மறுமையில் சுவர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் உரையாடல்
அகில உலகங்களின் ஏக இறைவனாகிய அல்லாஹ் தன்னுடைய இறுதி வேதத்திலே கூறுகிறான்: –
“ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள். ஆனால் எவர் நம் வசனங்களை பொய்ப்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்களோ அவர்கள் நரகவாசிகளேயாவார்கள் – அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள். எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்;
நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது,
(அவ்வான தூதர்கள்) “அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?” எனக் கேட்பார்கள்;
(அதற்கு) “அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்” என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக – இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.
(அல்லாஹ்) கூறுவான்: “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்”
ஒவ்வொரு கூட்டத்தாரும், நரகத்தில் நுழையும்போதெல்லாம், (தங்களுக்கு முன், அங்கு வந்துள்ள) தம் இனத்தாரைச் சபிப்பார்கள்; அவர்கள் யாவரும் நரகத்தையடைந்து விட்ட பின்னர், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப்பற்றி,
“எங்கள் இறைவனே! இவர்கள் தான் எங்களை வழி கெடுத்தார்கள்; ஆதலால் இவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு வேதனையைக் கொடு” என்று சொல்வார்கள்.
அவன் கூறுவான்: “உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு (வேதனை) உண்டு – ஆனால் நீங்கள் அதை அறியமாட்டீர்கள்”
அவர்களில் முன் வந்தவர்கள், பின் வந்தவர்களை நோக்கி,
“எங்களைவிட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது, ஆதலால் நீங்களாகவே சம்பாதித்துக் கொண்ட (தீ) வினையின் காரணமாக நீங்களும் (இருமடங்கு) வேதனையை அனுபவியுங்கள்” என்று கூறுவார்கள்.
“எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா – மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் – இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு – இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ – எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்; அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள் – அவர்கள் அதிலேயே என்றென்றும் தங்கியிருப்பார்கள். தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்:
“இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் – நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்”
(இதற்கு பதிலாக, “பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்.
“சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து,
“எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உண்மையாகவும் பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்பார்கள்.
அதற்கு அவர்கள்,
“ஆம் (பெற்றுக் கொண்டோம்” என்பார்கள்.
அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர்,
“அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!” என்று அறிவிப்பார்.
(ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் (நேர்)வழியைவிட்டு (மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவும் விரும்பினர்; மேலும் அவர்கள் மறுமையையும் (நம்பாது) மறுத்தனர். (நரகவாசிகள், சுவர்க்க வாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அநேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரக வாசிகள், சுவர்க்க வாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து,
“ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!)”
என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை – அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள். அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள்,
“எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே” என்று கூறுவார்கள்.
சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை – அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு – அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்:
“நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!”
“அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,)
“நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” என்றும் கூறுவார்கள்.
நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து,
“தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்” எனக் கேட்பார்கள்;
அதற்கு அவர்கள்:
“நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்” என்று கூறுவார்கள்.
(இறைவன் மேலும் கூறுகிறான்: -)
(ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது; எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.
நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தை கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது. இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) இறுதியையன்றி வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா?
அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது, இதற்குமுன் அதனை முற்றிலும் மறந்திருந்த இவர்கள்,
“நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்திய(வேத)த்தையே கொண்டு வந்தனர், எங்களுக்குப் பரிந்து பேசக்கூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அப்படியாயின், நாங்கள் முன்செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டு வேறு (நன்மைகளையே) செய்வோம்” என்று கூறுவார்கள்
– நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்கள், அவர்கள் கற்பனை செய்து வந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும்.
(அல்-குர்ஆன் 7:35-53)