புதுவருடப்பிறப்பு கொண்டாட்டங்களும் முஸ்லிம்களின் நிலையும்

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.

ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் பலராலும் விமர்சையாகக் கொண்டாடப்படக்கூடிய ஆங்கிலப் புத்தாண்டில் ஒவ்வொரு முஸ்லிமும் என்ன செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது என்பதைத் தெரிந்துக் கொள்வதற்கு முன்பு, தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய காலண்டர்களைப் பற்றியும் அவைகள் எவற்றை அடிப்படையாகக் கொண்டது? அந்தக் காலண்டர்கள் எவ்வாறு தோன்றியது? என்பது பற்றியும், முஸ்லிம்களாகிய நாம் எந்த காலண்டரை, ஏதற்காக பின்பற்ற வேண்டும்? என்பது பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சூரிய மற்றும் சந்திரக் கணக்கு காலண்டர் (Solar and Lunar Calendar):

உலகில் வாழும் பல்வேறு இன மக்களும் பலவகையான காலண்டர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். பொதுவாக ஆண்டுகளைக் கணக்கிடும் போது சூரியன் மற்றும் சந்திரன்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகின்றனர்.  அவ்வகையில் பூமி மற்றும் சூரியனின் சுழற்ச்சியை அடிப்படையக் கொண்டு கணக்கிடப்படுவதை ‘சோலார் காலண்டர்’ அல்லது ‘கிரிகோரியன் காலண்டர்’ என்றும் சந்திரனின் தோற்றம் மற்றும் மறைவை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவதை ‘லூனார் காலண்டர்’ அல்லது ‘ஹிஜ்ரி காலண்டர்’ என்றும் அழைக்கின்றனர்.

கிரிகோரியன் காலண்டர்! (Gregorian calendar)

தற்போது உலக அளவில் நாம் பயன்படுத்திவரும் சோலார் காலண்டர், கிரிகோரியன் என்ற கிறிஸ்தவ பாதியாரால் வடிவமைக்கப்பட்டதால் இதை ‘கிரிகோரியன் காலண்டர்’ என்கிறோம். இந்த காலண்டரின் கணக்கீட்டின்படி ஒரு ஆண்டின் துவக்கம் மற்றும் முடிவு என்பது சூரியனின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இதனடிப்படையில் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் இருக்கிறது.

ஹிஜ்ரி காலண்டர்: (Hijiri Calendar)

ஒவ்வொரு மாதத்தின் முதலில் தோன்றி இறுதியில் மறையக் கூடிய சந்திரனை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுகள் கணக்கிடப்படுவதால் இவ்வகை காலண்டர் ‘லூனார் காலண்டர்’ என்ப்படுகிறது.  இந்தக் காலண்டர் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்ததை ஆரம்பமாக வைத்து அந்த ஆண்டை முதலாவதாக வைத்து துவங்குவதால் லூனார் காலண்டர் ‘ஹிஜ்ரி காலண்டர்’ என்று அழைக்கப்படுகிறது. லூனார் காலண்டரின் அடிப்படையில் ஒரு ஆண்டில் 354 நாட்கள் இருக்கிறது.

கிரிகோரியன் காலண்டரின் வரலாறு!!

பழங்காலம் முதற்கொண்டு பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் பழமைவாய்ந்த ஏதெனியன் காலண்டர், ரோமன் காலண்டர், சுமேரியன் காலண்டர், மாயன் காலண்டர் போன்ற பலவகையாக காலண்டர்களைப் பயன்படுத்தி வந்தனர். தற்போது உலக மக்கள் பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ‘கிரிகோரியன் காலண்டர்’ என்பது இதற்கு முந்தைய ரோமர்கள் பயன்படுத்தி வந்த ‘ரோமன் காலண்டர்’ மற்றும் ‘ஜூலியன் காலண்டரின்’ புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பாகும்.

ரோமர்கள் பயன்படுத்தி வந்த காலண்டரான ‘ரோமன் காலண்டர்’ அல்லது ‘ஜூலியனுக்கு முந்தைய காலண்டர்’ (pre-julian Calendar) என்பது ‘ரோமுலுஸ்’ என்ற ரோமானிய மன்னரால் கி.மு. 753 -ல் அறிமுகப்படுத்தப்பட்டதாகும் இவ்வகை காலண்டரில் ஆரம்பத்தில் ஓர் ஆண்டிற்கு பத்து மாதங்களைக் கொண்ட 304 நாட்கள் தான் இருந்ததது. இதில் ஆண்டின் துவக்கம் மார்ச் மாதமாகும். குளிர் காலமாகிய ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் இந்தக் காலண்டரில் இருக்கவில்லை. பின்னர் கி.மு. 700 ஆம் ஆண்டு ரோமானிய மன்னர் நூமா பாம்பிலியஸ் (Numa Pompilius) என்பவர் ரோமுலுஸ் உருவாக்கிய காலண்டரை சீரமைத்து விடுபட்ட மாதங்களைச் சேர்த்து வருடத்திற்கு 354 அல்லது 355 நாட்கள் என்ற அடிப்படையிலான புதிய ரோமன் காலண்டரை உருவாக்கினார்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களை இணைத்த பிறகும் பருவ நிலைகளுக்கு ஏற்றார் போல் அவர்களுடைய காலண்டர் ஒரே சீராக இல்லாததால் பலவகை மாற்றங்களைச் செய்து பார்த்தனர். பருவ காலங்களுக்கு ஏற்றார் போல் ‘ரோமன் காலண்டரில்’ நாட்களை கூட்டியும் குறைத்தும் வந்தனர். அதற்கென நியமிக்கப்பட்ட வல்லுனர்கள் குழு இந்தக் காலண்டரை பராமரிப்பதற்கென தேவைப்பட்டனர். பான்டிபிளெக்ஸ் மேக்ஸிமஸ் (pontifex maximus) என்ற கிறிஸ்தவப் பாதியார் இக்குறைகளை நீக்குவதற்காக பதிமூன்றாவது மாதம் ஒன்றையும் ஆண்டின் இடையில் சொருகினார்.

ரோமன் காலண்டரில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் கருதியதால் அவற்றைக் களைந்து ‘ஜூலியஸ் ஸீஸர்’ என்ற ரோமானிய மன்னரால் அலெக்ஸான்டரியாவைச் சேர்ந்த வானவியல் வல்லுனர் ‘சோஸிஜீன் (Sosigene)’ என்பரின் உதவியைக் கொண்டு கி.மு. 45 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் ‘ஜூலியன் காலண்டர்’ என்பதாகும். ஜூலியஸ் ஸீஸருக்கு அடுத்தபடியாக வந்த ‘ஆகஸ்டஸ்’ என்ற ரோமப் பேரரசர் இந்த காலண்டரில் மேலும் சீர்திருத்தம் செய்து ‘ஜூலியஸ் ஸீஸர்’ உருவாக்கிய காலண்டரில் உள்ள தவறுகளை சரிசெய்தார்.

வருடத்திற்கு 355 நாட்கள் என்றிருந்த ரோமன் காலண்டரில் புதிதாக நாட்களை சேர்த்து வருடத்திற்கு 365.25 நாட்கள் என்று மாற்றியமைத்தனர். கி.பி. 1582 ஆம் ஆண்டு வரை ஐரோப்பிவின் கிறிஸ்தவ உலகினரால் இந்த ஜூலியன் காலண்டரே பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஜூலியன் காலண்டரில் காணப்பட்ட லீப் ஆண்டை கணக்கிடுவதில் பல சிக்கல்கள் இருந்ததால் அவற்றைச் சரிசெய்து, கிறிஸ்தவர்களின் போப் கிரிகோரி XIII என்பவரால் 1582 ஆம் ஆண்டு துவக்கப்பட்டதே தற்போது உலகின் பெரும்பான்மையானவர்களால் பின்பற்றப்படும் ‘ஆங்கிலேயக் காலண்டர்’ எனப்படும் ‘கிரிகோரியன் காலண்டர்’ ஆகும். இது ‘வெஸ்டர்ன் காலண்டர்’ எனவும், ‘கிறிஸ்தவக் காலண்டர்’ எனவும் அழைக்கப்படுகிறது.  இந்த காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றிவரும் நாடுகளால் இந்த கிரிகோரியன் காலண்டர் உடனே அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக சில நூற்றாண்டுகளில் புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் மற்றும் மற்ற சமயத்தவர்களின் நாடுகளிலும் அமல்படுத்தப்பட்டு இன்று உலக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.

கிரிகோரியக் காலண்டரின் மாதங்களின் பெயர் காரணங்கள்:

ஜனவரி – ‘Janus’ என்ற கதவுகளின் கடவுளின் (god of gates & door) பெயரால் லத்தீன் மொழியில் ‘Januarius’ என்றழைக்கபட்டடது. இதுவே தற்போது ஆங்கிலத்தில் ‘January’ என்றழைக்கப்படுகிறது.

பிப்ரவரி – தூய்மைத் திருநாளான ‘Februa’ என்ற பெயரால் லத்தீன் மொழியில் ‘Februarius’ என்றழைக்கபட்டடது. இதுவே தற்போது ஆங்கிலத்தில் ‘Febrauary’ என்றழைக்கப்படுகிறது

மார்ச் – ‘Mars’ என்ற கடவுளின் பெயரால் லத்தீன் மொழியில் ‘Martius’ என்றழைக்கபட்டடது. இதுவே தற்போது ஆங்கிலத்தில் ‘March’ என்றழைக்கப்படுகிறது.

ஏப்ரல் – ‘Aphrodite’ என்ற பெண் கடவுளின் பெயரால் அல்லது ‘aperire’ என்ற லத்தீன் சொல்லிலிருந்து ‘Aprilis’ என்றழைக்கபட்டடது. இதுவே தற்போது ஆங்கிலத்தில் ‘April’ என்றழைக்கப்படுகிறது.

மே – ‘Maia’ என்ற பெண் கடவுளின் பெயரால் லத்தீன் மொழியில் ‘Maius’ என்றழைக்கபட்டடதாக கருதப்படுகிறது. இதுவே தற்போது ஆங்கிலத்தில் ‘May’ என்றழைக்கப்படுகிறது.

ஜூன் – ‘Juno’ என்ற பெண் கடவுளின் பெயரால் லத்தீன் மொழியில் ‘Junius’ என்றழைக்கபட்டடதாக கருதப்படுகிறது. இதுவே தற்போது ஆங்கிலத்தில் ‘June’ என்றழைக்கப்படுகிறது.

ஜூலை – பத்து மாதங்களை மட்டுமே கொண்ட பழைய ரோமன் காலண்டரில் ‘ஐந்தாவது’ மாதம் என்பதைக் குறிக்கக்கூடிய ‘quintus’ என்ற வார்த்தையிலிருந்து லத்தீன் மொழியில் ‘Quintilis’ என்றழைக்கப்பட்டது. பின்னர் ரோமானியப் பேரரசர் ‘ஜூலியஸ் ஸீஸரை’ கவுரவப்படுத்துவதற்காக அவரின் பிறந்த மாதமான ‘Quintilis’ என்ற மாதத்தின் பெயரை கி.மு. 44 ஆம் ஆண்டு ‘Julius’ என்று மாற்றியமைத்தனர். இதுவே தற்போது ஆங்கிலத்தில் ‘July’ என்றழைக்கப்படுகிறது.

ஆகஸ்ட் – பத்து மாதங்களை மட்டுமே கொண்ட பழைய ரோமன் காலண்டரில் ‘ஆறாவது’ (sixth) மாதம் என்பதைக் குறிக்கக்கூடிய ‘sextus’ என்ற வார்த்தையிலிருந்து லத்தீன் மொழியில் ‘Sextilis’ என்றழைக்கப்பட்டது. பின்னர் ரோமானியப் பேரரசர் ‘ஆகஸ்டஸ்’ (Augustus) என்பவரை கவுரவப்படுத்துவதற்காக அவருடைய ஆட்சியில் முக்கிய நிகழ்வுகள் நடந்த மாதமான ‘Sextilis’ என்ற மாதத்தின் பெயரை கி.மு. 8 ஆம் ஆண்டு ‘Augustus’ என்று மாற்றியமைத்தனர். இதுவே தற்போது ஆங்கிலத்தில் ‘August’ என்றழைக்கப்படுகிறது.

செப்டம்பர் – பத்து மாதங்களை மட்டுமே கொண்ட பழைய ரோமன் காலண்டரில் ஏழாவது (seventh) மாதம் என்பதைக் குறிக்கக்கூடிய septem என்ற வார்த்தையிலிருந்து லத்தீன் மொழியில் September என்றழைக்கப்பட்டது.

அக்டோபர் – பத்து மாதங்களை மட்டுமே கொண்ட பழைய ரோமன் காலண்டரில் ‘எட்டாவது’ (eighth) மாதம் என்பதைக் குறிக்கக்கூடிய ‘octo’ என்ற வார்த்தையிலிருந்து லத்தீன் மொழியில் ‘October’ என்றழைக்கப்பட்டது.

நவம்பர் – பத்து மாதங்களை மட்டுமே கொண்ட பழைய ரோமன் காலண்டரில் ‘ஒன்பதாவது’ (ninth) மாதம் என்பதைக் குறிக்கக்கூடிய ‘novem’ என்ற வார்த்தையிலிருந்து லத்தீன் மொழியில் ‘November’ என்றழைக்கப்பட்டது.

டிசம்பர் – பத்து மாதங்களை மட்டுமே கொண்ட பழைய ரோமன் காலண்டரில் ‘பத்தாவது’ (tenth) மாதம் என்பதைக் குறிக்கக்கூடிய ‘decem’ என்ற வார்த்தையிலிருந்து லத்தீன் மொழியில் ‘December’ என்றழைக்கப்பட்டது.

குறிப்பு: பண்டைய ரோமன் காலண்டரில் ஜனவரி மற்றும் பிப்ரவரியைத் தவிர்த்து பத்து மாதங்கள் மட்டும் தான் இருந்தது என்று நாம் ஏற்கனவே மேலே குறிப்பிட்டிருந்தோம்.

கிரிகோரியக் காலண்டரின் கிழமைகளுக்கான பெயர் காரணங்கள்:

Sunday – ‘சூரியக் கடவுளுக்குரிய தினம்’ என்பதைக் குறிக்கின்ற வகையிலே ‘sun’s day என்றழைக்கப்பட்டது. இது லத்தீன் மொழியிலான வார்த்தைகளான ‘dies Solis’ என்பதன் மொழிபெயர்ப்பாகும். ஜெர்மனிய நம்பிக்கையில் அவர்களின் பெண் கடவுள் ‘Sunna/Sól’ என்றழைக்கப்பட்டனர். தமிழில் ‘சூரியன்’ என்ற அர்த்தத்தைக் கொண்ட ‘ஞாயிறு’ -கிழமை என்றழைக்கப்படுகிறது.

Monday – ‘சந்திரக் கடவுளுக்குரிய தினம்’ என்பதைக் குறிக்கின்ற வகையிலே ‘Moon’s day என்றழைக்கப்பட்டது. இது லத்தீன் மொழியிலான வார்த்தைகளான ‘dies lunae’ என்பதன் மொழிபெயர்ப்பாகும். ஜெர்மனிய நம்பிக்கையில் அவர்களின் கடவுள் ‘Máni’ என்றழைக்கப்பட்டனர். தமிழில் ‘சந்திரன்’ என்று அர்த்தம் உடைய ‘திங்கள்’ கிழமை என்றழைக்கப்படுகிறது.

Tuesday – பண்டைய ஜெர்மனிய சமயக் கலாச்சார நம்பிக்கையின்படி, ‘Tiw’ என்பது ஒரு கையுடைய ஒரு கடவுளின் பெயராகும். அந்தக் கடவுளுக்குரிய சிறப்பு தினம் என்பதைக் குறிக்க பழைய ஆங்கிலத்தில் “Tiw’s day என்றழைத்தனர். மேலும் ‘செவ்வாய்’ கிரகத்தின் தினம் என்பதைக் குறிக்க லத்தின் மொழியில் ‘dies Martis’ (Day of Mars) என்றும் அழைக்கப்பட்டது.  தமிழில் “செவ்வாய்” கிழமை என்றழைக்கப்படுகிறது.

Wednesday – பண்டைய ஜெர்மனிய சமயக் கலாச்சாரம் மற்றும் ஆங்கிலோ சக்ஸன்ஸ் நம்பிக்கையின்படி, ‘Wodan’ என்பது ஒரு ஒரு கடவுளின் பெயர். மேலும் ‘புதன்’ கிரகத்தின் தினம் என்பதைக் குறிக்க லத்தின் மொழியில் ‘dies Mercury’ (Day of Mercury) என்றும் அழைக்கப்பட்டது. தமிழில் “புதன்” கிழமை என்றழைக்கப்படுகிறது.

Thursday – நோர்ஸ் கடவுள் ‘Thor’ என்றழைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் ‘இடி’ (Thunder) என்பதாகும். ‘இடி’ – யின் தினம் (Thunder’s day) என்பதைக் குறிக்க ‘Thor’s day’ என்றழைக்கப்படுகிறது. மேலும் ‘வியாழன்’ கிரகத்தின் தினம் என்பதைக் குறிக்க லத்தின் மொழியில் ‘ddies Iovis’ (Day of Jupitor) என்றும் அழைக்கப்பட்டது.  தமிழில் “வியாழன்” கிழமை என்றழைக்கப்படுகிறது.

Friday – ஆங்கிலோ சக்ஸன் மக்களின் பெண் கடவுள் ‘Fríge’ என்றழைக்கப்பட்டார். மேலும் Norse மொழியில் ‘வீனஸ் கிரகம்’, Friggjarstjarna (Frigg’s star) என்றும் அழைக்கப்பட்டது. மேலும் “வெள்ளி” கிரகத்தின் தினம் என்பதைக் குறிக்க லத்தின் மொழியில் ‘ddies Veneris” (“Day of Venus”) என்றும் அழைக்கப்பட்டது. தமிழில் “வெள்ளி” கிழமை என்றழைக்கப்படுகிறது.

Saturday – ரோமக் கடவுளான ‘Saturn’ என்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலும் “சனி” கிரகத்தின் தினம் என்பதைக் குறிக்க லத்தின் மொழியில் ‘ddies Saturni” (“Day of Saturn”) என்றும் அழைக்கப்பட்டது. தமிழில் “சனி” கிழமை என்றழைக்கப்படுகிறது.

புத்தாண்டு தினம்!

பண்டைய ரோமானியர்களின் ஆட்சிக்காலத்திலிருந்து பல்வேறு தினங்களை ஆண்டின் துவக்க தினமாக, புத்தாண்டு தினமாக கருதி வந்திருக்கின்றனர். அவைகளைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

1- மே : கி.மு 222 க்கு முன்னர் பண்டைய ரோமர்களின் ஆட்சிக்காலத்தில் புத்தாண்டு தினம்

15 – மார்ச் : கி.மு 222 முதல் கி.மு. 153 வரை புத்தாண்டு தினம்

1- ஜனவரி : கி.மு. 153 முதல் புத்தாண்டு தினம்

ஜனவரி 1 ஆம் தேதியை கி.மு. 153 முதல் வருடப்பிறப்பு தினமாக கருதி வந்தாலும் மத்திய காலங்களில் (middle ages) கிறிஸ்தவ தேவாலயங்களின் ஆதிக்கத்தின் காரணமாக பல மேற்கத்திய நாடுகள் புதுவருடப் பிறப்பு தினத்தை கிறிஸ்தவர்களின் பண்டிகை தினங்களுக்கு மாற்றினர். இவ்வாறாக புதுவருடப் பிறப்பு தினத்தை கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25 ஆம் தேதிக்கும், கேப்ரியேல் மரியாவுக்கு நற்செய்தி கூறிய நாளான மார்ச் 25 ஆம் தேதிக்கும், பைஜானைட் அரசர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்கும் ரஷ்யர்கள் மார்ச் 1 ஆம் தேதிக்கும் மாற்றம் செய்தனர்.

கிரிகோரியன் காலண்டரை கி.பி. 1752 ஆம் ஆண்டு தான் இங்கிலாந்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதுவரை அவர்களுக்கு மார்ச்-25 ஆம் தேதி தான் புதுவருடப் பிறப்பாக இருந்தது.  மார்ச்-25 ஆம் தேதியை வருடத்தின் முதல் நாளாகக் கொண்டாடப்படுவதற்கு கூறப்படும் காரணம் அந்த தினத்தில் ஜிப்ராயில் (அலை) அவர்கள் மர்யம் (அலை) அவர்களுக்கு ‘நீங்கள் ஈஸா (அலை) அவர்களைப் பெற்றெடுக்கப் போகிறீர்கள்’ என்ற நற்செய்தி கூறிய சிறப்பு நாளாக கிறிஸ்தவர்கள் கருதுவதுதான்.

ஜனவரி-1 ஆம் தேதியை வருடத்தின் முதல் தினமாகக் கிறிஸ்தவர்கள் கொண்டாடுவதற்கு கூறப்படும் காரணம், அந்த தினத்தில் தான், அதாவது ஈஸா (அலை) அவர்கள் பிறந்து 8 ஆவது நாளில், அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்பட்ட நாள் என்பதால் அந்த நாளை சிறப்பிக்கும் வண்ணமாக ஜனவரி முதல் தேதியை வருடப்பிறப்பாக கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர்.

இன்று வரை உலகில் வாழும் பல்வேறு சமூகத்தினர்கள் தாங்கள் பின்பற்றுகின்ற காலண்டரின் அடிப்படையில் பல்வேறு தினங்களை புதுவருடப்பிறப்பாகக் கொண்டாடுகின்றனர். நமது தமிழகத்தில் கூட எந்த நாள் புதுவருடப் பிறப்பு என்பதில் குழப்பம்! ஒரு கட்சி ஆட்சி செய்யும் போது தை மாதத்தை வருடத்தின் முதல் மாதமாகவும் மற்றொரு கட்சி ஆட்சி செய்யும் போது அதை மாற்றி சித்திரையை முதல் மாதமாகவும் ஆக்கி வருடப் பிறப்பையே கேலி செய்கின்றனர்.

உலகின் பல்வேறு சமயங்களுக்கும் தனித்தனியாக காலண்டர் மற்றும் புதுவருடப் பிறப்புக் கொண்டாட்டங்கள் இருந்தாலும் உலகளவில் கிறிஸ்தவ மதத்தின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதாலும் அவர்களின் காலண்டர் மிக பழமையானதாக கருதப்படுவதாலும் கிறிஸ்தவப் பாதிரியார் கிரிகோரி என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட கிரிகோரியன் காலண்டரே உலகளவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாலும் ஜனவரி 1 ஆம் தேதி உலக மக்கள் பலராலும் புதுவருடப் பிறப்பு தினமாக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

கிரிகோரியன் காலண்டர் மட்டுமல்லாது தற்போது உலகில் பல்வேறு சமுதாயத்தவர்களும் பலவகையான காலண்டர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

முஸ்லிம்கள் எந்தக் காலண்டரைப் பின்பற்ற வேண்டும்? அதற்காரண ஆதாரங்கள் என்ன?

ஒரு நாளின் இரவு மற்றும் பகலை கணக்கிடப்படுவதற்கு தான் சூரியனின் பிரகாசம் பயன்படுகின்றது. ஆனால் சந்திரனைப் பொறுத்தவரை மாதங்களையும் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கிடுவதற்கு பயன்படுகிறது. இது குறித்து அல்லாஹ் கூறுகின்றான்:

“அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.” (அல்-குர்ஆன் 10:5)

“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும்- ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள்.  நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” (அல்-குர்ஆன் 9-36).

மேற்கண்ட 10:5 வசனத்தில், “ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்” என்று கூறிவிட்டு 9-36 வசனத்தில் “நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை;” என்று கூறுவதோடு மட்டுமல்லாமல், “இது தான் நேரான மார்க்கமாகும்” என்று அல்லாஹ் கூறுவதை சற்று நன்கு கவனித்தால் சந்திரக் கணக்கீட்டின்படி உள்ள ஹிஜ்ரி ஆண்டின் முக்கியத்துவத்தையும் அதை முஸ்லிம்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் என்பதையும் அறியலாம். ஏனென்றால் மற்ற ஆண்டு கணக்கீடுகள் பிற சமுதாயத்தினர்களால் பயன்படுத்தப்படுவதோடல்லாமல் அவைகளில் பலவித குழப்பங்களையும் குறைபாடுகளையும் காணமுடிகிறது.

இமாம் குர்துபி (ரஹ்) அவர்களும் இமாம் அஷ்ஷவ்கானி (ரஹ்) அவர்களும் இந்த வசனத்திற்கு விரிவுரையாக இந்தக் கருத்தையே வலியுறுத்தி ஹிஜ்ரி காலண்டரையே முஸ்லிம்கள் பயன்படுத்த வேண்டும் என கூறுகின்றனர்.

மேலும் இதற்கு வலு சேர்க்கும் விதமாக தன்னுடைய திருமறையின் மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:

“(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன.” (அல்-குர்ஆன் 2:189).

அதாவது முஸ்லிம்கள் தங்களின் மார்க்க கடமைகளான நோன்பு, ஹஜ், இத்தாவைக் கணக்கிடும் காலக்கெடுகள், கொடுக்கல்-வாங்கல் கணக்குகள் போன்ற காரியங்களை செயலாற்றுவது முதற்கொண்டு தங்களின் அனைத்துவிதமான செயல்களையும் சந்திரக் கணக்கீட்டின்படி அமைந்துள்ள ஹிஜ்ரி காலண்டரையே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருப்பதை தெள்ளத்தெளிவாக அறியமுடிகிறது.

இந்த வசனத்திற்குரிய விளக்கவுரையில் ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களும் மேற்கூறப்பட்டக் கருத்தையே வலியுறுத்தி முஸ்லிம்கள் சந்திரக்கணக்கின் படி தமது அலுவல்களை அமைத்துக்கொள்ளவேண்டும் என கூறுகிறார்.

மேலும் சந்திர காலண்டரின் ஒவ்வொரு மாதத்தின் நாட்களையும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகியவற்றைக்கொண்டு எளிதாக அறியலாம். அதுபோல் மாதத்தின் ஆரம்பம் மற்றும் முடிவுகளையும் பிறை தென்படுவது அல்லது மறைந்து விடுவது ஆகியவற்றை அடையாளகமாகக் கொண்டு அறியலாம். ஆனால் கிரிகோரியன் காலண்டர், அனுமானத்தின் அடிப்படையிலும் கணிப்பீட்டின் அடிப்படையிலும் கணக்கிடப்படுவதால் மக்களால் எளிதில் காணப்படும் அடையாளங்கள் எதுவும் இதில் இல்லை! மேலும் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது. மாதங்களின் நாட்களின் எண்ணிக்கை 28, 29, 30 மற்றும் 31 என பலவாறாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட காள அளவில் எதுவும் இல்லை!

பூமியைச் சுற்றிவரும் சந்திரனின் சுழற்ச்சி மற்றும் நகர்வுகள்!

சந்திரன் காலண்டரைப் பொறுத்தவரையில் அதனுடைய நாட்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவில் இருக்கிறது. சந்திரன் ஒருமுறை பூமியை சுற்றிவருவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவு 27.5 நாட்களாகும். இதை ஆங்கிலத்திலே ‘sidereal month’ என்று கூறுவார்கள். ஆனால் இந்தக் கால அளவில் பூமியும் ஒரே இடத்திலே நிலை கொண்டிருக்காமல் சூரியனைச் சுற்றிவருவதால் சிறிது நகர்ந்திருப்பதால், சந்திரன் முன்னர் தான் இருந்த இடத்தை அடைவதற்கு 29.5 நாட்களாகிறது.

இன்னொரு வார்த்தையில் கூறவேண்டுமானால், நாம் பூமியிலிருந்து பார்க்கும் போது ஒரு இடத்தில் சந்திரன் இருந்து மறுமுறை அதே இடத்திற்கு வருவதற்கு 29.5 நாட்களாகிறது. இதை ஆங்கிலத்தில் ‘synodic month’ என்று கூறுவார்கள். பூமியில் காணப்படும் வளர்பிறை மற்றும் தேய்பிறைகள் எல்லாம் இந்த மாதத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது. மேலும் சந்திரனின் சுழற்ச்சிக்கான கால அளவும் அது பூமியைச் சுற்றிவருவதற்காக எடுத்துக்கொள்ளும் கால அளவும் ஒரே அளவாக இருப்பதால் 29.5 நாட்கள், பூமியில் இருந்து சந்திரனின் ஒரு பகுதியை மட்டுமே நம்மால் பார்க்க இயலும்.  இதை ஆங்கிலத்திலே ‘Synchronous Speed’ என்று கூறுவார்கள்.

சந்திரனின் இந்த சுழற்ச்சியின் அடிப்படையிலேயே சந்திர ஆண்டின் மாதத்தின் நாட்கள் 29 ஆகவோ அல்லது 30 ஆகவோ மாறி மாறி வருகிறது. தற்கால அறிவியலின் இந்த விஞ்ஞான உண்மையைக் குறிக்கும் விதமாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள், தற்போது நவீன அறிவியல் உலகில் இருப்பதைப் போன்ற எவ்வித உபகரணங்களும் இல்லாத; சந்திரனின் சுழற்சியை கணிக்க இயலாத அந்தக் காலக்கட்டத்திலேயே சந்திர மாதத்தின் நாட்களின் எண்ணிக்கையைத் துள்ளியமாகக் கூறியிருக்கிறார்கள்.

“ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்.” அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி); ஆதாரம்: புகாரி

(நபி(ஸல்) அவர்கள் இரண்டு கைவிரல்களையும் மூன்று முறை விரித்து) மாதம் என்பது இவ்வளவுதான் என்று கூறினார்கள். மூன்றாம் முறை கட்டை விரலை மடக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி); ஆதாரம்: புகாரி

நபி (ஸல்) அவர்கள் ‘ஒரு மாதம் தம் மனைவியருடன் சேர்வதில்லை’ என்று சத்தியம் செய்திருந்தார்கள். இருபத்தி ஒன்பது நாள்கள் முடிந்தும் (இல்லம்) திரும்பினார்கள். அவர்களிடம் ‘நீங்கள் ஒருமாதம் (வீட்டிற்கு) வரமாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்களே! என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் அமையும்!” என்றார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி; ஆதாரம்: புகாரி

“துல்ஹஜ், ரமலான் ஆகிய பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல் குறையாது.” அறிவிப்பவர்: அபூ பக்ரா(ரலி); ஆதாரம்: புகாரி

“நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!” அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி); ஆதாரம்: புகாரி

“ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்கும்.” அறிவிப்பவர்: உமர் (ரலி); ஆதாரம்: முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் (ரமளான் பற்றிக் கூறுகையில்) “மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்” என்று கூறி, பத்து + பத்து + ஒன்பது (=இருபத்தொன்பது) என்று (கைகளால் சைகை செய்து) கூறினார்கள்.’ அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி); ஆதாரம்: முஸ்லிம்

சந்திரன் மற்றும் சூரியனின் சுழற்ச்சி மற்றும் நகர்வுகள் பற்றிய தற்கால அறிவியல் உண்மைகளை நபி (ஸல்) அவர்களின் கூற்றோடு நாம் ஒப்பிடும் போது மெய்சிலிர்த்துப் போகிறோம். சந்திர ஆண்டுக் கணக்கின் படி மாதத்தின் நாட்களின் அடிப்படையான 29 அல்லது 30 என்பது எதன் அடிப்படையில் அமைகின்றது என்பதை நாம் சற்று சிந்தித்தாலே பிறைக் குழப்பங்களினால் நமது சமுதாயம்படும் பெரும்பாட்டைத் தவிர்க்கலாம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் சமுதாய மக்களுக்கு இதில் போதுமான தெளிவைத் தந்தருளவேண்டுமென பிரார்த்திப்போமாகவும்.

மாதங்களின், கிழமைகளின் பெயர்களில் இருக்கும் மூட நம்பிக்கையிலான மத நம்பிக்கைகள்!

நாம் மேலே படித்தவனின்றும் தெள்ளத்தெளிவாக விளங்குவது என்னவென்றால் தற்போது நாம் பயன்படுத்திவரும் கிரிகோரியன் காலண்டர்களில் மாதங்கள் மற்றும் கிழமைகளின் பெயர்களில் பெரும்பாலும் பண்டைய ஐரோப்பிய, கிரேக்கர்களின் மூடநம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த கடவுள் நம்பிக்கை பொதிந்திருப்பதை அறிகிறோம். முஸ்லிம்களாகிய நமக்கும் இந்த நம்பிக்கைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதோடு மட்டுமல்லாமல் ஒரு உண்மையான முஸ்லிம் இறைவனுக்கு இணைவைக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த இவற்றைப் பயன்படுத்துவதிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும்.

கிரிகோரியன் காலண்டரின் புதுவருடப் பிறப்பு விழாக்களை முஸ்லிம்கள் கொண்டாடலாமா? அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கலாமா?

குஃப்ரில் இருப்பவர்களின் பண்டிகைகளான ‘கிறிஸ்துமஸ்’ புதுவருடப் பிறப்பு, பிறந்த தின விழாக்கள் மற்றும் இன்ன பிற மார்க்க விஷேங்களில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டதாகும். ஏனெனில் அவ்வாறு வாழ்த்து தெரிவிக்கும் முஸ்லிம் ஒருவர், அந்த சமயத்தின் குஃப்ரான காரியங்களை ஏற்றுக்கொள்ளாத போதிலும் அவ்வாறு செய்யும் போது அது அவர்களுடைய குஃப்ரான செயல்களுக்கு அங்கீகாரம் அளித்து அவற்றை ஊக்குவிப்பது போலாகும். அதைப்போலவே, முஸ்லிம் ஒருவர் அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளாத ஒருவரின் பண்டிகை தினங்களில் வாழ்த்து தெரிவிக்காததோடல்லாமல் அவர்களுடைய அந்த செயலை தாமும் பின்பற்றுவது எவ்விதத்திலும் கூடாது. இவ்வாறு அறியாமையில் செய்பவர்கள் அந்நாட்களைச் சிறப்பித்து அவற்றிலே அன்பளிப்புகளாகக் கொடுக்கின்ற உணவுகளை, தின்பண்டங்களை நாம் சாப்பிடுவதும் கூடாது.

பண்டைய கிரேக்க மற்றும் ஐரோப்பிய மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த, கிறிஸ்தவ போப் ஆண்டவர் தயாரித்த கிரிகோரியன் காலண்டரின் அடிப்படையிலான புதுவருடப் பிறப்பை அறியாமையினால் முஸ்லிம்களில் பெரும்பாண்மையினரும் விமர்சையாக கொண்டாடுகின்றனர். மேலும் இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளுக்கு மாற்றமாக, ஒரு முஸ்லிமை அவனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக் கூடிய நம்பிக்கையிலான, மாபெரும் இணைவைப்பு நம்பிக்கை கலந்த இந்த கிரிகோரியன் காலண்டரின் அடிப்படையில் அமைந்த இந்த புதுவருடப் பிறப்பு தினத்தை சிறப்பித்து இந்நாளில் நல்ல காரியங்களைச் செய்தால் வாழ்வில் சுபிட்சம் பெறுவோம் என்று நம்புகின்றனர்.

அத்தகைய நம்பிக்கைகளில் சில:

  1. இந்நாளில் புதிய துணிகள் உடுத்தி நல்ல உணவுகள் சமைத்து சாப்பிடுவதன் மூலம் வருடமெல்லாம் சந்தோசமாக இருக்கலாம் என நம்புகின்றனர்.
  2. இந்நாளில் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கின்றனர்.
  3. சில முஸ்லிம் நாடுகளின் அரசாங்கமே இந்நாளை கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழித்து வாணவேடிக்கைகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் போன்ற அனாச்சாரங்களை செய்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன்’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
One thought on “புதுவருடப்பிறப்பு கொண்டாட்டங்களும் முஸ்லிம்களின் நிலையும்”
  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    மிக நல்ல, பயனுள்ள தகவல்கள் நிறைந்ததாக இருக்கும் தங்களது தளத்தில் “சந்திர நாட்காட்டி” எனும் பகுதி மார்க்கத்தில் இல்லாத & அறிவியலுக்கு எதிரான ஒரு காலண்டரை ஆதரிப்பதாக இருப்பது வேதனை தருகிறது.

    அந்த காலண்டரில் இருக்கும் விஞ்ஞான பிழைகளையும், ஒரே பிறையின் கீழ் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் குர்ஆன் ஹதீஸ்களை வளைத்திருப்பதையும் உங்கள் பார்வைக்காக கொண்டுவருகிறோம். இவற்றை வாசித்துவிட்டு தங்கள் தளத்தில் இருக்கும் அத்தகைய ஆக்கங்களை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்

    ஹிஜ்ரி கமிட்டி காலண்டரின் பிழைகள்! >> http://www.piraivasi.com/2015/03/1.html
    கமிட்டியினரின் தேதிக்கோடு >> http://www.piraivasi.com/2015/03/committeedateline.html
    கமிட்டியினர் முன்னோக்கும் தீர்க்க ரேகை >> http://www.piraivasi.com/2015/03/committeeQibla.html
    எது சரியான கிப்லா? >> http://www.piraivasi.com/2015/09/hijiri-committee-qibla.html
    இரண்டு உதயங்கள்!! இரண்டு மறைவுகள்!! >> http://www.piraivasi.com/2015/03/rabbulmashrikain.html
    திரிக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள்-1 >> http://www.piraivasi.com/2015/08/20.html
    திரிக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள்-2 >> http://www.piraivasi.com/2016/02/20-2.html
    திரிக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள்-3 >> http://www.piraivasi.com/2016/05/20.html
    மாநபியின் அரபா வெள்ளிகிழமையே! >> http://www.piraivasi.com/2015/11/29.html
    ஹிஜ்ரி ஆண்டுமானம் இஸ்லாமிய ஆண்டுமானமா? >> http://www.piraivasi.com/2016/01/1.html

    அன்புடன்
    பிறைவாசி.காம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *