நிச்சயிக்கப்பட்ட பெண்களைப் பார்ப்பதின் வரையரைகள்
திருமணத்தை ஆகுமாக்கிய மார்க்கம் இஸ்லாம்:-
இறைவனால் தன்னை வணங்குவதற்காகவே படைக்கப்பட்ட இனங்களில் மனித இனம் சிறப்பானது! இவ்வினத்தைப் படைத்த இறைவன் இவ்வுலகில் வாழ்வதற்கு தேவையான எல்லா வஸ்துக்களையும் வசப்படுத்தி கொடுத்து மனிதனது விருப்பு வெறுப்புக்களையும் தட்டிக் கழிக்காது என்னிடங்கா அருட் கொடைகளையும் வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான்.
மனிதனை ஒரு ஆண் மற்றும் பெண்ணிலிருந்து இரு இனங்களாக படைத்த அந்த இறைவன் அந்த இரு இனமும் சங்கமிக்கும் திருமணம் எனும் வரப்பிரசாதத்தையும் ஆகுமாக்கியுள்ளான்.
“உங்களில் வாழ்கை துணையில்லாதவருக்கும், உங்களுடைய ஆண் அடிமைகளுக்கும், இன்னும் நல்லொழுக்கமுள்ள அடிமைப் பெண்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன்னுடைய பேரருளைக் கொண்டு அவர்களை செல்வந்தர்களாக்கி வைப்பான். மேலும் அல்லாஹ் மிக்க விசாலமானவன் நன்கறிந்தவவன்” (சூரதுன் நூர் 32)
என அல்லாஹ் தன் திருமறையயில் திருமணத்தை ஆகுமாக்குவதை காணலாம். அவ்வாறே அவனால் அனுப்பப்பட்ட நபிமார்களும் திருமணம் முடித்து குடும்பம் நடத்தியவர்களாகவே அதிகமானகவர்களை நம்மால் கண்டு கொள்ள முடிகிறது.
குறிப்பாக இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூட இந்த வழிமுறையை எடுத்துக் கொண்டதோடு முழு இளைஞர் சமுதாயத்தையும் பார்த்து,
“வாலிபர்களே உங்களில் யார் (உடல் மற்றும் ஏனைய) சக்தி பெறுவாரோ அவர் திருமணம் முடித்துக் கொள்ளட்டும். நிச்சயமாக அது (திருமணம் கற்பைக் காத்துக் கொள்வதற்கும் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுவதற்கும் (போதுமானது)” (புகாரி 5065, முஸ்லிம் 1400)
என தெளிவாகவே திருமணம் முடித்துக் கொள்ளும் படியும் அதனால் ஏற்படக்கூடிய பிரதிபலன்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்கள்.
இவ்வாறு இஸ்லாமிய சட்ட மூலத்தின் அடிப்படைகளே திருமணத்தைப் பற்றி தெளிவுபடுத்திக் கொண்டிருக்க இன்று எத்தனையோ மதங்கள் தங்களது மதப் பெரியார்களுக்கு இந்த மனித உரிமையை வழங்காது இருப்பது வேடிக்கையானது.
இதன் விளைவாக மதகுருமார்களினதும் பாதிரிமார்களினதும் சில்மிஷங்கள், கற்பழிப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் என்ற தலைப்புக்களில் நாளாந்தம் ஊடகங்களில் அரகேற்றப்படுகின்றன. இவற்றை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம் கிடையாது என்றாலும் இஸ்லாம் வழங்கியிருக்கக் கூடிய இவ்வடிப்படை உரிமையை சில முஸ்லிம்களே புரிந்து கொள்ளாது இருப்பதை கண்டுகொள்ளாமல் இருந்து விட முடியாது.
எனவே வாழ்க்கையில் “சாதித்து விட்டுத்தான் திருமணம்” என சாக்குப்போக்கு சொல்லுபவர்கள் திருமணம் முடித்து வாழ்ந்து காட்டுவதும் ஒரு சாதனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கடமையாக்கப்பட்ட திருமணத்தின் மூலம் ஒரு பெண்ணை அடைந்து கொள்ள முயலும் ஒரு ஆணுக்கு நிச்சியக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதன் சட்டங்களை நோக்குவோம்.
பொதுவாகவே பெரும்பாண்மையான உலமாக்கள் பெண்ணைப் பார்ப்பதற்கு அனுமதி வழங்குகின்றனர். பின்வரும் சான்றுகளைக் கொண்டு இக்கருத்தை உறுதி செய்ய முடிகிறது.
நபி (ஸல்) அவர்களை விழித்து அல்லாஹ் கூறுகின்றான்:
“பின்னர் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர வேறு பெண்கள் உமக்கு ஆகுமாக்கப்படவில்லை. இன்னும் அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் அவர்களை (உம்முடைய மணைவியராக) இவர்களைக் கொண்டு நீர் மாற்றிக் கொள்வதும உமக்கு (அனுமதி) இல்லை. அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் கண்காணிக்கின்றவனாக இருக்கின்றான்” (சூரதுல் அஹ்ஸாப் 52)
இங்கு அல்லாஹ் பெண்களின் அழகு கவரப்படுவதாக கூறுகின்றான். உண்மையில் அழகு ‘பார்ப்பதன் மூலம் தான் புலப்படும்’ என்பது வெள்ளிடைமலை! எனவே ‘நிச்சியிக்கப்பட்ட பெண்ணைப் பார்க்க முடியும்’ என விளங்க முடிகின்றது.
இவ்வாறே அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் ஒரு செய்தியில்,
“நான் நபியவர்களிடம் இருந்த போது அவரிடம் ஒரு மனிதர் வந்து அவர் அன்ஸாரிப் பெண்ணை திருமணம் முடித்தாக (நிச்சியிக்கப் பட்டதாக) கூறினார். அவரிடம் நபியவர்கள், ‘நீர் அவளைப் பார்த்தாயா?’ ஏன வினவவே அவரோ ‘இல்லை’ என்றார். ‘சென்று அவளைப் பார்ப்பீராக! நிச்சியமாக அன்ஸாரிகளின் கண்களில் ஏதோ உண்டு’ என நபியவர்கள கூறினார்கள்.” முஸ்லிம் 1424, நஸாயி 6:69
அவ்வாறே ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“நபியவர்கள் சொன்னதை நான் கேட்டேன், ‘யார் ஒருவர் பெண்ணை நிச்சியிக்க முற்படுகிறாரோ அவர் அவளின் சில உறுப்புக்களை பார்கக முடியுமானால் பார்த்துக் கொள்ளட்டும்” அபூதாவுத் 2082, அஹ்மத் 3:360 (ஹதீஸின் சுருக்கம்)
இவ்வாறு பல செய்திகள் நபியவர்களைத் தொட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளமையால் பெண்ணைப் பார்ப்பது ஆகுமாக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றது.
அதேவேளை இமாம் மாலிக்கைத் தொட்டும், ‘நிச்சியிக்கப்பட்ட பெண்ணைப் பார்க்க முடியாது’ என்ற கருத்தை ‘காபி’ என்ற நூலில் இமாம் இப்னு அப்துல் பர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இவர் இக்கருத்தை கூறக் காரணம் பொதுவாக பல்வேறு ஹதீஸ்கள் பெண்களைப் பார்ப்பதை தடை செய்துள்ளதை ஆதாரமாகக் கொள்கின்றார். என்றாலும் பிரத்தியோகமாக நிச்சியிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதற்கு மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் காணப்படுவதனால் ‘முடியாது’ எனும் கருத்து வலு இழந்து போகிறது.
எந்த இடங்களை பார்க்களாம்?
பொதுவாக பெண்கள் வெளிப்படுத்தக் கூடிய இரு கைகளையும் மற்றும் முகத்தைப் பார்ப்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. என்றாலும் பெரும்பாண்மையான உலமாக்கள் இவ்விரு உறுப்புக்களையும் பார்ப்பதுடன் சுருக்கிக் கொள்ளவேண்டும் என்கின்றனர். ஆனால் ஹன்பலி மத்ஹபின் கருத்துப்படி, இரு கைகள், கால் மற்றும் ஒரு பெண் சாதாரனமாக வீட்டில் இருக்கும் போது வெளிக் காட்டிக் கொண்டிருக்கும் உறுப்புக்களைப் பார்க்கலாம் என்கின்றனர்.
இக்கருத்துக்கு ஆதாரமாக நபியவர்கள் விஷேஷமாக பெண்ணைப் பார்க்கும் படி ஏவியிருப்பதில் இருந்து அவள் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இரு கைகளையும் முகத்தையும் பார்ப்பதைச் சொல்லவரவில்லை மாறாக அவள் வீட்டில் இருக்கும் போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உருப்புக்களைப் பார்ப்பதைக் குறிக்கும் என்கின்றனர்.
அதேவேளை அல்அவ்சகி அவர்கள் பெண்ணின் அவயங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பார்க்கலாம் என்கின்றார்.
மேலும் தாவுத் அல்லாஹிரி மற்றும் இப்னு ஹஸ்ம் போன்ற இமாம்கள் ‘பெண்ணின் முழு உடம்பையும் பார்க்கலாம்’ என ‘நபியவர்கள அவளைப் பார்ப்பீராக’ என சொன்னதை வைத்து ‘எல்லாவற்றையும் பார்தக்கலாம்’ என கூறுகின்றனர்.
இவ்வாறு நான்கு கருத்துக்கள் இருந்த போதிலும் பெரும்பாண்மையான உலமாக்களின் கருத்தான முதலாவது கருத்தே ஏற்றமானது எனலாம். காரணம் இரு கைகள் முகம் என்பவற்றைத் தாண்டி ஒரு பெண்ணைப் பார்ப்பதன் மூலம் வேறு விதமான குற்றச் செயல்கள் நடப்பதற்கு காரணமாக அமைந்து விடும் என்பதை நான் சொல்லித் தான் நீங்கள் அறிய வேண்டியதில்லை.
எனவே இதிலிருந்து நிச்சியிக்கப்பட்ட பெண்ணை சில வரையரைகளுடன் பார்க்க வேண்டும். அது நபி வழியாகும் என்பதை விளங்குகின்றோம்.
இன்று சில சகோதரர்கள் அவள் அஜ்னபி பெண்! அவளை எவ்வாறு பார்ப்பது? என கேள்விகளைக் கேட்டுக் கொண்டு நபிவழிக்கு மாற்றமாக குருட்டுத் திருமணம் செய்கின்றனர். இது பிழையான விஷயமாகும். காரணம் இவ்வாறு ஒரு பெண்ணை பார்க்காமல் திருமண பந்தத்தில் இணைவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளை திருமணத்திற்குப் பின்னால் எதிர்நோக்கலாம். ஓவ்வொரு மனிதனுக்கும் தனது துணை இப்படி ‘இப்படியெல்லாம் இருக்க வேண்டும்’ என்ற எதிர் பார்ப்புக்கள் இருக்கலாம். இவ்வெதிர் பார்ப்புக்கள் திருமணத்திற்கு முன்னர் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் திருமண வாழ்க்கை ஜொலிக்கும்.
இதேவேளை இன்றும் சிலர், நபியவர்கள் பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள் தானே என சொல்லிக் கொண்டு முடியைப் பார்ப்பது, நடையைப் பார்ப்பது என பட்டியலை நீட்டிக் கொண்டு செல்வார்கள். இக்கருத்தை உடையவர்களும் நபியவர்கள் பார்க்கச் சொன்னது ‘வரயறுக்கப்பட்டது’ என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கும் மேல் ஒருவருக்கு ‘கட்டாயம் சில விடயங்களைப் பார்த்தே ஆகவேண்டும்’ என்ற தேவை ஏற்பட்டால் ஆணின் சகோதரி அல்லது தாயின் மூலமாக இவ்விடயங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர பெண் பார்க்கும் படலத்தை பெரும் ‘பரீட்சை மண்டபம்’ போன்று ஆக்கிக் கொண்டு குறித்த பெண்ணை துருவித் துருவி ‘நீண்டநேரம் பார்க்கக் கூடாது’. காரணம்,
“ஒரு பெண்ணும் ஆணும் தனித்து இருக்கும் போது ஷைதான் மூன்றாவது நபராக இருக்கின்றான்” அஹ்மத் 01:18, திர்மதி 1171
எனக் கூறியுள்ள செய்தியை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேவேளை நபியவர்கள் ஆணும் பெண்ணுமாக தனித்திருப்பது அனுமதித்ததாக கான முடியவில்லை. மாறாக,
“ஒரு ஆண் பெண்ணோடு தனித்திருக்க நேரிட்டால் குறித்த பெண்ணின் நெருங்கிய உறவுக்காரர் இல்லாமல் தனித்திருக்க வேண்டாம்” புகாரி 3006, முஸ்லிம் 1341
என பொதுவாகவே நபியவர்கள் வழிகாட்டியுள்ளமை பெண்பார்க்கும் படலத்திட்கும் பொருந்தும் என நினைக்கின்றேன்.
எப்போது பெண் பார்க்கவேண்டும்?
ஒரு ஆண் தான் திருமணம் முடிக்க எல்லா வகைகளிலும் தயார் என்பதில் உறுதியான பின்னர் தனது துணையை தேர்வு செய்வதற்கு முற்பட வேண்டும் இதற்கு மாற்றமாக திருமணம் முடிப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன்னிருந்தே நாற்பது வீட்டிற்கு ஏறி இறங்கி ‘பெண் பார்க்கின்றோம்’ என்ற பெயரால் வீண் விரயமாக பணத்தை இரைத்து பெண்மக்களைப் பெற்ற பெற்றோரின் வயிற்றிலும் அடிக்கும் நடவடிக்கையை நமது சமூகம் விட்டு விட வேண்டும்.
இந்நடைமுறையானது பொருளாதார ரீதியில் மாத்திரமின்றி ஒரு ஆண் ஏதோ ஒரு பெண்ணை பார்த்து விட்டு வந்து விட்டு தனக்கு இப்பொழுது திருமனம் முடிக்க முடியாது என்பதை நேரடியாக சொல்லாமல் ‘பெண் கொஞ்சம் உயரம் அல்லது கட்டை, நிறம் கொஞ்சம் குறைவு’ என்றெல்லாம் இலேசாக சொல்லி விடும்போது ‘சம்பந்தப்பட்டப் பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றாள்’ என்பதனையும் நமது மாப்பிள்ளைமார்கள் மற்றும் அவரது வீட்டார்கள் மறந்து விடுகின்றனர்.
பெண்ணின் அனுமதி கேட்க வேண்டுமா?
பெண் பார்ப்பதற்கு ‘குறித்த பெண்ணின் அனுமதி கேட்கத் தேவையில்லை’ என்பது பெரும்பாண்மையான உலமாக்களின் கருத்தாகும்.
இமாம் மாலிக் அவர்கள் பெண்ணுக்கு அறியப்படுத்தியப் பிறகு பார்த்தால் அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்கு முடியுமாக இருக்கும் என கூறிய போதிலும் பெரும்பாண்மையான உலமாக்களின் கருத்து மிகவும் ஏற்றதாகத் தெரிகின்றது.
காரணம் ஒரு ஆண் ஒருவேளை பெண்ணை விரும்பலாம்; அல்லது விரும்பாமலும் இருக்கலாம். விரும்பவில்லை என்றாலும் கூட குறித்த பெண்ணுக்கு விடயம் தெரியாததால் அவளுக்கு உலவியல் ரீதியான தாக்கங்கள் ஏற்படப் போவதில்லை. எனவே பெண்ணின் அனுமதியில்லாமலும் குறித்த பெண்ணை பார்ப்பதற்கு ஆணுக்கு அனுமதிக்க முடியும். அதே வேளை இந்த விடயத்தில் பெண்ணை ‘இச்சையோடு பார்ப்பது’ மார்க்கத்தில் கண்டிக்கப்பட்ட அம்சங்களாகும்.
நிழற்படத்தின் மூலம் (Photo) நவீன கருவிகள் (Video, Messenger) போன்றவற்றினூடாக பெண் பார்க்க முடியுமா?
பொதுவாக நபியவர்கள் பெண்ணைப் பார்ப்பதற்கு அனுமதித்த செய்திகளில் இருந்து மேற்குறிப்பிட்ட நவீன ஊடகங்களின் ஊடாக அவளைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்க முடிகின்றது. இது விடயத்தில் மிகவும் தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியாகவும் இருக்கும் பட்சத்தில் அனுமதிக்க முடிகின்றது. என்றாலும் இன்றைய சூழலில் அதிகமான தில்லுமுல்லுகள் ‘தங்கையைக் காட்டி அக்காவைக் கொடுக்கும்’ கில்லாடி வேலைகள் இடம் பெறுவதாலும் தரகர்களின் திருவிளையாடல்கள் மலிந்து போய் உள்ளதாலும் இதனை பலர் அனுமதிப்பது கிடையாது.
இஸ்லாத்தில் எந்த விடயத்திலும் ‘ஏமாற்றுதலுக்கு இடமில்லை’ என்பதனை குறித்த தரப்பினர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதேவேளை ‘அனுமதிக்க முடியாது’ என்பவர்களின் வாதத்திற்கு வழு சேர்க்க பின்வரும் விடயங்களை முன்வைக்கின்றனர்.
- நிழற் பிரதியைப் பொருத்த வரையில் ஒரு பெண்ணின் யதார்த்தமான உருவத்தை நவீன கருவிகளைக் கொண்டு பல்வேறு மாற்றங்கள் செய்து அழகு படுத்தலாம்.
- இதற்கு எதிர் மறையாக நேரடியான தோற்றத்திற்கு மாற்றமான அசிங்கமான தோற்றத்தைக் கூட புகைப்படங்கள் ஏற்படுத்தலாம்.
- இவ்வாறான புகைப்படங்கள் அல்லது messenger ஊடாக பெண்ணைப் பார்த்து விட்டு சில நயவஞ்சகர்கள் குறித்த பெண்ணை இனையத்தின் internet ஊடாக கேவலப்படுத்த முனையலாம்.
எனவே இது போன்ற காரணங்களினால் இவ்வாறான நவீன வசதிகளினூடாக பெண் பார்ப்பதை தவிர்த்துக் கொள்வது மிகவும் ஏற்றமானது. வேறு வழியில்லாமல் இவ்வழிகளில் தான் பார்த்து ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இரு தரப்பும் சரியான முறையில் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
பெண்ணுடன் கைக் குலுக்குவது செய்வது அல்லது உறுப்புக்களைத் தொடுவது கூடாது:
இன்று சர்வ சாதாரனமாகிப் போன கைக் குலுக்குவது (hand shaking) செய்வது பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் இடம் பெறுவதையோ உறுப்புக்களைத் தொடுவதையோ இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை. நபியவர்கள் தெளிவாகவே,
“நான் பெண்ணுடன் கைலாகு செய்ய மாட்டேன்” திர்மதி 1597, நஸாயி 4181, இப்னுமாஜா 2874, அஹ்மத் 6:357
என கூறியுள்ளார்கள். நபி வழியை எமது வழியாகக் கொண்டு மேற்கத்தியர்களின் நாகரீகத்திற்கு ஒப்பாகி ஆண், பெண் கைக் குலுக்குவதையும் ஏனைய உறுப்புக்களை தொடுவதையும் தவிர்த்துக் கொள்வது கட்டாயமானதாகும். அதேவேளை முக்கியமான தேவைகளுக்கு அல்லாமல் வீனாக குறித்த பெண்ணோடு தொலை பேசியினூடாக அரட்டை அடிப்பதும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
பெண்ணுக்கு ஆணைப் பார்க்க முடியுமா?
தொடர்ந்து ஒரு ஆண் பெண் பார்ப்பதன் ஒழுங்கு முறைகளையும் சில சட்டங்களையும் அவதானித்தோம். தற்போது ஒரு பெண்ணுக்கு ஆணைப் பார்க்க முடியுமா? என்று பார்ப்போம்
ஒவ்வெரு பெண்ணுக்கும் ஆணைப் போன்றே ‘தனக்கு வரவிருக்கும் கணவர் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும்‘ என்ற எண்ண ஓட்டங்கள் இருக்கலாம். எனவே இஸ்லாம் பெண்ணின் விருப்பு வெறுப்பிற்கும் செவி சாய்த்து, பெண்ணுக்கு ஆணைப் பார்ப்பதற்கு அனுமதி வழங்குகின்றது.
இன்றைய நமது சமூக சூழலில் பெண்ணுக்குரிய இந்த உரிமை கொடுக்கப்படும் வீதம் மிகவும் குறைந்துள்ளது. சில நேரங்களில் பெற்றோர் மாப்பிள்ளையை காட்டாமலே ‘நான் கீரீய கோட்டை எனது பிள்ளை தாண்டாது’ என இறுமாப்பாக சொல்லிக் கொண்டு நேரடியாக திருமண ஒப்பந்தங்கள் நடை பெருகின்றமை ‘பெண்ணுக்கு இழைக்கும் பெரும் கொடுமை’ என்று சொல்லலாம்.
அற்ப பணத்திற்காக தனது பிள்ளையை UK மற்றும் America மாப்பிள்ளைக்கு விற்று விடக் கூடிய பெற்றோர் பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா? இல்லையா? என்பதைக் கேட்கத் தவறி விடுகின்றனர்.
இதனால் நமது சமூக அமைப்பில் பல்வேறு சிக்கல்கள் குறிப்பாக ‘தலாக்’ மற்றும் கணவன் இருக்க இன்னெருவனோடு ஓடிப்போகும் சமபவங்கள் இடம் பெருவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. நாம் ஏற்கனவே பெண்ணின் அனுமதி இல்லாமல் ஆண், பெண்ணைப் பார்க்கலாம் என்று சொன்னோம் அதனால் ஏற்படும் பிரதிபலனையும் கோடிட்டுக் காட்டினோம்.
ஆனால் ஆண் அவ்வாறு பார்த்து விரும்பியதன் பின்னர் நேரடியாக திருமண ஒப்பந்தத்திற்கு செல்ல முடியாது. சில வேலை பாரிய வயது வித்தியாசமான கிழவர்கள் கூட பெண்கள் அனுமதியில்லாமல் அவளைப் பார்த்து விரும்பலாம். அதன் பின்னால் பெண்ணின் அனுமதியையும் பெற்று அவள் பார்த்து சம்மதம் கூறினால் தான் பெண்ணுக்குரிய உரிமைகளை வழங்கியவர்களாகவும் அவளின் மனோநிலையை மதித்தவர்களாகவும் ஆக முடியும்.
எனவே இவ்விடயத்தில் ஆண்கள் கவனம் செலுத்தி தான் பார்த்து விரும்பிய அந்தப் பெண்ணுக்கு தன் மேல் விருப்பம் இருக்கிறதா? என்பதை அவள் ஆணைப் பார்த்து உறுதி செய்து கொள்வதற்கும் திருமணத்திற்கு முன் இஸ்லாம் கூறும் விதிமுறைகளைக் கடைப் பிடித்து இரு மணங்கள் சங்கமிக்கும் திருமண வாழ்வில் இணைந்து ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ் துணை புரிவாணாக!