சூஃபித்துவத்தின் முக்கிய பிரிவுகள், அதன் விபரீத கொள்கைகள்
சூஃபித்துவம் குறித்த முந்தைய பதிவுகளில் ‘எல்லாமே இறைவன் தான்’ என்ற சித்தாந்தந்தின் அடிப்படையில் அமைந்த ‘வஹ்தத்துல் உஜூத்’ கொள்கையின் வழிகேடுகளைப் பற்றிப் பார்த்து வருகின்றோம்!
தற்போது ஸூஃபித்துவத்தின் பிரிவுகளைப் பற்றியும் அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்!
ஸூஃபித்துவக் கோட்பாடுகள்!
பொதுவாக ஸூஃபிகள் கொண்டிருக்கும் இறைவனைப் பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் கொள்கையினை மூன்று வகைப்படுத்தலாம்:
1) இல்லுமினிஸ்ட் (Illuminist) தத்துவக் கோட்பாடு!
2) ஹூலூல் – அவதாரக் கொள்கை!
3) இத்திஹாத் – வஹ்தத்துல் உஜூது
மேற்கண்ட மூன்று வகை சூஃபித்துவவாதிகளும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமான நம்பிக்கைகளைத் தான் கொண்டிருக்கின்றனர்.
ஸூஃபிகளின் இந்த மூன்று பிரிவினர்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!
1) இல்லுமினிஸ்ட் (Illuminist) தத்துவக் கோட்பாடு!
இந்தக் கோட்பாடுடையவர்களைப் பொறுத்தவரை துறவறம் பூணுவதைவிட தத்துவங்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்!
‘ஒருவர் தன் உடலை வருத்தி அதன் மூலம் தன் ஆன்மாவுக்கு பயிற்சியளித்து அந்த ஆண்மாவைத் தூய்மைப்படுத்தினால் இறைவனின் ஒளி அவருடைய உயிருடன் கலந்து அவருடைய உள்ளத்தில் ஊடுருவுகிறது’ என்பது இவர்களின் நம்பிக்கை!
‘படைத்தவன் வேறு! படைப்பினம் வேறு! ஆயினும் இறைவன் எல்லா இடத்திலும் இருக்கின்றான்’ என்பதும் இவர்களது நம்பிக்கை!
இது அல்-குர்ஆன் சுன்னாவிற்கு முற்றிலும் முரண்பட்ட கருத்தாகும்.
‘அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேலாக அர்ஷிற்கு மேலாக இருக்கிறான்’ என்பது குர்ஆன் சுன்னாஹ் போதிக்கும் அடிப்படை நம்பிக்கையாகும். இத்தகைய நம்பிக்கையுடையவரே முஸ்லிம் என்பதை அல்-குர்ஆன், ஸஹீஹான ஹதீஸ்கள் மற்றும் கண்ணியமிக்க இமாம்களின் கூற்றுக்களின்அடிப்படையில் அறியமுடிகிறது!
அல்லாஹ் கூறுகின்றான்:
“நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் – பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்” (10:3)
“மலக்குகளும் பரிசுத்த ஆவியும் (ஜிப்ரீலும்) ஐம்பதாயிரம் வருடம்அளவுள்ள ஒரு நாளில் அல்லாஹ்வை நோக்கி ஏறிச் செல்வார்கள்” (அல்குர்ஆன் 70:4).
“தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்கிறது” (அல்குர்ஆன் 35:10)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் வானத்தில் உள்ள அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் காட்டடுவான்.” இப்னு உமர்(ரலி) திர்மிதி, அஹ்மத்
“வானத்திற்கு மேலே இருப்பவனிடம் நான் நம்பிக்கைக்குரியவனாக இருக்கின்றேன், எனவே நீங்கள்என்னை நம்பமாட்டீர்களா? வானத்தின் செய்திகள் எனக்கு காலையிலும் மாலையிலும் வருகின்றன.” அறிவிப்பவர்: அபூஸஈதுல் குத்ரி (ரலி) நூல்: புகாரி 4351, முஸ்லிம் 1921
முஆவியா பின் ஹகம் (ரழி) அறிவிக்கின்றார்கள்:
“என்னிடத்தில் ஆடு மேய்க்கக்கூடிய அடிமைப் பெண்ணொருத்தி இருந்தாள், ஒரு நாள் அப்பெண்ணை நான் கடுமை யாக அடித்துவிட்டேன். அது எனக்கு வேதனையாக இருந்தது, ஆகவே அல்லாஹ்வின் தூதரே! அவளை நான் விடுதலை செய்யட்டுமா? என வினவ, அப்பெண்ணை தன்னிடம் வரவழைத்து,
‘அல்லாஹ் எங்கே இருக்கிறான்?’
என வினவினார்கள், அதற்கவள்,
‘வானத்தின் மேலே இருக்கிறான்’
எனக் கூறினாள், பின்னர்,
‘நான் யார்?’
என வினவ அதற்கு,
‘நீங்கள் அல்லாஹ்வின் தூதுவர்’
என அவள் பதிலளித்தாள், உடனே,
‘இப்பெண் முஃமினானவள்’
எனக்கூறி அவளை ‘விடுதலை செய்யுமாறு’ பணித்தார்கள்” (நூல் : முஸ்லிம்)
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் ஆகியவற்றை அறிந்து விளங்கிய பின்பும் ‘அல்லாஹ் அர்ஷ் மீது இல்லை’ என எவரும் பிடிவாதமாகக் கூறினால் அவர் ‘காஃபிர்’ ஆகிவிடுவார், ஏனெனில் அவர் அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் திட்டவட்டமாக கூறப்பட்டதை நிராகரித்தவராவார். இமாம்களின் பின் வரும் ஃபத்வாக் கள் இக்கருத்தையே உறுதிசெய்கின்றன.
இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“‘எனது இரட்சகன் வானத்திலா? பூமியிலா? என்று எனக்குத் தெரியாது’ எனக் கூறுபவன் காஃபிர் ஆகிவிட்டான் ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில், ‘ரஹ்மான் அர்ஷ் மீது உள்ளான்’ எனக் கூறியுள்ளான்” (ஆதாரம்: அல்கிக்உல் அப்ஸத் பக்கம் 49).
இமாம் முஹம்மத் இப்னு யூசுஃப் அல்பியாபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
“யார் அல்லாஹ் அர்ஷ் மீது இல்லை என்று கூறுகின்றாரோ அவர் காஃபிர் ஆவார்” (ஆதாரம்: கல்கு அஃப்ஆல் இபாத் பக்கம் 19).
இமாம் இப்னு குஸைமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
“அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலுள்ள அர்ஷ் மீது உள்ளான் என்பதை ஏற்றுக் கொள்ளாதவன் காஃபிர் ஆவான்” (ஆதாரம்: மஃரிபது உலூமில் ஹதீஸ் பக்கம் 84
2) ஹூலூல் – அவதாரக் கொள்கை!
‘அல்லாஹ் மனிதர்களின் மீது இறங்கி சஞ்சரிக்கின்றான் அல்லது மனிதனாக அவதரிக்கின்றான்’ என்பது இந்தக் கோட்பாடுடையவர்களின் நம்பிக்கை.!
அதாவது,
பிற மதங்களில் தங்களின் ‘கடவுளர்கள் மனித அவதாரம் எடுத்து இப்பூவுலகிற்கு வருகை தந்தனர்’ என்று நம்பிக்கை கொண்டிருப்பது போன்றதாகும்.
கிறிஸ்தவர்களில் பலர் ‘கர்த்தரே (இறைவனே) இயேசுவாக (ஈஸா அலை) அவர்களாக இப்புவியில் அவதரித்தார்’ என்ற நம்பிக்கை கொண்டிருப்பதைப் போன்றதாகும்.
மன்சூர் ஹல்லாஜ் போன்ற சூஃபிகள் இந்தக் கொள்கையுடையவர்கள் தான்! இவர் தன்னுடைய கொள்கையை பகிரங்கமாகவே வெளியில் பின்வருமாறு கூறினார்.
மனித உருவில் தோன்றிய அவனுக்கே புகழனைத்தும்!
அவன் தன்னுடைய பிரகாசத்தை மறைத்திருந்தான்
அவனுடைய படைப்புகள் அவனை திறந்த வெளியில் காணும் வரை
உண்ணும் பருகும் மனித வடிவில்
தவாசீன் அல்-ஹல்லாஜ் ப 130
மன்சூர் ஹல்லாஜ் மேலும் உளறுகின்றார்:
நேசிப்பவனும் நானே! நேசிக்கப்படுபவனும் நானே!
நாங்கள் ஓருடலில் தங்கியிருக்கும் ஈருயிர்கள்!
எனவே நீ என்னைக் கானும் போது அவனையே காண்கிறாய்!
நீ அவனைக் காணும் போது எங்கள் இருவரையும் காண்கிறாய்!
இக்கொள்கையின் காரணமாகவே மன்சூர் ஹல்லாஜ்,
“அனல் ஹக் – நானே அல்லாஹ்” என தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். மன்ஸூர் ஹல்லாஜியின் மடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில்,
‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய மன்ஸூர் ஹல்லாஜியிடமிருந்து’
என எழுதப்பட்டிருந்தது! இது குறித்து அவரிடம் அரசு விசாரிக்கும் போது,
‘இக்கடிதம் எனக்குரியதே! அதே வேளை இதை எழுதியவனும் அல்லாஹ்வே’
என்றார்! இதன் காரணமாகவே இஸ்லாமிய அரசு அவருக்கு மரண தண்டனை விதித்தது.
ஹிந்து மத, கிறிஸ்தவ மத மற்றும் மன்ஸூர் ஹல்லாஜியின் அவதாரக் கொள்கையைப் பிரதிபலிக்கும் விதமாகத் தான் தற்காலத்திய ஸூஃபிகளும்,
‘அல்லாஹ்தான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமாக புவியில் அவதரித்தான்’
என்று கூறுகின்றனர்.
‘நீயே உனக்கு ஸுஜூது செய்தாய் பின் நினைந்துருவாய்’
‘நீயே புவிக்குள் ரஸூலாக வந்தவன்’
(ஞானப் புகழ்ச்சி – பாடல் 118)
என்று பீரப்பாவின் பாடல்களையும் பாடி மகிழ்கின்றனர்!
நவூதுபில்லாஹ் – இவர்களின் கூற்றைவிட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன்!
3) இத்திஹாத் – வஹ்தத்துல் உஜூத் கொள்கை!
ஸூஃபிகளின் மூன்வாவது வகையினர் தான் வஹ்தத்துல் உஜூத் என்று சொல்லப்படக்கூடிய அத்வைத கொள்கையுடையவர்கள் ஆவர்.
இக்கொள்கையாளர்களின் நம்பிக்கையின் பிரகாரம்,
‘இயல்வன யாவும் இறையுறுவே’
என்பதையும் அதாவது,
‘அல்லாஹ்வே இப்பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருள்களுமாக இருக்கின்றான்’
என்பதாகும்.
இக்கொள்கையை நெறிப்படுத்திய இப்னு அரபி அல்-ஹாத்திமி அத்-தாயீ என்பவர் ஹிஜ்ரி 638 ஆம் ஆண்டு மரணித்து சிரியாவின் டமாஸ்கஸில் அடங்கியிருக்கிறார்.
தற்காலத்திய ஸூஃபிகளில் மிகப் பெரும்பாணண்மையோர் இந்த அத்வைத கோட்பாட்டையே பின்பற்றுகின்றனர். தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல!
வழிகேட்டின் உச்சத்தைத் தொட்ட இவரது உளறல்களில் சிலவற்றைப் பார்ப்போம்!
மனிதனே கடவுள்! கடவுளே மனிதன்!
இப்படியிருக்க யார் யாருக்குக் கட்டளையிடுவது?
நீ மனிதனென அழைத்தாலும் கடவுளென அழைத்தாலும்
இரண்டுமே ஒன்றுதான் இப்படியிருக்க
யார் யாரை வணங்குவது?
(அல்புதூஹாத்துல் மக்கிய்யா 213)
மூசா (அலை) அவர்களின் உம்மத்துகள் காளைக் கன்றின் சிலையை வணங்கிய நிகழ்வைப் பற்றி இப்னு அரபி கூறும் போது,
‘காளைக் கன்றை வணங்கியவர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கவில்லை’
என்கிறார். காரணம் என்னவெனில்,
‘இப்பிரபஞ்சமும் அதிலுள்ள அனைத்தும் அல்லாஹ் தான்’
என்ற ‘வஹ்தத்துல் உஜூத் கொள்கையுடைய ஸூஃபிகளின் நம்பிக்கையின் பிரகாரம், “சிலைகளும் அல்லாஹ்” என்பதே தான்!
‘அன ரப்புக்குமுல் அஃலா – நானே மிகப் பெரிய இறைவன்’
என்று கூறி மூசா நபிக்கும் அவருடைய உம்மத்துக்களுக்கும் கொடுமை செய்த ஃபிர்அவ்னைப் பற்றிக் குறிப்பிடும் போது இப்னு அரபி இவ்வாறு கூறுகின்றார்:
‘ஃபிர்அவ்ன் மரணிக்கும் தருவாயில் அல்லாஹ் அவனுக்கு ஈமானைத் தந்தான்! எனவே அவனுடைய ஆன்மாவைக் கைப்பற்றும் வேளையில் அது மிக தூய்மையடைந்ததாகவும் எவ்வித அசுத்தங்களும் இல்லாததாகவும் இருந்தது’ (அல்-ஃபுஸூஸ் ப. 201)
ஆனால் அல்லாஹ்வோ பிர்அவ்ன் கடும் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பதாகக் கூகூறுகின்றான்:
“ஆகவே, மூஸா அவனுக்கு (ஃபிர்அவ்னுக்கு) பெரும் அத்தாட்சியை காண்பித்தார். ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான். பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான். அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான். “நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் – ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம்) கூறினான். இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.” (அல்-குர்ஆன் 79:21-25)
பிர்அவ்னைப் பற்றிக் கூறும் போது மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
“காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் ‘ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்’(என்று கூறப்படும்)” (அல்-குர்ஆன் 40:46)
‘எல்லாமே அல்லாஹ் தான்’ என்றால் எல்லா வழிகேடுகளையுமே ஆதரிக்க வேண்டிய அவல நிலை தான் வரும் என்பதற்கு இது உதாரணமன்றோ? இதைத் தான், இந்த வழிகேடுகளைத் தான் ஸூஃபிகள் ஆண்மீக இரகசியம் என்று பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
நவூதுபில்லாஹ் – இவர்களின் கூற்றைவிட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன்!
மூசா (அலை) அவர்களுக்கும் அவரது உம்மத்துக்களுக்கும் கொடுமை செய்த ஃபிர்அவ்னை புகழந்துப் பேசி ‘அவன் மரணிக்கும் போது ஈமானோடு தான் மரணித்தான்’ என்று கூறிய இப்னு அரபி, மூசா நபியின் சகோதரரான ஹாரூன் (அலை) அவர்களை சாடுகினறார்.
காரணம் என்னவெனில், மூசா (அலை) அவர்கள் 40 நாட்கள் இறைக்கட்டளையை மேற்கொண்டு சென்றிருந்த வேளையில், ஹாரூன் (அலை) அவர்களின் மேற்பார்வையில் தான் மூசா (அலை) அவர்களின் உம்மத்துகள் இருந்தார்கள்.
அந்த சமயத்தில் சாமிரி என்பவன் செய்த காளைக் கன்றை மூசா நபியின் உம்மத்துக்கள் வணங்கவே அதை ஹாரூன் (அலை) அவர்கள் கண்டித்தார்கள்! இதைப் பற்றிய செய்தியை திருமறையும் கூறுகிறது!
ஆதனால் தான், ‘காளைக் கன்றை வணங்கியவர்கள் அல்லாஹ்வையே வணங்கினார்கள்’ என்ற கொள்கையைக கொண்டிருந்த இப்னு அரபி, சிலை வணக்கத்தைக் கண்டித்த ஹாரூன் (அலை) அவர்களை சாடுகிறார்.
சிலைகளைக் குறித்து இப்னு அரபியின் நிலைப்பாடு என்னவெனில்,
ஆரிப் என்பவர் எல்லா வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வையே காண்பார்.
ஒவ்வொரு பொருளுமே அவருக்கு அல்லாஹ் வாகத்தான்* தென்படும்.
முழுமை பெற்ற ஒரு ஆரிபுக்கு (ஞானிக்கு) பிற மத மக்கள் வணக்கம் செலுத்தும் ஏனைய சிலைகள், விக்ரகங்கள் அனைத்துமே அல்லாஹ்வின் தஜல்லி – வெளிப்பாடாகவே தெரியும்.
இதனாலேயே அவர்கள் பிற மதத்தவர்களால் வணங்கப்படும் அனைத்து மதத்து சிலைகளையும் இலாஹ் – அல்லாஹ் என்றே அழைத்தார்கள்.
அந்த ஒவ்வொரு சிலைக்கும் கற்சிலை, பொற்சிலை, வெங்கலச் சிலை என தனிப்பட்ட பெயர்கள் இருப்பினும் கடவுள் – அல்லாஹ் எனும் பொதுப் பெயர் கூறியே அவர்கள் அவற்றை அழைத்தார்கள்.
(புஸூஸூல் ஹிகம் – இப்னு அரபி ப: 192)
அடுத்ததாக ‘கிறிஸ்தவர்களை இறை நிராகரிப்பாளர்கள்’ என்று கூறுவதற்கான காரணத்தை இப்னு அரபி இவ்வாறு கூறுகின்றார்:
‘கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களுக்கு மட்டும் கடவுள் தன்மையைக் கொடுத்ததனால் தான் அவர்கள் இறை நிராகரிப்பாளானார்கள்!’
‘அவர்கள் அந்த இறைத் தன்மையை பொதுவாக அனைத்துப் பொருள்களுக்கும் கொடுத்திருப் பார்களேயானால் அவர்கள் இறை நிராகரிப்பாளர்களாகி இருக்கமாட்டார்கள்!’
என்றார்.
‘எல்லாமே அல்லாஹ்’ என்ற கொள்கையுடைய இப்னு அரபி பிற மதக் கடவுள்களையும் இறைவனாகவே கருதியதால் பின்வருமாறு உளறுகின்றார்!
‘‘என் மதமும் என் மாற்றுமத நன்பனின் மதமும் ஒரே மதமே என்றில்லாவிட்டால் என்னால் தூங்க முடியாது.’
‘என்னுள்ளம் எல்லா மதங்களையும் ஒன்றாகவே நோக்கும் நிலைக்கு வந்து விட்டது.’
‘அதிலே கிருஷ்த்தவப் பாதிரிகளுக்கும் இடமுண்டு! சிலை வணங்கிகளுக்கும் இடமுண்டு! .கஃபாவுக்கும் இடமுண்டு! அது ஒரே நேரத்தில் தௌராத்தாகவும், குர்ஆனாகவும் இருக்கின்றது’
(ஸூபிய்யா 17)
இதே கருத்தையே ‘இப்னு அரபின் கொள்கையை’ அப்படியே பின்பற்றிய ‘ஜலாலுத்தீன் ரூமி’ என்பவர் கூறுகிறார்:
‘நான் ஒரு முஸ்லிம் ஆனாலும் நான் கிருஷ்த்தவனும்தான்! பிராமணனும் தான்!’
‘நான் பள்ளியிலும் தொழுவேன்! கோயிலிலும் கும்பிடுவேன்! சிலைகளையும் வணங்குவேன்!’
‘ஏனெனில் எல்லாமே ஒன்றுதான்!’
(ஸூபிய்யா பக்கம் 45)
நவூதுபில்லாஹ் – இவர்களின் கூற்றைவிட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன்!
இவர்களின் வழிகேடுகளை இவ்வாறு பக்கம் பக்கமாக அடுக்கிக் கொண்டே போகலாம்! அந்த அளவிற்கு வண்டி வண்டியாக இருக்கிறது ஸூஃபித்துவத்தைப் பின்பற்றியவர்களின் உளறல்கள்!
எனவே அன்பு சகோதர, சகோதரிகளே!
சூஃபித்துவம் என்பதற்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்பந்தமில்லை! மாறாக இந்த வழிகேட்டை ஒருவன் பின்பற்றினால் அவன் மறுமையின் நற்பேறுகளை முற்றிலுமாக இழந்த துர்பாக்கியசாலி ஆக நேரிடும்! அல்லாஹ் காப்பாற்றுவானாக!
அல்லாஹ் கூறுகின்றான்:
“எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்; அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.” (அல்-குர்ஆன் 6:1)
“மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.” (அல்-குர்ஆன் 2:21)
சுன்னத் ஜமாஅத் போர்வையில் நமது முஸ்லிம்களிடையே இரண்டறக் கலந்திருக்கும் சூஃபிகள் பல்வேறு தரீக்காக்களையும் அதன் மூலமாக ஆடல்-பாடல்களுடன் கூடிய நடனங்களையும் ‘திக்ருகள்’ என்ற பெயரில் மார்க்கத்தில் நுழைத்து மக்களை வழிகேட்டின்பால் அழைக்கின்றனர்.
எனவே தமிழக முஸ்லிம்கள் இந்த தரீக்காவாதிகளிடமிருந்தும், சூஃபித்துவவாதிகளிடமிருந்தும் முற்றிலுமாக விலகியிருந்து நம் அனைவர்களையும் படைத்த அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கும் உண்மை முஸ்லிம்களாக வாழ வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள்புரிவானாகவும். ஆமீன்.
உதவிய நூல்கள்:
- சூஃபித்தவ தரீக்காக்கள் – அன்றும் இன்றும்
- Reality of Sufism – In Light of Quran and Sunnah
masha allah , very useful information jazakallah..