இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்
A) இம்மையில் ஏற்படும் பயன்கள்: –
அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்!
“அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 2:194 & 9:36)
இறையச்சமுடையவர்களுக்கு திருமறை நேர்வழி காட்டும்!
“இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்” (அல்-குர்ஆன் 2:2)
பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் எதிரிகளின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது!
“நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்” (அல்-குர்ஆன் 3:120)
இறையச்சமுடையவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்!
“நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்” (அல்-குர்ஆன் 9:4, 9:7)
இறையச்சமுடையவராக இருந்தால் கல்வியறிவுடையவராகலாம்!
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்” (அல்-குர்ஆன் 8:29)
“அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்” (அல்-குர்ஆன் 2:282)
பயபக்திக் கொண்டு திருந்தி வாழ்ந்தால் அச்சமுமில்லை, துக்கமும் இல்லை!
“ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 7:35)
அல்லாஹ்விடத்தில் கண்ணியமானவர் இறையச்சமுடையவர்களே!
“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 49:13)
பயபக்தியுடையவர்களே வெற்றியாளர்கள்!
இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்” (அல்-குர்ஆன் 24:52)
B) மறுமையில் ஏற்படும் பயன்கள்: –
நிராகரிப்பாளர்களை விட மறுமையில் உண்ணத நிலையில் இருப்பபார்கள்!
“நிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது; இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்; இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்” (அல்-குர்ஆன் 2:212)
“மேலும், பயபக்தியுடையவர்களான முஃமின்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறந்ததாக இருக்கும்” (அல்-குர்ஆன் 12:57)
பயபக்தியுடைவருக்காகவே சுவனபதி தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது!
“இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது” (அல்-குர்ஆன் 3:133)
பயபக்தியுடைவர்களுக்கு இறைவனுடைய மன்னிப்பும், சுவனபதியும் கிடைக்கும்!
“இதுவே அல்லாஹ்வின் கட்டளையாகும் – இதை அவன் உங்களுக்கு இறக்கியருளினான். எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுகிறாரோ, அவரை அவருடைய பாவங்களை விட்டும் நீக்கி, அவருக்கு (நற்) கூலியையும் மகத்தானதாக்குகின்றான்” (அல்-குர்ஆன் 65:5)
“அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது” (அல்-குர்ஆன் 3:136)
இறையச்சமுடையவர்களுக்கு சுவனபதியில் அவர்கள் விரும்பியதெல்லாம் கிடைக்கும்!
“என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய சுவனபதிகளில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும். இவ்வாறே பயபக்தியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலியளிக்கிறான்” (அல்-குர்ஆன் 16:31)
இறையச்சமுடையவர்களுக்கே நரகத்திலிருந்து மீட்சி கிடைக்கும்!
“ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம். பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக – தீவிரமாக – இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக வேறு பிரிப்போம். பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். அதன் பின்னர், தக்வாவுடன் – பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்” (அல்-குர்ஆன் 19:68-72)
பயபக்தியுடைவர்களுக்கு எதிரே சுவர்க்கம் கொண்டுவரப்படும்!
“பயபக்தியுடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும். வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்” (அல்-குர்ஆன் 26:90-91)
இறையச்சமுடையவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு!
“ஆனால், எவர்கள் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். (இதுவே) அல்லாஹ்வின் வாக்குறுதி – அல்லாஹ் தன் வாக்குறுதியில் மாற மாட்டான்” (அல்-குர்ஆன் 39:20)
பயபக்தியாளர்கள் கூட்டம் கூட்டமாக சுவர்க்கத்தின் பக்கம் கொண்டுவரப்படுவார்கள்!
“எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: ‘உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்’ (என்று அவர்களிடம் கூறப்படும்)” (அல்-குர்ஆன் 39:73)
இறையச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கம்!
“பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?” (அல்-குர்ஆன் 47:15)
இறையச்சமுடையவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் நற்பலன்கள்!
“நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள். அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் – அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான். (அவர்களுக்குக் கூறப்படும்:) ‘நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.’ அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்” (அல்-குர்ஆன் 52:17-20)