ஜக்காத், ஸதகா வேறுபாடு என்ன?
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
– ஜக்காத் என்பது ஒருவர் தம்முடைய பொருள்களிலிருந்து இஸ்லாமிய ஷரீஅத் வரையறுத்துள்ளபடி குறிப்பிட்ட சிலருக்கு கொடுப்பதன் மூலம் செய்யும் ஒரு இறை வணக்கமாகும்.
– ஸதகா என்பது இஸ்லாமிய ஷரீஅத்தின் படி கடமையாக இல்லாவிட்டாலும் ஒருவர் தம்முடைய பொருள்களிலிருந்து பிறருக்கு கொடுப்பதன் மூலம் செய்யும் ஓர் இறை வணக்கமாகும். சில சமயங்களில் கடமையான ஜக்காத்தும் ஸதகா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
– ஜக்காத் என்பது தங்கம், வெள்ளி, பயிர்கள், பழங்கள், வியாபார பொருட்கள், ஒட்டகம், ஆடு, மாடு போன்ற கால் நடைகள் ஆகிய குறிப்பிட்ட பொருட்களுக்காக ஷரீஅத் வரையறுத்துள்ள குறிப்பிட்ட அளவின்படி கொடுக்கப்படுவதாகும்.
– ஸதகா என்பது குறிப்பிட்ட ஒரு பொருள் என்றில்லாமல் ஒருவர் எந்தப் பொருளையும் இறைவழியில் செலவழிப்பதாகும். இதற்கு இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்பது வரையறை இல்லை.
– ஜக்காத் என்பது ஒருவரின் செல்வம் ஒரு குறிப்பிட்ட அளவை (நிஸாப்) அடைந்து ஒரு ஹிஜ்ரி ஆண்டு பூர்த்தியாகிவிட்டால் அவர் மீது கடமையாகும்.
– ஸதகா என்பதற்கு ஒரு குறிப்பிட்ட விதிமுறைகள் கிடையாது. ஒருவர் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
– ஜக்காத் என்பது இறைவன் வரையறுத்துள்ள (9:60) ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு கொடுப்பதாகும். இந்தப் பிரிவினர்களைத் தவிர வேறு யாருக்கும் ஜக்காத்தைக் கொடுப்பதற்கு அனுமதியில்லை.
– ஸதகா என்பது இறைவன் ஜக்காத்துக்காக வரையறுத்துள்ள பிரிவுகள் மட்டுமின்றி பிறருக்கும் கொடுக்கலாம்.
– ஜக்காத் கடமையான நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவரது வாரிசுகள் அவருடைய சொத்துக்களை பங்கிடுவதற்கு மற்றும் அவரது மரண சாசணத்தை நிறைவேற்றுவதற்கு முன்னரே கடமையான ஜக்காத்தை இறந்தவரின் சொத்திலிருந்து முதலில் நிறைவேற்ற வேண்டும்.
– ஸதகா என்பதில் அவ்வாறான கடமை எதுவும் இல்லை.
– ஜக்காத் கொடுக்காவிட்டால் மறுமையில் தண்டணைகள் உண்டு.
– ஸதகா கொடுத்தால் நன்மைகளைப் பெற்றுத்மருமேயல்லாது கொடுக்காவிட்டால் குற்றமாகாது.
– ஜக்காத்தை பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி ஒருவர் தனது பெற்றோர்களுக்கோ, அல்லது பெற்றோர்களின் பெற்றோருக்கோ அல்லது தமது வாரிசுகளுக்கோ கொடுக்கக் கூடாது.
– ஸதகா என்பதை இவர்களுக்கும் கொடுக்கலாம்.
– ஜக்காத்தை இறை நிராகரிப்பாளர்களுக்கோ அல்லது இணை வைப்பவர்களுக்கோ கொடுப்பதற்கு அனுமதியில்லை.
– ஸதகாவை நிராகரிப்பவர்களுக்கும், இணை வைப்பவர்களுக்கும் கொடுக்கலாம்.
இவைகளே ஜக்காத் மற்றும் ஸதகாவிற்கான பொதுவான வேறுபாடுகளாகும். மேலும் ஸதகா என்பது எல்லா நற்செயல்களையும் குறிக்கக் கூடிய பரந்த பொருளுடையதாக இருக்கிறது.
“எல்லா நற்செயலும் தர்மமே” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி).
இமாம் நவவி (ரஹ்) அவர்கள் “எல்லா நற்செயலும் தர்மமே” என்பதற்கு விளக்கமளிக்கையில் நற்செயல்களுக்கு ஸதகா செய்ததற்கான நற்கூலி கிடைக்கும் என்றார்கள்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.