தக்க காரணமின்றி நோன்பை விடுவது மிகப் பெரும் பாவமாகும்
அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி (ஸல்) கூறினார்கள்: “நான் ஒரு நாள் தூங்கிக் கொண்டு இருக்கும் போது என்னிடம் இருவர் வந்து என்னை ஒரு மலை அடிவாரத்திற்கு அழைத்துச் சென்று அந்த மலை மேல் ஏறுமாறு ஏவினார்கள். நான் அதில் ஏற சக்தி பெற மாட்டேன் என்றேன். இல்லை ஏறுங்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகின்றோம் என்றனர். நான் மலையில் எறியதும் கடுமையான சத்தத்தை கேட்டு இது என்ன சத்தம்? என்று அவர்களிடம் வினவினேன். இது நரக வாசிகள் ஊளையிடும் சத்தம் என்று கூறிவிட்டு என்னை முன்னோக்கி அழைத்துச் சென்றனர்.
அப்போது, தலை கீழாக தொங்கவிடப்பட்டு தமது வாய்கள் அறுக்கப்பட்டு வாயிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தை பார்த்து யார் இவர்கள்? என்று அந்த இருவரிடமும் கேட்டேன்.
அப்போது, இவர்கள் தான் நோன்பு காலங்களில் நோன்பு திறக்கும் நேரத்திற்கு முன் நோன்பை திறந்து கொண்டவர்கள் என்று சொல்லப்பட்டது.
ஆதாரம்: முஸ்தத்ரகுல் ஹாகிம்.
இமாம் ஹாகிம், இமாம் தஹபி ஆகியோர் இந்த ஹதீஸை ஸஹீஹ் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
நோன்பு திறக்கும் நேரத்திற்கு முன் நோன்பை திற்ப்பதற்கே இவ்வளவு பெரிய தண்டனை என்றால் எந்த ஒரு காரணமும் இல்லாமல் சோம்பேரித்தனமாக நோன்பை விட்டு விடுபவர்கள் அல்லாஹ்விடம் எப்படி பதில் சொல்ல முடியும்?
எனவே, தக்க காரணமின்றி நோன்பை விடுபவர்களுக்கு இந்த கடும் எச்சரிக்கைகளை நாம் சொல்லியாக வேண்டும். அப்படிப்பட்டவர்கள் நமது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தால் (மணைவி, வயது வந்த பிள்ளைகள்) அவர்கள் விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுப்பது நமது கடமை என்பதையும் மறந்துவிடலாகாது.
அப்படி மறந்து விட்டால் நாமும் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டிவரும்..
மேலும், இமாம் தஹபி அவர்கள் தனது ‘அல்கபாஇர்’ (பெரும் பாவங்கள்) என்ற புத்தகத்தில் பத்தாவது பெரும் பாவமாக ரமழான் நோன்பை தக்க காரணமின்றி விடுவதை குறிப்பிட்டுள்ளார்கள். (அல்கபாஇர் பக்கம் 62)
எல்லாம் வல்ல அல்லாஹ் புனித ரமழான் மாத்தில் அவனால் கடமையாக்கப்பட்ட நோன்பை பாழ்படுத்திவிடாமல் நல்ல முறையில் நோற்று நாளை மறுமையில் ரய்யான் என்ற வாசலினால் சுவர்க்கத்தில் பிரவேசிக்கும் பாக்கியத்தை நம்மனைவருக்கும் தந்தருள்வானாக!
யா அல்லாஹ் எங்களின் நோன்பையும் இதர கடைமைகளையும் நீ பொருந்திக் கொள்வாயாக!