சமுதாய ஒற்றுமைக்கு பாடுபடுவோம்
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் களம் (2009) சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகள் தங்களுக்குள்ள மக்களின் செல்வாக்கை கோடிகளில் பேரம் பேசி அரசியல் சூதாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.
ஆனால் காலம் காலமாக அரசியல் சூதாடிகளால் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்.
முஸ்லிம்களின் நெஞ்சிலே நேரடியாகக் குத்தும் தலைவரையுடைய ஒரு அரசியல் கட்சி; ‘முஸ்லிம்களை எங்களின் நெஞ்சிலே சுமந்திருக்கிறோம்’ என்று கூறிவிட்டு பிறகு நமது சமுதாய மக்களின் முதுகில் குத்தும் தலைவரையுடைய மற்றொரு மற்றொரு அரசியல் கட்சி.
அனைத்து சமுதாய மக்களை விடவும் கீழ் நிலையிலுள்ள இந்த முஸ்லிம் சமுதாயத்தை இவர்களில் எவராவது தூக்கி விடமாட்டார்களா என்ற நப்பாசையில் இந்த கட்சிகளை மாறி மாறி ஆதரித்துவந்த நமது சமுதாய மக்கள் இம்முறை இவ்விரு கட்சிகளினாலுமே மிக கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கு காரணம், அற்பக் காரணங்களுக்காகவும், சில கொள்கை வேறுபாடுகளுக்காகவும், சமுதாயத்தின் மீதுள்ள அக்ரையைவிட தாம் சார்ந்திருக்கும் இயக்கத்தின் மீதுள்ள அதீத பற்றின் காரணமாக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அரசியல் அநாதைகளான இந்த முஸ்லிம் சமுதாய மக்களின் ஒரு பிரிவினர் வேறு வழியில்லாமல் தம்மை ஆதரித்து விடுவார்கள் என்ற அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும். இதை நமது சமுதாயமும் முன்சென்ற தேர்தல்களில் நிரூபித்திருக்கின்றது. இந்த தேர்தலிலும் அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
– முஸ்லிம்களின் இந்த ஒற்றுமையின்மையே அவர்களுக்கு இந்த நம்பிக்கையைத் தந்து முஸ்லிம்களை கேவலமாக நினைத்து அவர்களை ஒதுக்கித்தள்ள துணிய வைத்தது
– முஸ்லிம்களின் இந்தப் பிரிவினையே காலங்காலமாக நம்மை அரசியல் அநாதைகளாக்கியது!
– அற்ப சில காரணங்களுக்காக கேவலமாக அடித்துக் கொள்ளும் இந்த தன்மையே பிற சாதியியக்கங்களை விட பன்மடங்கு அதிகமாக இருக்கும் நாம் அந்த சாதி இயக்கங்களை விட கேவலமான நிலைக்குத் தள்ளப்பட காரணமாக அமைந்தது!
– நம்மவர் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள பொறாமை மற்றும் காழ்ப்புணர்வுகளே, ‘வேண்டுமானால் ஒரு சீட் தருகிறோம்! அதுவும் எங்கள் சின்னத்தில் நிற்க வேண்டும்’ என்று கூறும் துணிவைத் அவர்களுக்குத் தந்தது.
சுயநலமும், பதவி வெறியும், அற்ப உலகாசைகளையும் கொண்ட தலைவர்கள் திருந்தினார்களோ இல்லையோ, ‘குனிய குனியத் தான் குட்டுப்படுவோம்’ என்பதை உணர்ந்துக் கொண்ட இஸ்லாமிய சமுதாய மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். இதைப் பார்க்கும் போது சந்தோஷமாகயிருப்பினும் இன்றளவும் சுயநலம், காழ்புணர்வு, சமுதாய நலனை விட சொந்த நலனில் அக்கரையுள்ள சிலர் சமுதாயத்தைக் கூறு போட நினைப்பதை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. இந்த சமுதாயம் ஒன்றுபட வாய்ப்பே இல்லையா? என்று ஏங்குகிறது மனம்.
என தருமை இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! அண்ணன் தம்பிகள், மாமன் மச்சான்களாக வாழ்ந்த நம்மடையே பிரிவுகள் பல ஏற்பட்டிருப்பினும், நாம் அனைவரும் நம்முடைய இறைவனாக அல்லாஹ்வையும், இறுதி தூதராக முஹம்மது (ஸல்) அவர்களையும், புனித வேதமாக திருக்குர்ஆனையும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டிருக்கின்றோம் அல்லவா?
நாம் ஒன்றுபட இதுவே சரியான தருணம்! நமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருப்பது என்பது உண்மை தான்! ஆனால் இவைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் பொதுவான மற்றும் நாம் அனைவரும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை புரிந்துக் கொள்வதில் ஏற்பட்டிருக்கின்ற தடுமாற்றங்களினால் வந்த சகோதர கருத்து வேறுபாடுகளேயன்றி வேறில்லை என்பதை நாம் உணர வேண்டும். இவைகள் அனைத்தும் முஸ்லிம்களுக்குள் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டிய உள் விவகாரங்களாகும். நாம் எக்காரணத்தை முன்னிட்டும் இந்த புரிந்துக் கொள்வதில் ஏற்பட்டிருக்கின்ற கருத்து வேறுபாடுகளின் காரணமாக நாம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதன் மூலம் “முஸ்லிம்கள்” என்று சொல்லப்படக் கூடிய நம் அனைவர்களையும் ஒட்டுமொத்தமாக வேரறுக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பாசிச சக்திகளுக்கு உதவும் வகையில் பிரிந்து விடக்கூடாது.
நம் சகோதர முஸ்லிம்களும் அல்-குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றி உண்மையான முஸ்லிம்களாக வாழவேண்டும் என்று நாம் ஆசைப்படுவதில் தவறில்லை தான். மேலும் இது உண்மையான ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கவேண்டிய பண்பும் கூட என்பதை நாம் அறிவோம். அவர்கள் நமது கருத்துக்கு ஒத்துவரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஏக இறைவனையும், இறுதி தூதரையும், இறுதி வேதத்தையும் நிரகாரிப்பவர்களோடு சேர்ந்துக் கொண்டு நமது இஸ்லாமிய சகோதரர்களையே எதிர்ப்பது என்பது எவ்வகையில் நியாயம் என்பதை சற்று நடுநிலையுடன் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நம் சகோதரர்கள் ‘நம் இயக்கத்தை ஆதரிக்கவில்லை’ என்ற ஒரே காரணத்திற்காக இறை நிராகரிப்பாளர்களுக்கு ஆதரவாக நம் சகோதரர்களுக்கு எதிராக செயல்படுவது என்பது எவ்வகையில் நியாயம்?
வேதக்காரர்களிடம் கூட ‘வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்’ (அல்-குர்ஆன் 3:64)’ என்ற அடிப்படையில் ஒற்றுமைக்கு வலியுறுத்தும் மார்க்கத்தையுடைய நாம் நமக்குள் பிரிந்துக் கொண்டு சண்டையிட்டுக் கொள்வது எவ்வகையில் நியாயம் என்பதை சற்று நிதானமாக சிந்திக்கக் கடமைபட்டுள்ளோம்.
எனவே என தருமை சகோதர, சகோதரிகளே! இத்தனை நாள் அரசியல் அநாதைகளாய் நாம் வாழ்ந்தது போதும்! இரக்கப்பட்டு பிச்சை போடுவது போன்று அவர்கள் தருகின்ற ஒரு சில இடங்களுக்காக அருகதையற்ற அரசியல்வாதிகளின் காலைக் கழுவும் பழக்கத்தை கைவிட்டுவிட்டு சமுதாயத்தின் நலன்கருதி வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்தை தூக்கி நிறுத்துவதற்காக நாம் ஓரணியில் திரளவேண்டிய அவசியமான காலக்கட்டம் இது.
இந்திய மண்ணிலே முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிய விரும்பி பற்பல சதிவேலைகளைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் பாசிச சக்திகளுக்கிடையிலும் பல பிரிவுகள் இருந்தாலும் அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் ஒன்றுள்ளது. ஆம் அது தான் தேர்தல் நேரத்தின் போது அந்த பாசிச சக்திகள் ஒன்று பட்டு அவர்களின் அரசியல் பிரிவுக்கு ஆதரவளிப்பது ஆகும்.
அது போல் நாமும் நம்முடைய கருத்து வேற்றுமைகளை எல்லாம் நமக்குள் பேசி தீர்த்துக் கொள்வோம்! பிறரிடம் நமது சமுதாயத்தை அடகு வைக்கமாட்டோம்! என்ற எண்ணத்தில் ஒன்றுபட்டு நமது பொது எதிரிகளை எதிர்கொள்ள முன்வர வேண்டும். இன்ஷா அல்லாஹ் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் நமக்குள் இருக்கும் இந்த கருத்து வேறுபாடுகள் இறைவனருளால் சுமூகமாக தீர்கப்பட்டு விடும் என்று இறைவனின் மேல் ஆதரவு வைத்து உறுதியாக நம்புவோம்.
தற்போது நமது ஒற்றுமையின் வலிமையை நிரூபிப்பதற்காக இன்று நம்மடையே வந்திருக்கும் தேர்தல் என்னும் இந்த வாய்ப்பை இன்ஷா அல்லாஹ் நாம் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வோம். முஸ்லிம்களாகிய நம் அனைவரையும் அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பொது எதிரிகளைத் தாக்குப்பிடிப்பதற்காகவும், நம் நெஞ்சில் மற்றும் முதுகுகளில் குத்தும் இயக்கங்களுக்கு சரியான பாடம் புகட்டுவதற்காகவும், ஒரு சீட்டுக்காக அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்த காலம் போய் அவர்கள் நம் ஆதரவை வேண்டி நம் கதவை தட்டுவதற்காகவும் நாம் அவசியம் ஒன்றுபட்டே ஆக வேண்டும்.
சமுதாயத்தில் அக்கரையுள்ள முஸ்லிம்கள் அனைவரும் நம்முடைய முஸ்லிம்களுக்குள் பிரிவுகள் ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியமாகும். சில தவறான வழிகாட்டுதல்களினால் பிரிந்து செல்லும் சகோதரர்களை வன்மையாக கண்டிக்காமல் அவர்களுக்கு நல்ல முறையில் சமுதாய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி அவர்களையும் ஓரணியில் திரட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும். அவர்கள் நம்மை வசைபாடும் போது நாமும் அவர்களை வசைபாடுவோமேயானால் நமக்குள் சன்டைகள் பெரிதாகுமேயல்லாது அது பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. சமுதாய அக்கரையுள்ள, சேவை மனப்பாண்மையுள்ள தலைவர்கள் இதற்காகப் பாடுபட்டு உழைக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் நமது சமுதாயம் மிகப் பெரிய எழுச்சியைப் பெறும்!
எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்குரிய ஆற்றல்களை நமக்குத் தந்தருள்வானாகவும்.