இமாம் நவவி வாழ்க்கை வரலாறு
அறிஞரின் பெயர்: இமாம் ஹாபிழ் முஹ்யித்தீன் அபூ ஜகரிய்யா யஹ்யா பின் ஷரஃப் அந் – நவவி ஷாஃபிஈ (ரஹ்)
இயற்பெயர்: யஹ்யா
சிறப்புப் பெயர்கள்:
- முஹ்யித்தீன் என்பது பட்டப்பெயர்
- அபூ ஜகரிய்யா என்பது குறிப்புப் பெயர்
- நவா என்னும் ஊரில் பிறந்ததால் ‘நவவி’ (நவாவைச் சேர்ந்தவர்) என்று அழைக்கப்பட்டார்கள்
- சில சமயம் ‘நவாவி’ (ரஹ்) என்றும் அழைக்கப்பட்டார்கள்.
வாழ்ந்த காலம்: ஹிஜ்ரி 7 ஆம் நூற்றாண்டு
பிறப்பு: ஹிஜ்ரி 631 (கி.பி. 1233) முஹர்ரம் மாதம்
பிறந்த இடம்: சிரியாவின் டமாஸ்கஸ் நகரின் தெற்கே அமைந்துள்ள நவா என்ற கிராமத்தில்
வாழ்ந்த இடங்கள்: நவா கிராமம் மற்றும் டமாஸ்கஸ்
இறப்பு: ஹிஜ்ரி 676 ரஜப் பிறை 24
இறந்த இடம்: சிரியாவின் டமாஸ்கஸ் நகரின் தெற்கே அமைந்துள்ள நவா என்ற கிராமத்தில்
பெற்றோர்கள்:
இமாம் அவர்கள் மிகப்பெரிய குடும்பப் பிண்ணனியிலிருந்து வரவில்லை!. அதே நேரத்தில் மார்க்கப்பற்றுள்ள மார்க்க விசயங்களில் மிகவும் பேணுதலானவர்களாக இமாம் அவர்களின் பெற்றோர்கள் இருந்துள்ளார்கள்.
இமாம் நவவி (ரஹ் அவர்களின் தந்தை தங்களிடமிருந்த தோட்டத்தின் மூலமாக தங்களுக்குத் தேவையான உணவுகளை விவசாயம் செய்து வந்தார்கள்.
ஆசிரியர்கள்:
- இஸ்ஹாக் இப்னு அஹ்மத் அல்-மஹ்ரபி அல்-மக்திஸி (இறப்பு ஹிஜ்ரி 650)
- அப்துர் ரஹ்மான் அல்-அன்பாரி (இறப்பு ஹிஜ்ரி 661)
- அப்துல் அஜீஸ் அல்-அன்சாரி (இறப்பு ஹிஜ்ரி 662)
- அபூ இஸ்ஹாக் இப்ராஹீம் அல்-வாஸிஸ்தி – இவரிடம் இருந்து தான் இமாம் அவர்கள் ஸஹீஹ் முஸ்லிமைக் கற்றார்கள்.
கற்ற கல்விகள் மற்றும் சிறந்து விளங்கிய துறைகள்:
பத்து வயதிலேயே குர்ஆனை முழுமையாகக் கற்று மனப்பாடம் செய்தார்கள்.
தங்கள் ஊரிலேயே கல்வியில் சிறந்த ஆசிரியர்களிடம் அரபி இலக்கணம், இலக்கியம், நபிமொழிகள், அறிவிப்பாளர்கள் வரலாறு மற்றும் ஃபிக்ஹுச் சட்ட விளக்கம் போன்ற பல்வேறு கலைகளைக் கற்றார்கள்
சிறுவர் யஹ்யா அவர்கள், தாருல் ஹதீஸ் மத்ரஸாவில் சேர்ந்து கல்வி கற்பதற்காக ஹிஜ்ரி 649 ஆம் ஆண்டு தம் தந்தையுடன் திமிஷ்க் மாநகரம் வந்து அங்கு ஷரமிய்யா என்ற மதரஸாவில் கல்வி கற்க சேர்ந்தார்கள்.
அந்த மதரஸாவில் இமாம் அவர்கள் தங்குவதற்கு வசதியில்லாததால் அந்த அதரஸாவின் அறிஞர் ஒருவரின் அறிவுரையின் பேரில் டமாஸ்கஸின் கிழக்குத் திசையில் உமையா மஸ்ஜிதுடன் இணைந்த கட்டிடமான மத்ரஸா ரவாஹிய்யாவில் தங்கி கல்வி கற்றார்கள்.
அந்த மதரஸாவில் இருக்கும் மிக சிறிய அறையில் தங்கி கல்வியைக் கற்றார்கள். பார்வையாளர் யாராவது வந்தால் புத்தகங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி இடவசதி செய்து கெகாடுக்கும் அளவிற்கு அந்த அறை சிறியதாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஹிஜ்ரி 655 ஆம் ஆண்டு தங்களின் 24 வயதில்அஸ்ரஃபிய்யா மதஸாவில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்கள்.
இமாம் அவர்கள் சிறந்த மார்க்க மேதையாக இருந்ததினால் டமாஸ்கஸ் மற்றும் அதைச் சுற்றி வாழ்ந்த மக்களாளும், பிற மார்க்க அறிஞர்களாளும் அங்கீகரிக்கப்பட்ட அறிஞராகத் திகழ்ந்தார்கள்.
எழுதிய நூல்கள், கட்டுரைகள் மற்றும் பிற ஆக்கங்கள்:
- ரியாளுஸ் ஸாலிஹீன் மின் கலாமி ஸைய்யிதில் முர்ஸலீன்
- ஸஹீஹ் முஸ்லிமின் விரிவுரை
- அல் மஜ்மூஃ (அல் முஹத்தஃப் விரிவுரை)
- அல் அத்கார்
- அல் அர்பஈனுந் நவவிய்யா
- தஹ்தீபுல் அஸ்மா வல் லுகாத்
- அல் மின்ஹாஜ
இவை தவிர இன்னும் ஏராளமான நூல்களை அவர்கள் இயற்றியுள்ளார்கள்.
செய்து வந்த தொழில்:
ஹிஜ்ரி 665 ஆம் ஆண்டு திமிஷ்கில் புகழ்பெற்ற கல்விக்கூடமாகிய தாருல் ஹதீஸ் மத்ரஸாவில் தலைமை ஆசிரியராகப் பொறுப் பேற்றார்கள். மரணம் அடையும் வரையில் தாருல் ஹதீஸ் மத்ரஸாவிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார்கள்.
அறிஞரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்புகள்:
மராக்குஷ் மாநகரத்தைச் சேர்ந்த ஷைக் யாஸீன் பின் யூசுப் அவர்கள் ஒருதடவை நவா என்கிற அந்தச் சிற்றூருக்குச் சென்றிருந்தபொழுது ஒரு காட்சியைக் கண்டார். சிறுவர் யஹ்யாவை சம வயதுடைய சிறுவர்கள் விளையாட வருமாறு வற்புறுத்தி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவருக்கு விளையாட்டில் ஆர்வமில்லை. அதிகமாக வற்புறுத்தியதால் அழுதுகொண்டே அவர்களை விட்டும் ஓடுகிறார். எங்கு செல்கிறார்? என்ன செய்கிறார்? என்று ஷைக் யாஸீன் பின்தொடர்ந்த பொழுது வீட்டிற்குச் சென்று குர்ஆனை எடுத்து ஓதினார் சிறுவர் யஹ்யா. உடனே அவரது தந்தை ஷரஃப் அவர்களைச் சந்தித்து, ‘உங்கள் புதல்வரைக் கல்வி கற்பதிலேயே முழுமையாக ஈடுபடுத்துங்கள். இதோ! இந்தச் சிறுவயதில் விளையாட்டில்கூட ஆர்வம் இல்லாமல் குர்ஆன் ஓதுகிறரர் உங்கள் புதல்வர்’ என்று கேட்டுக் கொண்டார்! தந்தையும் அதற்கு ஒப்புக்கொண்டுத் தம் புதல்வரின் படிப்புக்காக எல்லா உதவிகளும் செய்தார்!
இமாம் நவவி (ரஹ்) அவர்கள் உலகப் பற்றில்லாத – பேணுதலான வாழ்வை மேற் கொள்பவர்களாக இருந்தார்கள்
கல்விப்பணியில் முழுஈடுபாடு கொண்டிருந்ததுடன் பொதுமக்களுக்கு வழிகாட்டுவதிலும் நன்மையைக் கடைப் பிடிக்குமாறு ஏவுதல் – தீமையைத் தடுத்தல் போன்ற பெரும் பணிகளிலும் நல்லார்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தார்கள்.
ஆட்சியாளர்களின் தவறான போக்கைத் தக்க முறையில் கண்டிப்பதற்கும் அவர்கள் தயங்கியதில்லை.
இமாம் நவவி அவர்கள் மத்ரஸாவில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் போது எவ்வித ஊதியமும் பெற்றுப் பயனடையவில்லை
ஒவ்வொரு மாத ஊதியத்தையும் மத்ரஸா நிர்வாகியிடமே சேமித்து வருவார்கள். ஓராண்டில் பெருந்தொகை ஒன்று சேர்ந்ததும் ஏதேனும் சொத்து வாங்கி அதனை மத்ரஸா பெயரில் வக்ஃப் செய்து விடுவார்கள். அல்லது நூல்கள் வாங்கி அங்கிருந்த நூலகத்திற்கு கொடுத்து விடுவார்கள்
தேவையான பண உதவியை அவர்களின் தந்தை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆடைகள் தேவையெனில் தங்கள் தாயாரிடம் இருந்து தருவித்துக் கொள்வார்கள்.
யாரேனும் அன்பளிப்போ சன்மானமோ வழங்கினால் அந்த நபர் மார்க்கப் பற்றுள்ளவராக இருந்தால் மட்டுமே – அந்த அன்பளிப்பு தமக்குத் தேவை என்றால்தான் பெற்றுக் கொள்வார்கள்.
இமாம் அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்பியதில்லை. எளிய உணவுகள், எளிமையான ஆடைகளிலேயே வாழ்வைக் கழித்தார்கள். திருமணத்திலும்கூட அவர்களது மனம் நாட்டம் கொள்ளவில்லை. அந்த அளவுக்கு கல்விப் பணியில் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள்!
நடுத்தரமான வாழ்க்கைச் சூழ்நிலையில் இருந்து திமிஷ்க் மாநகரம் சென்ற இமாம் அவர்களை எல்லா வசதி வாய்ப்புகளும் தேடிவந்தன! இளமையின் வசந்த காலத்தில் – அனைத்து ஆரோக்கியமும் சக்தியும் நிரம்பி இருந்தும்கூட அவர்கள் இன்ப வாழ்வையும் வசதிவாய்ப்புகளையும் – கல்விப் பணிக்காகவே தியாகம் செய்துவிட்டு சாதாரணமான – எளிய வாழ்க்கையிலேயே மனநிறைவு கண்டார்கள்.
இமாம் நவவி(ரஹ்) அவர்கள் நிறைவேற்றிய ஹஜ் இரண்டு
மரணம் அடைவதற்கு சில காலம் முன்பு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். வக்ஃப் நிர்வாகத்தில் இருந்து எடுத்த எல்லா நூல்களையும் திரும்ப ஒப்படைத்தார்கள். தங்கள் ஆசிரியர்களின் மண்ணறைகளைத் தரிசித்து அவர்களுக்காக அல்லாஹ்விடம் அழுது அழுது பிரார்த்தனை செய்தார்கள். தங்கள் நண்பர்களையெல்லாம் சந்தித்து விடை பெற்றார்கள். பிறகு தங்கள் தந்தையின் கப்றை ஜியாரத் செய்துவிட்டு பிறகு பைத்துல் முகத்தஸ் மற்றும் கலீல் ஆகிய இடங்களையும் ஜியாரத் செய்தார்கள்.
Good