பாவம் என்று தெரிந்தே செய்தால் பாவமன்னிப்பு கிடைக்குமா?
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
ஒருவருக்கு அல்லாஹ்வுடைய சட்ட திட்டங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்பதனால் அவர் பாவமான காரியங்களை செய்யலாம் என்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. அதாவது ஒரு காரியம் பாவமானது என்றோ அல்லது அந்த காரியம் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என்று முன்பே தனக்கு தெரியாது என்று ஒருவர் கூறுவதினாலோ அந்த பாவமான செயல் அவருக்கு அனுமதியளிக்கப்பட்டதாகாது. ஏனெனில், மார்க்க கல்வியைத் தேடி, கற்று அதன்படி நடக்க வேண்டியது முஃமினான ஆண் பெண் அனைவர் மீதும் கடமையாக இருக்கிறது.
முஃமினான ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ஒரு பாவமான செயலைச் செய்து விட்டு பின்னர் மனம் திருந்தியவராக தான் செய்த தவறான செயல்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரவில்லையென்றால் தவிர்க்க முடியாத அந்த நியாயத் தீர்ப்பு நாளில் அந்த செயல்களுக்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: –
“தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.
அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது” (அல்-குர்ஆன் 3:135-136)
“நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 6:54)
ஒரு முஃமின் எவ்வளவு தான் பாவங்கள் செய்தவராகயிருப்பினும் அவர் முற்றிலும் மனம் திருந்தியவராக தாம் செய்த பாவமான செயல்களுக்காக வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் அவருடைய எல்லா பாவங்களையும் மன்னித்து விடுவதாக அவனடைய திருமறையில் வாக்களித்திருக்கிறான். அளவற்ற அருளாளனும் கருணையாளனுமான அல்லாஹ் அவ்வாறு பாவமன்னிப்பு கோருபவருடைய பாவங்களை மன்னிப்பதோடல்லாமல் அந்தப் பாவங்களை நன்மையாக மாற்றி விடுகிறான்.
ஒருவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரும்போது பின்வருபவற்றை கடைப்பிடிக்க வேண்டும்:
-
தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொண்டு மனம் திருந்தி வருந்த வேண்டும்.
-
இந்த பாவமான காரியத்தை மீண்டும் செய்யமாட்டேன் என்று அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுக்கவேண்டும்.
-
அவருக்கு மரணம் வருமுன் அல்லாஹ்விடம் சரணடைந்து பாவமன்னிப்பு கோரவேண்டும்.
-
பின்னர் ஒரு உண்மையான முஃமினாக வாழ்ந்து நற்கருமங்களை செய்து வரவேண்டும்.
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அத்தியாயம் 39, வசனங்கள் 53-54 ல் கூறுகிறான்: –
‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
எனவே நான் பாவங்கள் அதிகம் செய்த பாவியாக இருக்கிறேன் என்று பாவத்திலேயே மீண்டும் மூழ்கியிருக்காமல் உடனடியாக இந்த பாவச் செயல்களிலிருந்து மீண்டு, இந்த பாவச் செயல்களை திரும்பவும் செய்ய மாட்டேன் என்ற உறுதியுடன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்: –
“இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் ‘ஸலாம்’ (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.
இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.
‘எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்’ என்று கூறுவார்கள். நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.
இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள். அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும். கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.
ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்” (அல்-குர்ஆன் 6:63-71)