுசு மெத்தைகளும் இருக்கின்றன! ஆனால் நான் இரவில் நிம்மதியாக தூங்கி பல நாட்கள் ஆகின்றன!
இப்படியாக பலரின் வேதனைக் குரல்கள்! மனிதர்கள் எங்கெல்லாம் அலைந்து திரிந்து தங்களுக்கு மன அமைதியும் சந்தோசமும் கிடைக்காதா என்று ஏங்குகின்றனர்.
ஒருவனுக்கு சந்தோசமும் மன அமைதியும் பொருளாதார வசதியினால் மட்டும் கிடைத்துவிடுவதில்லை.
பொருளாதாரம் தான் சந்தோசத்தைத் தரும் என்றால், பலர் பல கோடிகளுக்கு சொந்தக்காரர்களாகயிருந்தும் வாழ்வில் ஏன் நிம்மதியிழந்து மனோதத்துவ மேதைகளை நாடுகின்றனர்?
வாழ்க்கை வசதியும் பேரும் புகழும் தான் ஒருவருக்கு மன அமைதியைத் தரும் என்றிருந்தால், தம் மனம் போனபோக்கில் வாழ்ந்து தாமும் சீரழிந்து மற்றவர்களையும் சீரழிக்கின்ற நடிகர் நடிகைகளில் சிலர் ஏன் வாழ்க்கையை வெறுத்து இவ்வுலகில் வாழ்வதற்கு பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்?
முந்தைய நாள் வரை தங்களின் மனோ இச்சைகளை தங்களின் கடவுளாக நினைத்து அதற்கு வழிபட்டு வாழ்ந்தவர்கள் மறுநாள் துறவிகளாகவும் சன்னியாசிகளாகவும் மாறி அமைதியும் சந்தோசமும் அதிலாவது கிடைக்காதா என்று ஏன் தேடி அலைகின்றனர்?
இவைகள் நிதர்சனமான ஒரு பேருண்மையை விளக்குகின்றது. ஒருவன் எவ்வளவு தான் செல்வ செழிப்பும், பேரும் புகழும் உடையவனாக இருந்தாலும் அவைகள் அவனுக்கு அவன் விரும்புகின்ற உண்மையான சந்தோசத்தையும் நிம்மதியையும் தந்து விடுவதில்லை!
அப்படியானால் ஒருவனுக்கு சந்தோசமும் மன அமைதியும் எங்கு தான் கிடைக்கும்?
அமைதியையும் உண்மையான சந்தோசத்தையும் தேடி அலைபவர்கள் ஒன்றுமேயில்லாதவர்களாக இருந்த தம்மை படைத்து இந்த அளவிற்கு ஆளாக்கிய அந்த படைப்பாளனின் வழிகாட்டுதல்களை ஏனோ பார்க்க தவறி விடுகின்றனர்.
ஆமாம் சகோதர சகோதரிகளே! உண்மையான சந்தோசத்திற்காகவும் நிம்மதியான வாழ்விற்காகவும் மன அமைதியைத் தேடியும் நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை என்று இஸ்லாம் இதற்கான அழகிய தீர்வைத் தருகிறது.
இந்த பேரண்டத்தையும் மற்றும் அதிலுள்ளவைகளையும் தன்னையும் படைத்த அந்த பேரருளாளனாகிய படைப்பாளனிடம் ஒருவர் தன்னை முழுமையாக ஒப்படைத்து அவன் இட்ட கட்டளைகளுக்கு முற்றிலுமாக அடிபணிந்து நடந்தால் இன்ஷா அல்லாஹ் அவர் உண்மையான சந்தோசத்தையும் மன அமைதியையும் பெறுவார் என்று இஸ்லாம் மகவும் எளிமையான வழியைக் காட்டுகிறது!
இந்தப் பேரண்டத்தின் ஒரே அதிபதியாகிய அல்லாஹ் அகில உலக மாந்தர்களுக்கெல்லாம் வழிகாட்ட அவனது சத்தியத் திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளிய அவனது இறுதி வேதத்தில் கூறுகிறான்: –
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (அல்-குர்ஆன் 13:28)
இதற்கு மாறாக ஒருவர் இறைவனின் வழிகாட்டுதல்களை விட்டும் தவிர்ந்து வாழ முற்படுவாரானால் நிச்சயமாக அவர் உண்மையான சந்தோசத்தையும் மன அமைதியையும் இவ்வுலகில் பெறமுடியாது. வெளிபார்வைக்கு அவர் சந்தோசமான வாழ்க்கையை அனுபவிப்பதாக பிறருக்கு தோற்றமளித்தாலும் உண்மையில் அவருக்கு பலவித மன உளைச்சல்களும் நெருக்கடிகளும் இருந்துக்கொண்டேயிருக்கும்.
அல்லாஹ் கூறுகிறான்: –
‘எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்’ என்று கூறினான். (அல்-குர்ஆன் 20:124)
இறைவனின் இந்த பேருண்மையை மேற் கூறிய உதாரணங்களில் இருந்தே அறியலாம்!