இஸ்லாத்தின் பார்வையில் அநீதி, அபகரித்தல், மோசடி
அளவு நிறுவை மோசடி குறித்து அல்-குர்ஆன்!
“அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? (அல்-குர்ஆன் 83:1-4)
“மேலும், வானம் – அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்” (அல்-குர்ஆன் 55:7-9)
வியாபாரத்தில் ஏமாற்றினால் அதை முறித்துக் கொள்வதற்கு உரிமை உண்டு!
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள் : “ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபி(ஸல்) அவர்கள். ‘நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால் ‘ஏமாற்றுதல் இருக்கக் கூடாது!” என்று கூறிவிடுவீராக! (ஏமாற்றியது தெரியவந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு!)” என்றார்கள். (ஆதாரம் : புகாரி)
ஒரு முஸ்லிம் அநீதி இழைக்கமாட்டான்!
“ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றன” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), ஆதாரம் : புகாரி.
அக்கிரமக்கார சகோதரனுக்கும் உதவி செய்!
“(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், ‘உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்” என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘அவனுடைய கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ்(ரலி), ஆதாரம் : புகாரி.
அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்!
“அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம் : புகாரி.
அநீதி இழைக்கப்பட்டவர்களிடம் நஷ்ட ஈட்டைக் கொடுத்து அவர்களின் மன்னிப்பைப் பெறுங்கள்! இல்லையேல் மறுமையில் உங்களின் நற்செயல்கள் அவர்களுக்குப் போய்விடும்!
“ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்” ‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.
பிறர் நிலங்களை அபகரித்தவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் தண்டணை!
அபூ ஸலமா(ரலி) அறிவித்தார்கள் : “எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்” என்று கூறினார்கள்.
ஒருவர் விபச்சாரம், மது அருந்துதல், திருடுதல், பிறர் பொருளை அபகரித்தல் போன்ற செயல்களைச் செய்யும் போது முஃமினாக இருப்பதில்லை!
“விபசாரி, விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் விபசாரம் புரிவதில்லை. மேலும், ஒருவன் மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகிற பொழுது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, (பிறரின் பொருளை அபகரித்துக்) கொள்ளையடிக்கும்போது இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் கொள்ளையடிப்பதில்லை” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி).
அபூ அப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: “இறைநம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் இச்செயல்களை ஒருவன் செய்வதில்லை என்பதன் கருத்து, ‘இவற்றைச் செய்யும் நேரத்தில் இவற்றைச் செய்பவனிடமிருந்து ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒளி நீக்கப்பட்டுவிடுகிறது’ என்பதாகும்”. ஆதாரம் : புகாரி.