செய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா
அறிஞரின் பெயர்: தகியுத்தீன் அஹ்மத் இப்னு தைமிய்யா (ரஹ்)
முழு பெயர்: தகீயுத்தீன் அபுல் அப்பாஸ் அஹ்மது இப்னு அப்துல் ஹலீம் இப்னு அப்துஸ் ஸலாம் இப்னு தைமிய்யா அல்-ஹரனி
சிறப்புப் பெயர்கள்: ஷைகுல் இஸ்லாம், அல்-முஃபஸ்ஸிர், அல்-முஜாஹித், அல்-முஜதஹித், அல்-முஹத்திஸ், அல்-முஜத்தித்
வாழ்ந்த காலம்: ஹிஜிரி 7-8 ம் நூற்றாண்டு
பிறப்பு: ஹிஜிரி 661 ரபியுல் அவ்வல் 10 ஆம் நாள்
பிறந்த இடம்: துர்க்கியில் உள்ள ஹர்ரான்
வாழ்ந்த இடங்கள்: எகிப்து, சிரியா
இறப்பு: ஹிஜ்ரி 728 துல்கஃதா பிறை 2
இறந்த இடம்: டமாஸ்கஸ் (சிறையில் இருந்த போது)
பெற்றோர்கள்: தந்தை ஷிஹாபுத்தீன் அப்துல் ஹலீம்
ஆசிரியர்கள்:
- அபுல் அப்பாஸ் அஹ்மத் அல் மக்தஸி
- அபு நஸ்ர் அப்துல் அஜிஸ் இப்னு அப்துல் முனீம்
- அபு முஹம்மது இஸ்மாயீல் அல் தணுகி
- அல் மஞ்சா இப்ன் உதுமான் அத் திமஷ்கி
- அபுல் அப்பாஸ் அல் மோம்மில் அல் பலிசி
சிறந்து விளங்கிய துறைகள்: பன்னூல் ஆசிரியர், பிக்ஹ், திருக்குர்ஆன் விளக்கவுரை, மார்க்கத் தீர்ப்புகள், ஹதீது கலை
மாணவர்கள்:
- இமாம் ஹாபிள் இப்னு கையிமில் ஜவ்ஜிய்யா (ரஹ்)
- இமாம் ஹாபிள் அல்-முபஸ்ஸிர்இப்னு கதீர் (ரஹ்)
- இமாம் ஹாபிள் அல்-முஹத்திஸ் ஸம்ஸூத்தீன் அத்தஹபி (ரஹ்)
- அத்தஹபி முஹம்மது இப்ன் அஹமது
- அல் மிஜ்ஜி யூசுப் பின் அப்துல் ரஹ்மான்
- இப்ன் அப்துல் ஹாதி முஹம்மது இப்ன் அஹ்மது
எழுதிய நூல்கள், கட்டுரைகள்மற்றும் பிற ஆக்கங்கள்:
இமாம் அவர்கள் கிட்டத்தட்ட 500 நூல்கள் வரை எழுதியுள்ளதாகத் தெரிகிறது. அவற்றுள் பிரபலமானவைகளில் சில:
- மஜ்மு அல்ஃபதாவா
- மின்ஹாஜ் அஸ்ஸுன்னா அந்நபாவியா
- அல்-அகீதா அல்-வாஸிஸ்தியா
- தப்ஸீர் இப்னு தைமிய்யா
- அகீதா அல்-ஹமாவிய்யா
- அல்-அஸ்மா வஸ்ஸிஃபாத்
- தார் தாருத் அல்-அக்ல் வல்-நக்ல்
- அல்-ஈமான்
- அல்-ஜவாப் அஸ்-ஸஹீஹ் லிமன் பBத்தல தீன் அல்-மஸீஹ்
- ஃபதாவா அல்-குப்ரா
- ஃபதாவா அல்-மிஸ்ரிய்யா
- அர்ரத்து அலல் மின்தகைன்
- அல்-உபூதிய்யா
- இக்திதா அஸ்ஸிராதுல் முஸ்தகீம்
- அத்-தவஸ்ஸூல் வல்-வஸீலா
- ஸரஹ் ஃபுதூஹ் அல்-Gகைப்
- அல்-ஸியாஸல் ஷரீய்யா
- நக்த் அத்-தவ்ஸிஸ்
- நக்ளுல் மந்திக்
- அல் இஸ்திகாமா
- அல் ஜவாப் அஸ்ஸஹீ
- அந்நுபுவ்வத்
இன்னும் பல நூல்கள். இவருடைய நூல்களில் ஒன்று ‘இறை நேசச்செல்வர்களும் ஷைத்தானின் தோழர்களும்’ என்ற பெயரில் அழகிய தமிழ் பெயர்ப்பில் வந்திருக்கிறது.
செய்து வந்த தொழில்: மதரஸா பேராசிரியர்
அறிஞரைப் பற்றிய சுருக்கமானவாழ்க்கைக் குறிப்பு:
தாத்தாரிய மங்கோலியரின் அச்சுறுத்தல் காரணமாக இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களை இளமைப் பருவத்திலேயே இவரது தந்தை டமாஸ்கஸூக்கு அழைத்து வந்தார்.
சிறு வயதிலேயே குர்ஆனை மனனம் செய்த ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள், அரபி இரக்கணம், இலக்கியம், வடிவெழுத்து மற்றும் கணிதத்தில் தலைசிறந்து விளங்கினார். குர்ஆன், ஹதீஸ் மற்றும் பிக்ஹ் கலைகளை தம் தந்தையிடமிருந்து கற்ற ஷைகு அவர்கள் அபார நினைவாற்றலைப் பெற்றிருந்தார்கள்.
இமாம் அஹ்மதின் சிந்தனைகளை ஆர்வத்துடன் பயின்றார். பதினேழு வயது முதலே கல்விப் போதனை, சட்டத் தீர்ப்பு வழங்கல், நூல் எழுதுதல் முதலானவற்றில் ஈடுபட்டார். குர்ஆன் ஹதீஸ் தவிர்த்து வானவியல், மருத்துவம் மற்றும் பொறியியல் துறையிலும் சிறந்து விளங்கினார். நன்மையை ஏவி தீமையை தடுத்தல், இஸ்லாத்தை போதித்தல், ஜிஹாதின் பக்கம் மக்களை அழைத்தல், போன்றவற்றில் ஈடுபட்டார்.
தமது 22 ஆவது வயதில் ஷைகுல் இஸ்லாம் அவர்களின் தந்தை இறந்ததும் அவர் வகித்து வந்த பேராசியர் பதவியை வகிக்கத்தொடங்கி னார். பதினேழு ஆண்டுகள் இப்பதவியில் இருந்த இமாம் அவர்கள் ‘பித்அத்’ என்னும் மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட அநாச்சாரங்களையும், இஸ்லாத்திற்கெதிரான கொள்கைகளையும் துணிவுடன் மக்கள் மன்றத்திலே எடுத்துக் கூறினார்கள். அதீத ஞாபக சக்தி மற்றும் இலகுவாக புரிந்து கொள்ளுதல் ஆகிய திறமைகளின் காரணமாக இள வயதிலே மார்க்கத் தீர்ப்புகள் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். இமாம் அவர்களின் பேச்சு மற்றும் இறைவனின் பண்புகளைப் பற்றிய கேள்விகளுக்கு அளித்த பதில்கள் மாற்றுக்கருத்துடையவர்களை குறிப்பாக ஷாபிய்யாக்களையும் அஷ்அரியாக்களையும் கொதிப்படைய வைத்தது.
அந்தக் கால மக்களிடையே காணப்பட்ட மூடப்பழக்கவழக்கங்கள், பல்வேறு விதமான பித்அத்கள், கப்று வணக்க வழிபாடுகள், கற்களுக்கும், பாறைகளுக்கும் சக்தியிருப்பதாக நம்பி அவற்றை புனிதமாகக் கருதுதல் போன்ற தீமைகளை துணிவுடன் மக்களிடையே பிரச்சாரம் செய்ததனால் இமாம் அவர்களின் செல்வாக்கு மக்களிடையே பரவியது. ஆனால் ஆதரவைவிட இமாம் அவர்களுக்கு எதிர்ப்புகள் தான் அதிகமாக இருந்தது. அதன் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி பலமுறை இமாம் அவர்கள் சிறை செல்ல நேரிட்டது.
வழிகேட்டின் மொத்த உருவமான இப்னு அரபியின் வஹ்தத்துல் உஜூத் என்ற உருப்படாத சூபித்துக் கொள்கையை இமாம் அவர்கள் விமர்சித்த போது எகிப்து சுல்தானால் சிறையிலடைக்கப்படார். சிறையிலிருந்தபோது சிறைக் கூடத்தை கல்விக்கூடமாக மாற்றி அங்கிருந்த கைதிகளுக்கு மார்க்க போதனைகள் செய்து அவர்களை சீர்திருத்தினார். சிறையில் இருந்த போது, நீதிபதிகளால் தீர்வு காணப்படாத கடினமான கேள்விகள், ஆளுநர்களால் அவருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் பதிலளிப்பார்கள் என்று இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சிறையிலிருந்து விடுதலையடைந்ததும் மறுபடியும் சூபித்துவக் கொள்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். சூபித்துவம் என்பது இந்தோ-கிரேக்கத் தத்துவம் என்றும் இக்கொள்கைக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும் செய்த பிரச்சாரத்தின் விளைவாக மறுபடியும் சிறையிடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்து மறுபடியும் விடுதலையான பிறகும் சூபித்துவக் கொள்கை மற்றும் அதன் கிளைகளான தரீக்காக்களின் தீமைகளை மக்களுக்கு பிரச்சாரம் செய்து பலரை நல்வழிப்படுத்தினார். எகிப்தில் சுல்தான் நாஸிர் அரியனை ஏறியதும் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களுக்கு தண்டனையளிக்க முன்வந்தும் கூட இமாம் அவர்கள் எதிரிகளை மன்னித்து விட்டுவிட்டார்கள்.
ஒரே சமயத்தில் மூன்று தலாக் கூறுவது செல்லுபடியாகாது என்ற இமாம் அவர்கள் கூறிய கருத்து அக்கால அறிஞர்களிடையே மிகுந்த எதிர்ப்பலைகளை ஏற்படுத்தி அதன் மூலம் இவர் மீண்டும் சிறை சென்றார்.
கிட்டத்தட்ட ஐந்தரை மாதங்களுக்குப் பிறகு விடுதலையான இவர் அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ் போதனைகளை மக்களுக்கு விளக்குவதில் முழு கவனத்தையும் செலுத்தலானார்கள். அச்சமயத்தில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு, இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் வழங்கிய தீர்ப்பான, ‘கப்று தரிசனத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பெரியார்களின் கப்றுகளுக்கும் நபி (ஸல்) அவர்களின் கப்றுகளுக்கும் செல்வது கூடாது’ என்பதை வைத்துக்கொண்டு இமாம் அவர்களின் எதிர்ப்பாளர்கள் மாபெரும் கிளர்ச்சி செய்யவே மீண்டும் டமாஸ்களில் சிறையலடைக்கப்பட்டார்கள்.
சிறையில் இருந்தே இமாம் அவர்கள் பல்வேறு நூல்களையும் ஆக்கங்களையும் எழுதியதாகக் கூறப்படுகிறது. சிறையிலிருந்தவாறே திருக்குர்ஆனுக்கு விளக்கவுரையும் எழுதினார்கள். அவர் எழுதுவதை தடுப்பதற்காக சிறையதிகாரிகள் பலவாறு முயற்சி செய்த பிறகும் இவர் கரித்துண்டைப் பயன்படுத்தி தனது கருத்துக்களை எழுதிவந்ததாகக் கூறப்படுகிறது.
இமாம் அவர்கள் ஹிஜ்ரி 728 ஆம் ஆண்டு துல்கஃதா பிறை 2 ல் குர்ஆன் ஓதிக்கொண்டிருக்கும் நிலையிலேயே மரணம் எய்தினார்கள். ஷாம், எகிப்து, இராக் மற்றும் பாஸ்ரா போன்ற பிரதேசங்களில் இருந்து பெருந்திரளான மக்கள் இறுதி சடங்கில் கலந்து கொண்டு அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள்.
இமாம் அவர்கள் மார்க்க போதனைகளிலும் பிக்ஹ்களிலும் சிறந்து விளங்கியதோடல்லாம் வீரமுடையவர்களாகவும் திகழ்ந்தார்கள். தார்த்தாரியர்கள் டமாஸ்கஸூக்கு படையெடுத்து வந்தபோதெல்லாம் எகிப்திய சுல்தானுடன் சேர்ந்து அவர்களுடன் போரிட்டார்கள்.
இப்னு தைமிய்யா (ரஹ்) ஒரு பன்னூல் ஆசிரியர். இமாம் இப்னு கதிர், இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர், இமாம் இப்னு தகீக், ஷைக் சம்சுத்தீன், அபூ ஹய்யான் அழ அன்டுலூசி, போன்ற அரிஞர்கள் இப்னு தைமிய்யாவின் திறமையை சிலாகித்து கூறியுள்ளார்கள்.
இப்னு தைமிய்யா (ரஹ்) காலத்தில் வாழ்ந்தவர்களிடையே, இவர்தான் சிறந்த அறிஞராக மதிக்கப்பட்டார்கள். ஒரு குறிப்பிட்ட விஷயத்தில், இருவேறு கருத்துக்கள் இருந்து முடிவு எடுக்க முடியாமல் இருந்தால், அறிஞர்கள் இப்னு தைமிய்யாவின (ரஹ்) கருத்தையே இறுதி முடிவாக எடுத்துக் கொள்வார்கள்.
கப்று மற்றும் சிலை வணக்கங்கள் மூலமாக இறைவனுக்கு இணை வைப்பதை மக்களுக்கு எடுத்துரைத்து, மக்கள் அதிலிருந்தும் மீண்டு ஒரே இறைவனை வணங்கவேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி அதற்காக மக்களை சந்திப்பது பிரச்சாரம் மேற்கொள்வது என்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) இறுதிவரை திருமணம் முடிக்காமலேயே வாழ்ந்தார்கள்.