முஃமின்களுக்கும் முனாஃபிக்குகளுக்கும் மறுமையில் நடக்கும் உரையாடல்
“முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:),
“இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் – இது தான் மகத்தான வெற்றியாகும்” (என்று கூறப்படும்).
முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி:
“எங்களை கவனியுங்கள்; உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்”
என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக); அவர்களுக்குக் கூறப்படும்:
“உங்களுக்குப் பின்னால், திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்”
பிறகு, அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும்! அதற்கு ஒரு வாயில் இருக்கும்; அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும்; ஆனால் அதன் வெளிப்புறத்தில் – (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்.
இவர்கள் (முஃமின்களைப் பார்த்து),
“நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று (அந்த முனாஃபிக்குகள்) சப்தமிட்டுக் கூறுவார்கள்;
“மெய்தான்; எனினும் நீங்களே உங்களைச் சோதனையிலாழ்த்தி விட்டீர்கள்; (எங்கள் அழிவை) நீங்கள் எதிர் பார்த்தீர்கள்; (இந்நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள்; அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் (உங்களுடைய வீண் ஆசைகள் உங்களை மயக்கி விட்டன; அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தா)ன், அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்” என்றும் (முஃமின்கள்) கூறுவார்கள்.
“ஆகவே, இன்று உங்களிடமிருந்தோ நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குரிய வேதனைக்குப் பதிலாக) எந்த வகையான நஷ்ட ஈடும் வாங்கப்பட மாட்டாது; உங்களுடைய தங்குமிடம் நரகம் தான்; அதுதான் உங்களுக்குத் துணை – அதுவோ சென்றடையும் இடங்களிலெல்லாம் மிகக் கெட்டதாகும்” (என்றுங் கூறப்படும்).
ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் – முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம்; (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன; அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக ஆகிவிட்டனர்.
அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பூமியை அதன் இறப்பிற்குப்பின், உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் இவ்வசனங்களை உங்களுக்கு தெளிவாக விவரிக்கிறோம். (அல்-குர்ஆன்57:12-17)