அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலாக அர்ஷினில் உயர்ந்துள்ளான் என்பதற்கான ஆதாரங்கள்
அல்லாஹ் மேன்மைமிக்கவன், படைப்பினங்களை விட உயர்ந்தவனாகவும், வானத்துக்கு மேலே இருக்கிறான் என்பதற்கு ஆதாரங்கள்!
சிலர் இறைவன் வானத்திற்கு மேலே இருக்கிறான் என்றும், சில அறிஞர்கள் அங்கிங்கெணாமல் அனைத்து இடத்திலும் இருக்கிறான் என்றும் கூறுகின்றனர். இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கின்றானா? அல்லது வானத்திற்கு மேலே இருக்கிறானா? என்று பார்ப்போம்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே!
குர்ஆன் சுன்னாஹ் அறிஞர்களின் ஏகோபித்த கருத்து, பொது அறிவு, மற்றும் மனிதனின் உள்ளார்ந்த உள்ளுணர்வின் அடிப்படையில் அல்லாஹ் தனது படைப்புகளை விட உயர்ந்தவன் என்று நபி (ஸல்) வழியை பின்பற்றக்கூடிய ஜமாஅத் மக்கள் நம்புகிறார்கள்.
1) இறைவன் வானத்திற்கு மேலே இருக்கிறான் என்றும், அவன் உயர்ந்தவன் என்றும், கட்டளைகள் மேலிருந்து கீழே எப்படி வருகிறது, கீழிருந்து மேல் எவ்வாறு செல்கிறது என்றும், இப்படியாக குர்ஆன் இறைவனின் மேன்மையை பல வழிகளில் விவரிக்கிறது:
“அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்…” (2: 255)
“(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.” (87:1)
“அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரண ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்” (6:18)
“அவர்கள் தங்களுக்கு மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனை பயப்படுகிறார்கள்; இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள்” (16:50)
1a) கட்டளைகள் மேலிருந்து கீழே எப்படி வருகிறது?
ஆதாரங்கள்:
“வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.” (32:5)
“நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.” (15:9)
1b) கீழிருந்து மேல் எவ்வாறு செல்கிறது?
ஆதாரங்கள்:
“…தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்…” (35:10)
“ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.” (70:4)
1c) இறைவன் வானத்திற்கு மேலே இருக்கிறான்!
ஆதாரங்கள்:
“வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொருகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.” (67:16)
2) முஹம்மது நபி (ஸல்) அவர்கள், மக்களிடையே உரை நிகழ்த்தும்போது தன்னுடைய விரலை ‘வானத்தை நோக்கி சுட்டிக் காட்டுவதை’ வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
அரபாஃ நாளில் உரையாற்ற போது,
“நான் செய்தியை எத்தி வைத்து விட்டேனா? என்று சஹாபாக்களிடம் கேட்டார்கள். அவர்கள் “ஆம்!” என்று கூறினார்கள்.
அவர்கள் மறுபடியும்,”நான் செய்தியை எத்தி வைத்து விட்டேனா ? என்று சஹாபாக்களிடம் கேட்டார்கள்.அவர்கள் “ஆம்!” என்று கூறினார்கள்.
அவர் மூன்றாவது முறையாக,”நான் செய்தியை எத்தி வைத்து விட்டேனா ? என்று சஹாபாக்களிடம் கேட்டார்கள். அவர்கள் “ஆம்!” என்று கூறினார்கள்.
ஒவ்வொரு தடவையும் தன்னுடைய விரலை வானத்தை நோக்கி சுட்டிக் காட்டி, ‘அல்லாஹ்வே, நீயே சாட்சி!’ என்று கூறினார்கள்.
மேலும், துஆ கேட்கும்போது தன்னுடைய கைகளை ‘வானத்தை நோக்கி உயர்த்துவதை’ வழக்கமாக கொண்டிருந்தார்கள். இவை எல்லாம் ‘இறைவன் வானத்திற்கு மேலே இருக்கிறான்’ என்பதற்கு ஆதாரங்கள்.
ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஒரு இளம் அடிமை பெண்ணிடம்,
‘இறைவன் எங்கு இருக்கிறான்? என்று கேட்டபோது, ‘வனத்தில் இருக்கிறான்’ என்று கூறினாள். ஒரு படிக்காத அடிமைப்பெண் ‘இறைவன் வானத்தில் இருக்கிறான்’ என்பதை அறிந்துள்ளார் .
3) அறிஞர்களின் ஏகோபித்த கருத்தும் ‘இறைவன் மேலே இருக்கிறான்’ என்பதாகவும் இருக்கிறது. அறிஞர் இமாம் அத்தஹபி போன்றோர் தன்னுடைய நூலில் இதை குறிப்பிட்டுள்ளார்கள்.
4) பொது அறிவு மற்றும் மனிதனின் உள்ளுணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலும் இறைவன் மேலே இருக்கிறான் என்பதையே காட்டுகின்றன. மனிதனுக்கு துன்பம் நேரிடும்போது இறைவனின் உதவியை நாடி தன்னுடைய கைகளை வானத்தை நோக்கியே உயர்த்துகிறான்.
இறைவனின் எதிரி பிர்அவ்ன் தன்னுடைய மந்திரி ஹாமானிடம் கூறும்போது இறைவன் வனத்தின் மீது இருப்பதாக கூறுகிறான்.
“(இவ்வளவு உபதேசித்த பின்னரும்:) “ஹாமானே உயரமான ஒரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக – நான் (மேலே செல்வதற்கான) பாதைகளைப் பெறும் பொருட்டு! “(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து மூஸாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும்” 40:36,37
குர்ஆன் சுன்னா, அறிஞர்களின் ஏகோபித்த கருத்து, பொது அறிவு மற்றும் மனிதனின் உள்ளார்ந்த உள்ளுணர்வு மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதோர் அனைவரும் ‘இறைவன் வனத்தின் மேலே இருக்கிறான்’ என்பதையே உறுதி செய்கின்றனர்.
அல்லாஹ் அறிந்தவன்.