ஜோதிடம், குறி பார்த்தல்
ஜுல்பி வெளிநாட்டவர் அழைப்பு மையம், சவூதி அரேபியா, வெளியிட்ட,
‘மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்!’ எச்சரிக்கை! என்ற நூலில் இருந்து…
நூலாசிரியர்: அஷ்ஷைக் முஹம்மத் ஸாலிஹ் அல்-முனஜ்ஜித்
ஜோதிடம், குறி பார்த்தல்
மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். இப்படியிருக்க, ஜோதிடம் பார்ப்பவன், குறி பார்ப்பவன் ஆகிய இருவரும் மறைவான விஷயங்களைத் தாம் அறிவதாக வாதிட்டால் அவ்விருவரும் மகத்துவமிக்க அல்லாஹ்வை நிராகரிப்பவர்களாவர்.
இவர்களில் பெரும்பாலோர் பணம் பறிப்பதற்காக அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். இதற்காக அவர்கள்,
- மணலில் கோடு கிழித்துப் பார்ப்பது,
- சோழி போட்டுப் பார்ப்பது,
- கைரேகை பார்ப்பது,
- பீங்கானில் நீர் உற்றி பார்ப்பது,
- கண்ணாடியில் பார்ப்பது
போன்ற பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகின்றனர்.
இவர்கள் ஒரு உண்மை கூறினால் 99 முறை பொய் கூறுவார்கள். கற்பனைகளை அள்ளி வீசக்கூடிய இவர்கள் கூறுவது எந்த ஒரு தடவை உண்மையாகிறதோ அதை மட்டும் இந்த அப்பாவி மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்காகவும், திருமணம், வியாபாரம் போன்ற காரியங்களில் நன்மை, தீமையை அறிந்து கொள்வதற்காகவும், காணாமல் போன பொருட்களை கண்டு பிடிப்பதற்காகவும் அவர்களிடம் செல்கின்றனர்.
இப்படி எதிர்காலத்தைக் கணித்துச் சொல்பவர்களிடம் சென்று அவர்கள் கூறுவதை ஒருவன் நம்பினால் அவன் காஃபிராவான். இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவனாவான்.
ஆதாரம்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
‘எவன் ஜோதிடம் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை நம்புகிறானோ அவன் முஹம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட(வேதத்)தை நிராகரித்தவன் ஆவான்’. (அஹ்மத்)
ஆனால், அவர்களிடம் செல்பவன் மறைவானவற்றை அவர்கள் அறிவார்கள் என நம்பாமல் என்ன சொல்கிறார்கள் என்று பரிசோதிப்பதற்காகச் செல்வானாயின் அவன் காஃபிராக மாட்டான்.
மாறாக அவனது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘யார் ஜோசியக்காரனிடம் சென்று எதையேனும் கேட்டால் அவரது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது’ (முஸ்லிம்).
ஆயினும், அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படா விட்டாலும், நாற்பது நாட்கள் அவன் தொழுவதும் இப்பாவத்திற்காக தவ்பா செய்வதும் அவன் மீது கடமையாகும்.