முதல் பாவம், பாவமீட்சி – இஸ்லாம் என்ன கூறுகிறது?

நம்முடைய ஆதி பிதா ஆதாம் (அலை) மற்றும் அன்னை ஏவாள் (அலை) அவர்கள் செய்த முதல் பாவத்தின் (Original Sin) காரணமாக இறுதி நாள் வரை அவர்களுடைய சந்ததியினர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் அனைத்தும் பாவத்துடனே பிறக்கின்றன என்றும் நம்முடைய பாவங்களை நீக்குவதற்காகவே இயேசு நாதர் சிலுவையில் உயிர் நீத்தார் என்றும் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்றது. மேலும் இதுவே கிறிஸ்தவத்தின் உயிர் நாடியாகவும் இருக்கிறது. ஆனால் இஸ்லாம் மார்க்கம் இதற்கு மாற்றமான கருத்தைக் கொண்டுள்ளது. பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் பாவமற்ற நிலையில் முஸ்லிமாகவே பிறக்கிறது என்றும் அக்குழந்தையின் பெற்றோர்களே அக்குழந்தையை யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ அல்லது இன்ன பிற மதத்தினராகவோ வளர்க்கிறார்கள் என்றும் கூறுகிறது.

மேலும் இஸ்லாம் மார்க்கம் என்பது இயற்கையான மார்க்கம் என்பதால் மனிதனின் இயற்கை குணங்களை எடுத்துக் கூறுகிறது. மனிதன் என்பவன் பாவம் செய்யும் குணமுடையவன் என்றும் ஆனால் எவர்கள் தம்முடைய பாவத்திற்கு இறைவனிடம் மன்னிப்புக் கோருகிறாரோ அவரே மனிதர்களில் சிறந்தவர் என்றும் கூறுகிறது.

‘எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்பு தேடுபவர்களே!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரரம் : திர்மிதி.

ஆதாம் (அலை) மற்றும் ஏவாள் (அலை) அவர்களுடைய பாவச் சுமையை அவர்களின் சந்தததியினர் சுமந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கிறிஸ்தவம் கூறிக்கொண்டிருக்க இஸ்லாம் மார்க்கமோ ஆதாம் (அலை) மற்றும் ஏவாள் (அலை) அவர்கள் இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினார்கள் என்றும் அதனால் இறைவன் அவர்களை மன்னித்து விட்டான் என்றும் கூறுகிறது. மேலும் அவர்களின் சந்ததியினர் செய்கின்ற பாவங்களுக்காக அவர்கள் பாவமன்னிப்பு கோரினால் இறைவன் மன்னித்து விடுகிறான் என்றும் இஸ்லாம் கூறுகிறது.

இறைவன் கூறுகிறான் : –

“அப்போது ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று (அறிந்து) கொண்டார். (அந்தச் சொற்கள் முலம் மன்னிப்பு கேடடார்) அவரை அவன் மன்னித்தான்” (அல்குர்ஆன் 2:37)

மேலும் இறைவன் கூறுகிறான் : –

“ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்” (அல்-குர்ஆன் 66:8)

ஒருவரின் பாவ சுமையை இன்னொருவர் சுமக்க மாட்டார்!

“பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது” (அல்-குர்ஆன் 6:164)

“எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்” (அல்-குர்ஆன் 17:15)

“(மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அழைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் – அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது” (அல்-குர்ஆன் 35:18)

இதையே பைபிளும் பின்வருமாறு கூறுகிறது!

“பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்” (உபாகமம் 24:16)

இறைவன் மன்னப்பவன், மிகப் பெரும் கிருபையாளன்: –

“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக” (அல்-குர்ஆன் 39:53)

இறைவன் மன்னிப்பவனாகவும்,மிகப்பெரும் கிருபையாளனாகவும், அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவனாகவும் இருப்பதால் ஒருவர் தன் வாழ்க்கையில் செய்த தவறுகளுக்காக இறைவனுடைய அருளின் மேல் நம்பிக்கை இழக்கக் கூடாது.

இஸ்லாம் மார்க்கத்தில் சேருவதால் ஏற்படும் நன்மைகள்!

ஒருவர் இஸ்லாம் மார்க்கத்திற்கு திரும்பும் போது அவர் முன் செய்த அனைத்து பாவங்களையும் இறைவன் மன்னிக்கின்றான்.

“அம்ர் என்ற ஒருவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் வந்து உங்களுடைய வலது கையை கொடுங்கள்! நான் என்னுடைய உறுதி மொழியை தருகிறேன் என்று கூறிய போது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வலது கையை நீட்டினார்கள். அப்போது அம்ர் அவர்கள் தன்னுடைய கையை எடுத்துக்கொண்டார்கள். (அப்போது) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அம்ரிடம் உமக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டபோது, நான் ஒரு நிபந்தனை இட வேண்டும் என பதிலளித்தார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அம்ரிடம் என்ன நிபந்தனையை முன் வைக்க விரும்புகிறாய்? என்று கேட்ட போது ‘இறைவன் என்னுடைய பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று கூறினார்கள். (அதற்கு) முஹம்மது நபி (ஸல்) அவர்கள், ஒருவர் இஸ்லாம் மார்க்கத்திற்குத் திரும்பும் போது அவருடைய முன்பாவங்களை அல்லாஹ் அழித்துவிடுகிறான் என்று உமக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

நற்செயல்களை செய்வதற்கு நினைத்தாலேயே நன்மைகள் கிடைக்கும்!

ஒருவர் இஸ்லாம் மார்க்கத்திற்குத் திரும்பிய பிறகு அவரின் நல்ல மற்றும் தீய செயல்கள் கணிக்கப்படுகின்றன. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: –

‘உங்கள் இறைவன் மகத்தானவன்! மிகவும் கிருபையாளன். ஒருவர் நற்செயல் புரிவதாக நினைத்து பிறகு அதை செய்யவில்லை எனில் அது அவருக்கு ஒரு நற்செயல் புரிந்ததாக எழுதப்படும். அதை அவர் செய்து விட்டால் பத்து முதல் 700 மடங்கு அல்லது அதற்கு அதிகமான நன்மைகள் எழுதப்படும்.

அதே போல் ஒருவர் ஒரு தவறான செயல் செய்ய நினைத்து அதை அவர் செய்யவில்லை எனில் ஒரு நற்செயல் செய்ததாக எழுதப்படும். அதை அவர் செய்து விட்டால் ஒரே ஒரு தீமை அவரின் மீது ஒழுதப்படும். அல்லது இறைவன் அதையும் அழத்துவிடுவான். (ஆதாரம் : முஸ்லிம்)

அருஞ்சொற்பொருள்:-

ஈமான் =இறை நம்பிக்கை
தவ்பா = பாவ மன்னிப்பு கோருதல்
ரஹ்மத் = அருள்

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By சகோதரர் M. அன்வர்தீன்

வசிப்பிடம் :அல்-கப்ஜி, சவூதி அரேபியா; தாயகம்: புது ஆத்தூர், தமிழ் நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *