நபி ஸல் அவர்களின் பிறந்த நாள் விழா
வரலாற்றுக் கண்ணோட்டம்
நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது நபி (ஸல்) அவர்களால் சிறந்த சமுதாயம் என போற்றப்பட்ட சஹாபாக்கள், தாயீன்கள் மற்றும் தபஅ தாயீன்களின் காலத்திலோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாட்கள் கொண்டாடப்பட வில்லை. இஸ்லாத்தின் உண்மையான கொள்கைகளைச் சிதைப்பதற்காக முதன் முதலில் ‘ஷியாக்களின் பாத்திமிட்’ ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது தான் இந்த மீலாது விழாக்கள். உண்மையான முஃமின்களுக்கும் ஷியாக்களின் இந்த நூதன கண்டுபிடிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
வரலாற்று ஆசிரியர் இப்னு கல்தான் என்பவர் கூறுகிறார்: –
ஃபாத்திமிட் ஆட்சியாளர்களுக்குப் பிறகு இதை விமர்சையாக முதன் முதலில் கொண்டாடியவர் ஈராக்கில் இர்பில் என்ற பகுதியை கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் அல்லது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆட்சி செய்த மன்னர் அல்-முஜஃப்பார் அபூ சயீத் கவ்கபூரி என்பவராவார்.
மற்றொரு ஆய்வாளர் அபூ ஷாமா என்பவர் கூறுகிறார்: –
ஈராக்கின் மோசுல் நகரில் ஷெய்ஹூ உமர் இப்னு முஹம்மது அல்-மலா என்பவர் தான் முதன் முதலில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடினர். பின்னர் இர்பில் நகரின் ஆட்சியாளர்களும் மற்றவர்களும் அதைப் பின்பற்றினர்.
அல்-ஹாபிஸ் இப்னு கதீர் அவர்கள் தன்னுடைய ‘அல்-பிதாயா வல் நிகாயா’ என்ற நூலில் மன்னர் அபூ சயீத் கவ்கபூரி அவர்களின் சரிதையைப் பற்றிக் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகிறார்கள்: –
‘அவர் ரபியுல் அவ்வல் மாதத்தில் மிகப்பெரிய விழாவை ஏற்பாடு செய்வார், முஜஃப்பரின் விருந்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் கூறினர், ‘அவர் அந்த விழாவில் கலந்துக் கொண்டவர்களுக்கு தீயில் சுடப்பட்ட ஐந்தாயிரம் ஆடுகளின் தலைகளையும் , பத்தாயிரம் கோழிகளையும், ஆயிரம் பெரிய பாத்திரங்களில் உணவுகளையும், முப்பது தட்டுகளில் இனிப்பு வகைகளையும் வழங்கியதாக கூறினர். மேலும் அந்த விழாக்களில் கலந்துக் கொண்ட சூஃபியாக்கள் லுகர் முதல் மறுநாள் விடியற்காலை பஜ்ர் வரையிலும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்ததாகவும் மன்னரும் அந்த ஆட்டம் பாட்டத்தில் கலந்துக் கொண்டதாகவும் கூறினர்’
வரலாற்று ஆசிரியர் இப்னு கல்தான் தன்னுடைய நூல் ‘வாஃபியாத் அல்-அய்யான்’ என்னும் நூலில் கூறுகிறார்: –
‘ஸபர் மாதத்தின் ஆரம்பத்திலேயே அவர்கள் கோபுரங்களின் உச்சிகளை அலங்கரிக்கத் துவங்கிவிடுவர். கோபுரங்களின் உச்சியில் பாடகர்களும், இசையமைப்பவர்களும் மற்றும் நடனமாடுபவர்களும் அமர்ந்து ஆட்டம்பாட்டத்திலிருப்பர். ஒரு போபுரத்தைக் கூட இவ்வாறு அலங்கரிக்காமல் விடுவதில்லை. மக்கள் அந்த நாட்களில் வேலைக்குச் செல்லாமல் அந்த வேடிக்கைகளைக் கண்டு களித்துக் கொண்டிருப்பார்கள்’
இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா ஷியாக்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இஸ்லாத்தில் ஊடுருவ ஆரம்பித்தது. மார்க்கம் அறியா பாமர மக்களும் இவ்வாறு கொண்டாடுவது புனிதம் என்று கருதலாயினர்.
இதற்கு அல்லாஹ்வின் வேதத்திலோ அல்லது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலோ எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. எனவே இது இஸ்லாத்தில் தோற்றுவிக்கப்பட்ட பித்அத் என்னும் நூதன செயலேயாகும்.
ஒவ்வொரு உண்மையான முஸ்லிமும் இதிலிருந்து தவிர்ந்துக் கொள்வதோடு அல்லாமல் இத்தகைய தீய செயல்களை களைவதற்கு பாடுபட வேண்டும்.