ஜமாத் தொழுகையில் தாமதமாக வந்து சேர்ந்தவர் தொழும் முறை
1) ஜமாத் தொழுகைக்கு தாமதமாக வந்து சேர்ந்தவர் ஜமாத்தாக தொழுபவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் உடனே ஜமாத்தில் சேர்ந்து விடவேண்டும்.
2) இமாம் ருகூவு அல்லது சஜ்தாவில் இருந்தால் அவற்றிலிருந்து இமாம் எழும் வரைக்கும் தாமதம் செய்யக் கூடாது. உடனே அதில் சேர்ந்து கொள்ள வேண்டும்.
3) தாமதமாக வந்தவர் எந்த ரக்அத்தில் ஜமாஅத்தில் சேருகிறாரோ அதுவே அவருக்கு முதல் ரக்அத் ஆகும்.
4 தாமதமாக வந்தவர் ருகூவை அடைந்து விட்டால் அந்த ரக்அத் அவருக்கு கிடைத்து விடும். ருகூவை அவர் தவறவிட்டுவிட்டால் அந்த ரக்அத் அவருக்கு கிடைக்காது. இமாம் தொழுது முடித்ததும் அந்த ரக்அத்தையும் விடுபட்ட ஏனைய ரக்அத்தையும் அவர் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தொழுகைக்காக வந்தபோது, நாங்கள் சஜ்தாவில் இருந்தால் எங்களோடு சஜ்தா செய்யுங்கள். ஆனால் அதை ஒரு ரக்அத்தாக கணக்கிட வேண்டாம். யார் ஒருவர் ருகூவை அடைந்து விட்டாரோ அவர் தொழுகையை அடைந்தவராவார். (ஆதாரம் : அபூதாவுத்)
5) உதாரணம்: –
ஒருவர் மஃரிப் தொழுகையின் கடைசி ரக்அத்தில் இமாமோடு சேருகிறார். அவர் இமாம் ஸலாம் கூறும் வரைக்கும் அந்த இமாமைப் பின் தொடர்ந்து தொழவேண்டும். இமாம் ஸலாம் கொடுத்ததும் அவர் எழுந்து நின்று விடுபட்ட இரண்டு ரக்அத்களை நிறைவேற்ற வேண்டும்.
– தாமதமாக வந்தவர் சேர்ந்த ஜமாஅத்தின் கடைசி ரக்அத்தே அவருக்கு முதல் ரக்அத்தாகும்.
– இமாம் ஸலாம் கொடுத்ததும் தாமதமாக வந்தவர் எழுந்து சூரத்துல் ஃபாத்திஹா மற்றும் குர்ஆனின் ஏதாவது சில ஆயத்துகளை ஓதி அவர் இரண்டாவது ரக்அத்தை தொழவேண்டும்.
– இரண்டாவது ரக்அத்தின் ஸஜ்தா நிறைவுற்றதும் அவர் சிறிய இருப்பு இருக்க வேண்டும். அதில் அத்தஹிய்யாத்து ஓத வேண்டும்.
– பிறகு அவர் எழுந்து நின்று சூரத்துல் ஃபாத்திஹா மட்டும் ஓதி மஃரிபுடைய கடைசி ரக்அத்தை நிறைவேற்ற வேண்டும்.
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.