நபி ஸல் அவர்களின் பிறந்த நாள் விழா

பொருளடக்கம்

  1. இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கம்
  2. அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டியதன் அவசியம்
  3. நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட ஒரு புதுமையான விஷயமே
  4. நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா – சிறிய வரலாற்றுக் கண்ணோட்டம்
  5. நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களை ஏன் கொண்டாடக் கூடாது?
  6. நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுபவர்களின் வாதங்கள்: –
    1. இந்த நாளைக் கொண்டாடுவதன் மூலம் நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களை மதிக்கின்றோம்!
    2. பல நாடுகளில் பெரும்பாண்மையான மக்கள் செய்கின்றனரே!
    3. மீலாது விழாக்கள் மூலம் நபி (ஸல்) அவர்களை எப்போதும் நினைவில் இருத்திக்கொள்கிறோம்.
    4. இறைவனை நெருங்குவதற்காக கல்வியறிவுடைய பயபக்தியுடைய மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டது
    5. நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பித்அத்துல் ஹஸனா ஆகும்.
    6. இஸ்லாம் நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே நாங்கள் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம்.
    7. நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் மூலம் நாம் அவர்களின் வரலாற்றைப் படித்து அதன் மூலம் மற்றவர்களை நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்ற ஊக்கப்படுத்துகிறோம்.
  7. நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவது குற்றத்திற்குரிய பித்அத்தே!
  8. கருத்து வேறுபாடு ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?

1) இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கம்: –

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவனே (நாம் அறிந்த, அறியாத) பேரண்டத்தின் அதிபதி. அவன் இறையச்சமுடையவர்களுக்கு நல்ல வெகுமதிகளையும், அவனுடைய வரம்பை மீறுபவர்களுக்கு பெரிய அழிவையும் தரக்கூடியவன். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை: அவனுக்கு யாதொரு இணையுமில்லை: சர்வ வல்லமையும், அதிகாரமும் அவனுக்கே உரியது என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், திருத்தூதருமாவார்கள்: அவர்கள் நபி மார்களுக்கு எல்லாம் இறுதி முத்திரையாக இருக்கிறார்கள்: மொத்த சமுதாயத்திற்கும் தலைவராக இருக்கிறார்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும், அவர்களுடைய தோழர்கள் மற்றும் அவர்களை இறுதி தீர்ப்பு நாள் வரை பின்பற்றக் கூடியவர்கள் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக.

அல்லாஹ் ஸுப்ஹானஹுவத்தஆலா, அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை, நேர்வழிகாட்டியுடனும், மனித குலத்திற்கு ஓர் அருளான சத்திய இஸ்லாமிய மார்க்கத்துடனும், நன்மைகளைப் புரிவோருக்கு ஓர் முன்மாதிரியாகவும் அனுப்பி வைத்தான். அல்லாஹ் மனித குலம் அனைத்திற்கும், அவர்கள் தங்களைச் சீர்திருத்திக் கொள்வதற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும், அதாவது மார்க்கம் மற்றும் அன்றாட அலுவல்களை இறை நம்பிக்கையுடன் நடத்திச் செல்வதற்கும், நல்ல நடத்தைகளையும், அழகிய முன்மாதிரிகளையும், போற்றத்தக்க நற்குணங்களையும், நம்முடைய நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகவும், அவர்களுக்கு அருளிய குர்ஆன் மற்றும் அவர்களுடைய சுன்னத்தான வழிமுறைகளின் மூலமாகவும் காட்டிவிட்டான்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஸஹீஹான ஹதீஸ் கூறுகிறது :

“நான் உங்களிடம் ஒரு ஒளிமயமான பாதையை விட்டுச் செல்கிறேன். அதில் இரவு கூட பகலின் ஒளியைப் போல் இருக்கிறது”

அன்பான சகோதர சகோதரிகளே,

இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மதமும் அதனுடைய ஆன்மீக நெறி என்பதைப் பற்றி மட்டும் போதித்துக்கொண்டிருக்கும் வேளையில் இஸ்லாம் மட்டுமே ஒருவருடைய பிறப்பு முதல் இறப்பு வரை நிகழக்கூடிய அனைத்து விஷயங்களில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் அந்தந்த சூழ்நிலைகளில் ஒரு முஸ்லிம் தான் என்ன செய்ய வேண்டும் எனவும் எதை செய்யக் கூடாது எனவும் போதிக்கிறது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஒரு மனிதருடைய குடும்ப வாழ்க்கை, கொடுக்கல் வாங்கல், வணக்க வழிபாடுகள், அரசியல், சந்தோசம், துக்கம் போன்ற எல்லாத் துறைகளிலும் அவனுக்கு தேவையான அறிவுரைகளையும் விழிமுறைகளையும் காட்டி முழுமையான மார்க்கமாகத் திகழ்கிறது.  இதையே அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தன்னுடைய மார்க்கத்தை தான் முழுமைப் படுத்தி விட்டதாகக் கூறுகிறான்.

“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” (அல-குர்ஆன் 5:3)

2) அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டியதன் அவசியம்: –

முஸ்லிமான ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் விழிமுறைகளையும் தம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் பின்பற்றி வாழ வேண்டும் எனவும் அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் எவ்வித கூடுதல் அல்லது குறைவோ செய்யக் கூடாது எனவும் அல்குர்ஆன் நமக்கு வலியுறுத்துகிறது.

அல்லாஹ் கூறுகிறான்: –

 (நபியே!) நீர் கூறும்; “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 3:31)

(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (அல்-குர்ஆன் 7:3)

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். . (அல்-குர்ஆன் 6:153)

நபி (ஸல்) அவர்கள் ஓரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்:

“…செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.  அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி

எனவே  சகோதர, சகோதரிகளே மேற்கூறிய வசனங்கள் மற்றும் நபிமொழிகள் அனைத்தும் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையுமே நாம் பின்பற்றி வாழ வலியுறுத்துவதை அறிகிறோம்.

3) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட ஒரு புதுமையான விஷயமே!

நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட பல வழிகேடுகளில், புதுமைகளில் மீலாது விழா என்றழைக்கபடக் கூடிய நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களாகும். இந்த தினத்தை பல்வேறு பிரிவினர் பல்வேறு விதமாகக் கொண்டாடுகின்றனர்.

இன்றைய காலக்கட்டத்தில் தமிழகத்தில் பரவலாக காணப்படும் இந்த மீலாது விழாக்கொண்டாங்களும் அவற்றின் போதும் நடைபெறும் அனாச்சாரங்களும்: –

ரபியுல் அவ்வல் பிறை 12 அல்லது அந்த மாதம் முழுவதும் விழா நடத்துகின்றனர்.

தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் வீடுகளையும், தெருக்களையும் அலங்கரித்து கிறிஸ்தவர்கள் தங்களின் பண்டிகைகளின் போது தொங்கவிடும் நட்சத்திர விளக்குகளைப் போல் தொங்கவிடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்களைப் புகழ்வதாகக் கூறிக்கொண்டு கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஷிர்க் நிறைந்த மவ்லிது பாடல்களை பாடவிட்டு அவர்களுக்கும் அங்கு வந்திருக்கின்ற அனைவருக்கும் சீரணி மற்றும் நெய் சோறு வழங்குகின்றனர்.

மார்க்கம் அனுமதிக்காத வகையில் கூச்சலும் மேளதாளமும் முழங்க பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் போக்குவரத்துக்களை வேற்றுப்பாதைகளில் திருப்பிவிட்டு சாலைகளை அடைத்துக்கொண்டு ஊர்வலம் செல்கின்றனர்.

அவ்வாறு உர்வலம் செல்லும் போது சில சமூக விரோதிகள் அதன் மூலம் வகுப்புக் கலவரத்தைத் தூண்டி முஸ்லிம்களின் உயிர் மற்றும் பொருட்களுக்கு சேதத்தை ஏற்படுத்துவது.

பெரும் பொருட்செலவில் பிரமாண்டமான விழா மேடைகளையும் பந்தல்களையும் அமைத்து இறை நிராகரிப்பாளர்களை அழைத்து அந்த மேடையில் அமரவைத்து அவர்களை கவுரவித்து அவர்களை முஸ்லிம்களுக்கு உரையாற்ற வைப்பது.

சிலர் அந்த நாட்களில் நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறி புகழ்ந்து அவர்களிடம் நேரடியாக உதவி கோருவது.

இவ்வாறு இந்த அனாச்சாரங்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். எந்த வகையில் இந்த நாட்களை; கொண்டாடினாலும் எந்த நோக்கத்திற்காக கொண்டாடினாலும் இவைகள் அனைத்தும் இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட நூதன செயல்களேயாகும். இவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்புமில்லாதது மட்டுமல்லாமல் இவைகள் அனைத்துமே நிராகரிக்கப்படவேண்டியவைகளாகும்.

4) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா – சிறிய வரலாற்றுக் கண்ணோட்டம்: –

நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது நபி (ஸல்) அவர்களால் சிறந்த சமுதாயம் என போற்றப்பட்ட சஹாபாக்கள், தாயீன்கள் மற்றும் தபஅ தாயீன்களின் காலத்திலோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாட்கள் கொண்டாடப்பட வில்லை. இஸ்லாத்தின் உண்மையான கொள்கைகளைச் சிதைப்பதற்காக முதன் முதலில் ‘ஷியாக்களின் பாத்திமிட்’ ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது தான் இந்த மீலாது விழாக்கள். உண்மையான முஃமின்களுக்கும் ஷியாக்களின் இந்த நூதன கண்டுபிடிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

வரலாற்று ஆசிரியர் இப்னு கல்கான் என்பவர் கூறுகிறார்: –

ஃபாத்திமிட் ஆட்சியாளர்களுக்குப் பிறகு இதை விமர்சையாக முதன் முதலில் கொண்டாடியவர் ஈராக்கில் இர்பில் என்ற பகுதியை கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் அல்லது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆட்சி செய்த மன்னர் அல்-முஜஃப்பார் அபூ சயீத் கவ்கபூரி என்பவராவார்.

மற்றொரு ஆய்வாளர் அபூ ஷாமா என்பவர் கூறுகிறார்: –

ஈராக்கின் மோசுல் நகரில் ஷெய்ஹூ உமர் இப்னு முஹம்மது அல்-மலா என்பவர் தான் முதன் முதலில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடினர். பின்னர் இர்பில் நகரின் ஆட்சியாளர்களும் மற்றவர்களும் அதைப் பின்பற்றினர்.

அல்-ஹாபிஸ் இப்னு கதீர் அவர்கள் தன்னுடைய ‘அல்-பிதாயா வல் நிகாயா’ என்ற நூலில் மன்னர் அபூ சயீத் கவ்கபூரி அவர்களின் சரிதையைப் பற்றிக் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகிறார்கள்: –

‘அவர் ரபியுல் அவ்வல் மாதத்தில் மிகப்பெரிய விழாவை ஏற்பாடு செய்வார், முஜஃப்பரின் விருந்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் கூறினர், ‘அவர் அந்த விழாவில் கலந்துக் கொண்டவர்களுக்கு தீயில் சுடப்பட்ட ஐந்தாயிரம் ஆடுகளின் தலைகளையும் , பத்தாயிரம் கோழிகளையும், ஆயிரம் பெரிய பாத்திரங்களில் உணவுகளையும், முப்பது தட்டுகளில் இனிப்பு வகைகளையும் வழங்கியதாக கூறினர். மேலும் அந்த விழாக்களில் கலந்துக் கொண்ட சூஃபியாக்கள் லுகர் முதல் மறுநாள் விடியற்காலை பஜ்ர் வரையிலும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்ததாகவும் மன்னரும் அந்த ஆட்டம் பாட்டத்தில் கலந்துக் கொண்டதாகவும் கூறினர்’

வரலாற்று ஆசிரியர் இப்னு கல்தான் தன்னுடைய நூல் ‘வாஃபியாத் அல்-அய்யான்’ என்னும் நூலில் கூறுகிறார்: –

‘ஸபர் மாதத்தின் ஆரம்பத்திலேயே அவர்கள் கோபுரங்களின் உச்சிகளை அலங்கரிக்கத் துவங்கிவிடுவர். கோபுரங்களின் உச்சியில் பாடகர்களும், இசையமைப்பவர்களும் மற்றும் நடனமாடுபவர்களும் அமர்ந்து ஆட்டம்பாட்டத்திலிருப்பர். ஒரு போபுரத்தைக் கூட இவ்வாறு அலங்கரிக்காமல் விடுவதில்லை. மக்கள் அந்த நாட்களில் வேலைக்குச் செல்லாமல் அந்த வேடிக்கைகளைக் கண்டு களித்துக் கொண்டிருப்பார்கள்’

இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா ஷியாக்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இஸ்லாத்தில் ஊடுருவ ஆரம்பித்தது. மார்க்கம் அறியா பாமர மக்களும் இவ்வாறு கொண்டாடுவது புனிதம் என்று கருதலாயினர். இதற்கு அல்லாஹ்வின் வேதத்திலோ அல்லது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலோ எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. எனவே இது இஸ்லாத்தில் தோற்றுவிக்கப்பட்ட பித்அத் என்னும் நூதன செயலேயாகும்.

ஒவ்வொரு உண்மையான முஸ்லிமும் இதிலிருந்து தவிர்ந்துக் கொள்வதோடு அல்லாமல் இத்தகைய தீய செயல்களை களைவதற்கு பாடுபட வேண்டும்.

5) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களை ஏன் கொண்டாடக் கூடாது?

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றது.

a) நபி (ஸல்) அவர்களோ அல்லது அவர்களைப் பின்தொடர்ந்த நேர்வழி பெற்ற கலிபாக்களோ அல்லது சஹாபாக்களோ அல்லது அவர்களுக்குப் பின் வந்த இரண்டு சிறந்த சமுதாயங்களோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாடவில்லை: –

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

“என்னுடைய வழிமுறைகளையும் நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறைகளையும் வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். இவைகளை உங்களின் முன்பற்களுக்கு இடையில் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். (இஸ்லாத்தில்) நுழைக்கப்படும் புதிய அமல்களைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள். ஒவ்வொரு புதிய அமலும் பித்அத் ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். ஓவ்வொரு வழிகேடும் நரகத்திற்குரியவை” என்று கூறினார்கள். (ஸஹீஹ் அல்-ஜாமிஅஸ் ஸகீர். ஹதீஸ் எண். 2549)

b) நாம் முன்னர் கூறியது போன்று இவ்வகையான விழாக்கள் ஷியாக்களான ‘பாத்திமிட்’ வம்ச மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டு இஸ்லாத்தில் நுழைக்கப்பட்டது: –

யாரேனும் ஒருவர் நான் அல்லாஹ்விடம் நெருக்கமாகுவதற்காக நபி (ஸல்) அவர்களோ அல்லது அவர்களைப் பின்பற்றிய நபித்தோழர்களோ செய்யாத இச்செயல்களைச் செய்கிறேன் என்று கூறினால் அவர் அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் மார்க்கத்தை முழுமையாக எங்களுக்குப் போதிக்க வில்லை, அதனால் மிகச்சிறந்த இந்தச் செயலை நான் செய்கிறேன் என்று கூறி அல்லாஹ் இறக்கியருளிய

‘இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்கா நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்’ (அல் குர்ஆன் 5:3)

என்ற வசனத்தை நிராகரித்தது போலாகும். (இவ்வாறு எண்ணம் கொள்வதிலிருந்தும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாகவும்.) ஏனென்றால் இவர் அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ போதிக்காத ஒன்றை, பிறர் மூலம் இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட ஒன்றை மார்க்கம் என்றும் அதை செய்வதால் நன்மை கிடைக்கும் என்று கருதி செயல்படுகிறார்

c) நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவது கிறிஸதவர்களின் செயல்களைப் பின்பற்றுவது போலாகும்: –

கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களின் பிறந்த நாள் என்று கருதி ஒரு தினத்தைக் கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்களைப் பின்பற்றுவது என்பது மார்க்கத்தில் முழுவதுமாக தடுக்கப்பட்ட (ஹராம்) ஒன்றாகும். ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் இறை நிராகரிப்பாளர்களைப் பின்பற்றக் கூடாது என்றும் நாம் அவர்களிலிருந்து வேறுபட்டு இருக்க வேண்டும் எனவும் நமக்குத் வலியுறுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

‘யார் பிறருக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே! ஆதாரம் அபூதாவுத்.

மேலும் கூறினார்கள்

‘இறை நிராகரிப்பாளர்களிலிருந்து வேறுபட்டு இருங்கள்’ ஆதாரம் முஸ்லிம்.

எனவே நாம் இறைநிராகரிப்பாளர்களின் செயல்களைக் குறிப்பாக வணக்க வழிபாடுகளைப் பின்பற்றி நடக்கக் கூடாது.

d) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களில் இஸ்லாம் அனுமதிக்காத வீண் ஆடம்பரச் செலவுகளும் கேளிக்கைகளும் நடைபெறுகிறது: –

மீலாது விழாக்கள் என்ற பெயரில் தமிழகத்தில் நடைபெறும் கூட்டங்களில் வீண் ஆடம்பரத்திற்காக பெரும் பொருட்செலவில் பிரமாண்டமான விழா பந்தல் அமைத்து அதில் தோரணம் கட்டி அழகு படுத்துகின்றனர். மேலும் தஞ்சை,திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் இவ்வகை விழாக்கள் நடைபெறும் போது கோயில் திருவிழாக்கள் தோற்றுவிடும் அளவிற்கு கடைகள் அமைக்கப்பட்டு ஆண் பெண்கள் குழுமுகின்றனர். அது பல்வேறு அனாச்சாரங்களுக்கு வழி வகுப்பதோடல்லாமல் இஸ்லாத்திற்கு முரணாகவும் உள்ளது.

e) இவ்வகை விழாக்களில் ஷிர்க் நிறைந்த மவ்லிது மற்றும் புர்தா போன்ற அரபி பாடல்களை பாடுகின்றனர்: –

இவ்விழாக்களில் கஸீதத்துல் புர்தா, சுப்ஹான மவ்லிது போன்ற அரபிப் பாடல்களை இன்றைய கால சினிமாப்பாடல்களின் இராகத்திற்கேற்ப மெட்டு அமைத்து பாடுகின்றனர். இவ்வகை பாடல்களில் மூலம் நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்து அவர்களை அழைத்து உதவியும் தேடுகின்றனர். இன்னும் சில ஊர்களில் ஒரு படி மேலே சென்று விழாவிற்கு வந்திருக்கும் அனைவரும் எழுந்து நின்று சுப்ஹான மவ்லிதில் வரும் ‘யா நபி’ பாடலை பாடுகின்றனர். இவ்வாறு பாடும்போது நபி (ஸல்) அவர்கள் அங்கே ஆஜர் ஆகிறார்கள் என்றும் நம்பிக்கைக் கொள்கின்றனர். இது வெளிப்படையான ஷிர்க் என்னும் இணைவைத்தவலாகும். நபி (ஸல்) அவர்கள் தம்மை வரம்பு மீறிப் புகழ்வது குறித்து எச்சரித்திருக்கிறார்கள்.

‘கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போல் (என்னைப்) புகழாதீர்கள். நான் அவனுடைய அடிமையே. எனவே அல்லாஹ்வின் அடிமையும் அவனது தூதரும் ஆவார்கள் என்று கூறுங்கள்” ஆதாரம் : புகாரி

இவ்வாறாக பல்வேறு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். விரிவுக்கு அஞ்சி இங்கே அனைத்தையும் குறிப்பிடவில்லை.

6) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுபவர்களின் வாதங்கள்: –

இந்த பித்அத்களைப் புரிவோர் தங்களுக்கு ஆதாரமாக பலவகையான வாதங்களை முன் வைக்கின்றனர். இவைகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற மிக பல வீனமானவைகளாகும். அவைகளை சற்று ஆராய்வோம்.: –

6a) நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களை மதிக்கின்றோம் என கூறுகின்றனர்: –

நபி (ஸல்) அவர்களை மதிப்பது என்பது,

  • அவர்கள் கட்டளையிட்டவற்றை ஏற்று அதன்படி நடப்பதும்,
  • அவர்கள் தடுத்தவற்றிலிருந்தும் விலகி இருப்பதும் மற்றும்
  • அவர்கள் மீது அன்பு செலுத்துவதும் ஆகும்.

ஆனால் ஒருவர் நபி (ஸல்) அவர்கள் ஏவிய கட்டளைகளைப் பின்பற்றாதது மட்டுமல்லாமல் அவர்கள் தடுத்தவற்றைச் செய்து கொண்டே நான் நபி (ஸல்) அவர்களை மதிக்கிறேன் என்று கூறுவது எந்த வகையில் அறிவீனமானது என்று நாம் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இதற்கு அனைவருக்கும் தெரிந்த தந்தை மகன் உதாரணம் ஒன்றைக் கூறலாம்: –

ஒருவர் தம்முடைய தந்தையை மிகவும் மதிப்பதாகக் கூறுகிறார். ஆனால் அவர் செய்வதெல்லாம் அந்த தந்தையின் கட்டளைக்கு நேர்மாற்றம். தந்தை எதையெல்லாம் செய்யக் கூடாது என கூறினாரே அதை மகன் விரும்பிச் செய்கின்றார். தந்தை எதைச் செய்ய வேண்டும் என சொன்னாரோ அதை மகன் கண்டுக்கொள்வதே இல்லை. மகனின் இந்தச் செயல் தந்தைக்கு மரியதை செலுத்தி கண்ணியப் படுத்தியக் கருதப்படுமா அல்லது தந்தையின் பேச்சைக் கேட்காதது மூலம் அவரை இழிவு படுத்தியதாக் கருதப்படுமா? சிந்தியுங்கள் எனதருமை சகோதர சகோதரிகளே!

மேலும் நபி (ஸல்) அவர்களை சஹாபாக்கள் மதித்தது போல் வேறு யாரும் மதிக்க முடியாது. ஆனால் சஹாபாக்களோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடவில்லை. இவ்வாறு பிறந்த தினங்களைக் கொண்டாட வேண்டும் என்று இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தால் சஹாபாக்கள் தான் முதலில் செய்திருப்பார்கள். அந்த அளவிற்கு நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றி நடப்பவர்களாகவும் நபி (ஸல்) அவர்களுடைய சுன்னத்தைப் பேணி நடப்பவர்களாகவும் சஹாபாக்கள் வாழ்ந்தனர். ஆனால் யாரும் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை விழாவாக கொண்டாடியதாக ஒரு சிறு ஆதாரம் கூட கிடையாது.

இவர்கள் சஹாபாக்களை விட அதிகமாக நபி (ஸல்) அவர்களை மதிக்கிறார்களா? அல்லது இத்தகைய நல்ல அமல்கள் சஹாபாக்களுக்குத் தெரியாமல் போய்விட்டதா? எனவே இவர்களின் நாங்கள் நபி (ஸல்) அவர்களை இந்த விழாவின் மூலம் மதிக்கிறோம் என்ற வாதம் அர்த்தமற்றதும் அவர்களுக்கே எதிரானதும் ஆகும்.

6b) பெரும்பாண்மையான மக்கள் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனரே! அதனால் நாங்களும் கொண்டாடுகிறோம்: –

நபி (ஸல்) அவர்களின் ‘(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை’ என்ற கூற்றுப்படி பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பித்அத் என்றும் வழிகேடு என்று உறுதியான பிறகு எத்தனை நபர்கள் எத்தனை நாடுகளில் பின்பற்றினால் என்ன?

உலகில் உள்ள பெரும்பாண்மையான மக்கள் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்றும் அவர்களைப் பின்பற்றினால் வழி கெடுத்து விடுவார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறானே!

பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் – இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். (அல்-குர்ஆன் 6:116)

இன்னும் அநேக வசனங்களில் பெரும்பாலோரைப் பின்பற்றக் கூடாது என்றும் அதற்குரிய காரணத்தையும் அல்லாஹ் விளக்குகிறான்:-

  • பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள். (2:100)
  • பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (2:243)
  • பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.(5:32)
  • பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.(5:49)
  • பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள் (5:59)
  • பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்படுவதை (நபியே!) நீர் காண்பீர்.(5:62)
  • பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையாகும (5:66)
  • பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர் (5:103)
  • பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர். (6:111)
  • பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (6:116)
  • பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள் (6:119)
  • பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை (10:36)
  • பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.(7:117, 10:60)
  • பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்’ (10:92)
  • பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை (11:17)
  • பெரும்பாலோர் காஃபிர் (நன்றி கெட்டவர்)களாகவே இருக்கின்றனர். (16:83)
  • பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை; ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள். (21:24)
  • பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள். (23:70)
  • பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.(29:63)

எனவே பெரும்பாலானோரைப் பின்பற்றுவது என்பது மேற்கூறப்பட்ட வசனங்களுக்கு எதிரானதாகும்.

6c) மீலாது விழாக்கள் நபி (ஸல்) அவர்களை எப்போதும் நினைவில் இருத்திக்கொள்ள உதவும்: –

நபி (ஸல்) அவர்களை மீலாது விழாக்களில் மட்டும்தான் நினைவுபடுத்த வேண்டுமா? மற்ற நாட்களில் நினைவு படுத்தக்கூடாதா? முஃமின்களுக்கு நபி (ஸல்) அவர்களிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருப்பதாக அல்லாஹ் கூறுகிறானே (அல்-குர்ஆன் 33:21)! அப்படியென்றால் வருடத்தில் ஒருமுறை நினைவுபடுத்தி அந்த அழகிய முன்மாதிரியைப் பின்பற்றி விட்டு மற்ற நாட்களில் நினைவு படுத்தத் தேவையில்லையா? இல்லை சகோதர சகோதரிகளே! இது முற்றிலும் தவறு.

உண்மையான முஸ்லிம்கள் எல்லாக் காலங்களிலும், எல்லா நேரங்களிலும் நபி (ஸல்) அவர்களை நினைவில் இருத்திக் கொண்டே இருப்பார். அதாவது,

  • நபி (ஸல்) அவர்களின் பெயர் கூறப்படும் போதெல்லாம் அவர்கள் மீது சலவாத்து கூறுவார்கள்
  • நபி (ஸல்) அவர்களின் பெயர் பாங்கு, இகாமத், குத்பா உரை மற்றும் தொழுகையின் போதும் நினைவு கூர்ந்து சலவாத்து கூறுவார்
  • ஒவ்வொரு முறையும் நபி (ஸல்) அவர்கள் ஏவிய வாஜிபான, முஸதஹப்பான கடமைகளைச் செய்யும் போதும் நினைவு கூறுவார்
  • நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அன்றாடம் ஓத வேண்டிய துஆக்களை ஓதும் போதும் நினைவு கூறுவார்

இவ்வாறாக ஒரு முஃமின் இரவு பகல் என பாராது, மீலாது விழா நாட்கள் என்றும் பாராமல் எந்நேரமும் நபி (ஸல்) அவர்கள் ஏவிய நன்மையான செயல்களைச் செய்வதன் மூலமும் நபி (ஸல்) அவர்கள் தடுத்த தீமையான காரியங்களைச் செய்வதிலிருந்தும் விலகியிருத்தல் மூலமும் எந்நேரமும் நபி (ஸல்)அவர்களை நினைவில் இருத்திக்கொண்டேயிருப்பார்.

ஆனால் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவோர் நபி (ஸல்) அவர்கள் தடுத்த தீமையான செயலான பித்அத் என்னும் நூதன செயலைச் செய்வதன் மூலம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து விலகி தூரமாகச் செல்கின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இந்த வகையான பித்அத்தான விழாக்கள் தேவையில்லை. ஏனென்றால் ஏற்கனவே அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தி அவர்களின் அந்தஸ்தை உயர்த்தி விட்டான்.

அல்லாஹ் கூறுகிறான்: –

மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். (அல்-குர்ஆன் 94:4)

மேலும் தினமும் ஐவேளை கூறக்கூடிய பாங்கு மற்றும் இகாமத் போன்றவற்றிலும், குத்பா பேருரைகளிலும், தொழுகையிலும் நபி (ஸல்) அவர்களின் பெயரும் குறிப்பிடப்படுகிறது. மேலும் திருமறையை ஓதும் ஒவ்வொரு முறையும் நபி (ஸல்)அவர்களை நினைவு கூராமலிருப்பதில்லை! இதுவே நபி (ஸல்) அவர்களைக் கண்ணியத்திற்கும், அவர்களின் மீது அன்பு செலுத்தி அவர்களைப் பற்றிய நினைவை புதுப்பித்துக் கொள்வதற்கும் அவர்களைப் பின்பற்றி வாழ்வதற்கான ஊக்கத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்கும் போதுமானதாகும்.

உண்மையான முஃமின் அனு தினமும் இஸ்லாத்தின் காரியங்களைச் செய்து வருவாராயின் அதன் மூலம் நபி (ஸல்) அவர்களை நிணைவு படுத்திக் கண்ணிப்படுத்தியவராகக் கருதப்படுவார். மாறாக பிறந்த நாள் விழா போன்ற பித்அத்தான செயல்களைச் செய்வதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு மாறு செய்பவர்கள் எவ்வாறு நபி (ஸல்) அவர்களை நினைபடுத்தி கண்ணியப்படுத்தியவராவார்? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே!

6d) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் இறைவனை நெருங்குவதற்காக கல்வியறிவுடைய சிறந்த மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டது: –

பித்அத் அனைத்தும் வழிகேடுகள், அவைகள் நிராகரிக்கப்படவேண்டியவைகள் என்றிருக்கும் போது எவ்வளவு பெரிய அறிஞரால் கல்விமான்களால் அறிமுகப்படுத்தப்பட்டால் தான் என்ன?

6e)நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பித்அத்துல் ஹஸனா ஆகும்.

பித்அத்துகளில் நல்லவை கெட்டவை என்ற பாகுபாடே கிடையாது. அனைத்து பித்அத்துகளும் வழிகேடு என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

மேலும் கூறினார்கள்: –

‘(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரம்: அஹ்மத்

எனவே அனைத்து பித்அத்களும் நரகத்திற்குரிய வழிகேடுகளேயன்றி வேறில்லை.

நபி (ஸல்) அவர்களின் வார்த்தையான ‘அனைத்து பித்அத்களும் வழிகேடுகள்’ என்பது சுருக்கமான அதே நேரத்தில் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய கட்டளையாகும். இது இஸ்லாத்தின் மிக முக்கியமான கொள்கையாகும்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

‘நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது (இறைவனால்) நிராகரிக்கப்படும்’ என்று நபி (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம் அஹ்மத்)

எனவே மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில், ஒருவர் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை உருவாக்கினால் நிச்சயமாக அது வழிகேடே ஆகும், எனவே அவைகள் நிராகரிக்கடவேண்டிய ஒன்றாகும். இந்த வகையில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் சேரும்.

நபி (ஸல்) அவர்களுடைய பிறந்த தினங்களை கொண்டாடுவோருக்கு நம்முடைய கேள்விகள்: –

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி அதன் மூலம் அவர்களைக் கண்ணியப்படுத்துவதாக இருந்தால் இத்தகைய நல்லா செயல்களை ஏன் நபித்தோழர்களும், அவர்களுக்குப் பின் வந்த மூன்று தலைமுறையினரும் செய்யவில்லை. அவர்களுக்கு இத்தகைய நல்ல செயல்கள் தெரியவில்லை என்று பின் இந்த சஹாபாக்களுக்குப் பின்னர் வந்த சமுதாயத்தினர் கண்டுபிடித்தார்களா? இந்த புதுமையைக் கண்டு பிடித்தவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நேர்வழி பெற்ற கலீபாக்கள், சஹாபாக்கள் மற்றும் அடுத்து வந்த இரண்டு சமுதாயத்தவர்களான தாபியீன்கள் மற்றும் தபஅ தாபயீன்களை விடச் சிறந்தவர்களா? நிச்சயமாக இல்லை. பின்னர் அவர்களே செய்யாத புதுமையான ஒன்றை நாம் செய்ய வேண்டும்?

6f) இஸ்லாம் நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே நாங்கள் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம்: –

நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு செலுத்துவது முஸ்லிமான ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். ஒருவர் தம்முடைய உயிர், பொருள், குடும்பம் மற்றும் பெற்றோர்கள் இவர்கள் அனைவரையும் விட நபி (ஸல்) அவர்களை அதிகம் நேசிக்காதவரை அவர் உண்மையான முஃமினாக மாட்டார். ஆனால் அதற்காக நபி (ஸல்) அவர்கள் ஏவிய நற்செயல்களைச் செய்வதை விட்டு விட்டு அவர்கள் தடுத்த பித்அத்தான செயல்களைச் செய்வது என்பது எவ்வாறு அறிவுப்பூர்வமானதாகும். ஒருவர் மீது அன்பு செலுத்துவது என்பது அவர் சொன்னதையெல்லாம் செய்வதும் அவர் தடுத்ததிலிருந்து விலகி கொள்வது தானே அவர் மீது மரியாதை செலுத்தி அன்பு செலுத்துவது ஆகும்?

நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவது என்பது அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளை பின்பற்றி அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமான செயல்களைச் செய்வதிலிருந்தும் விலகியிருத்தல் ஆகும். நிச்சயமாக நபி (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமான அனைத்தும் பித்அத் ஆவதோடல்லாமல் நபி (ஸல்) அவர்களுக்குக் கீழ் படிய மறுப்பதாகும். நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதும் இதில் அடங்கும். ஒருவரின் நல்ல எண்ணம் அவருக்கு இஸ்லாத்தில் பித்அத்தை செய்வதற்குரிய அனுமதி ஆகாது.

இஸ்லாம் என்பது இரண்டு முக்கியமான விஷயங்களில் அமைந்துள்ளது.

  1. இக்லாஸ் என்னும் மனத்தூய்மை
  2. நபி (ஸல்) அவர்களின் வழி முறையைப் பின்பற்றுவது.

எனவே நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவது என்பது நபி (ஸல்) அவர்களுடைய மற்றும் குர்ஆனுடைய கட்டளைகளை மீறி செயல்படுவது அல்ல! மாறாக நபி (ஸல்) அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரம் ஆகியவைகளை ப்பின்பற்றுவதன் மூலம் அவர்களை கண்ணியப்படுத்தி அன்பு செலுத்துவதாகும்.

6g) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் மூலம் நாம் அவர்களின் வரலாற்றைப் படித்து அதன் மூலம் மற்றவர்களை நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்ற ஊக்கப்படுத்துகிறோம்: –

நாம் இது வரை விளக்கியவைகளே இந்தக் இவர்களின் இந்தக் கேள்விக்கும் பதிலாக அமைகிறது. நபி (ஸல்) அவர்களின் வரலாற்றைப் படித்து அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறையைப் எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும், வருடம் முழுவதும் ஏன் தாம் மரணமடையும் வரையிலும் பின்பற்றி வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும். ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் அவ்வாறு செய்வது என்பது பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் அவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகிச் செல்கிறார்.

7) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவது குற்றத்திற்குரிய பித்அத்தே!: –

எந்த வகையில் பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவது என்பது குற்றத்திற்குரிய பித்அத் என்ற இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட நூதன செயலாகும்.

ஒவ்வொரு முஸ்லிமும் இந்தச் செயல்களை தடுத்து நிறுத்த முடியுமானவரை முயற்சி எடுத்து நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை மேலோங்கச் செய்யப் பாடுபடவேண்டும்.

இந்த நூதன செயல்களைச் செய்பவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவேண்டும். ஏனென்றால் இத்தகையவர்கள் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவைப் பின்பற்றுவதற்குப் பதிலாக புதிய அனாச்சாரங்களையும் பித்அத்களையுமே மார்க்கம் என்று கருதி செயல்படுவர்.

எத்தனை நபர்கள் இந்த நூதன செயல்களைச் செய்தாலும் ஒரு உண்மையான முஃமின் அவர்களைப் பின்பற்றக்கூடாது. மாறாக அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையை, அதை பின்பற்றுபவர்கள் வெகு சொற்பமாயினும் சரியே அதை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

சத்தியத்தின் அளவுகோல் எத்தனை நபர்கள் அதை செய்கிறார்கள் அல்லது பேசுகிறார்கள் என்பது அல்ல! மாறாக சத்தியத்தின் அளவு கோல் உண்மையே!

8) கருத்து வேறுபாடு ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

‘உங்களில் யாரேனும் (நீண்ட நாள்) வசிப்பீர்களானால் பல வேறுபாடுகளைக் காண்பீர்கள். என்னுடைய வழிமுறையையும் எனக்குப் பின்னால் வரக்கூடிய நேர்வழிபெற்ற கலிபாக்களின் வழிமுறைகளையும் பின்பற்றி நடக்க நான் உங்களை வலியுறுத்துகிறேன். அவைகளை வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படுவதை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள்; ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்’ (ஆதாரம் அஹ்மத் மற்றும் திர்மிதி)

இந்த ஹதீஸில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றக் கூடிய காலக்கட்டங்களில் நாம் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். புதிதாக தோன்றக் கூடியவைகள் அனைத்தும் வழிகேடுகள் என்றும் அவைகளை விட்டும் எச்சரிக்கையாக இருக்குமாறும் நமக்கு வலியுறுத்திக்கிறார்கள்.

எனவே நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலோ அல்லது நேர்வழிபெற்ற கலிபாக்களின் வழிமுறைகளிலோ அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாததால் இது வழிகேட்டின் பால் இழுத்துச் செல்லும் ஒரு பித்ஆத் ஆகும். இதுவே மேற்கூறப்பட்ட ஹதீஸின் கருத்துப்படி உள்ள பொருளாகும். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: –

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் 4:59)

இந்த வசனத்தில் அல்லாஹ்வுக்குக் கீழ் படியுங்கள் என்று கூறப்பட்டிருப்பதன் விளக்கமாவது அல்லாஹ்வின் கூற்றாகிய அல்-குர்ஆனுக்கு கீழ்படிவதாகும்.

அல்லாஹ்வின்தூதருக்கு கீழ்படியுங்கள் என்றால் அவர்களது மறைவிற்குப் பின்னர் அவர்களுடைய சுன்னாவைப் பின்பற்றுதல் என்பதாகும்.

ஏதேனும் பிணக்கு அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அல்லாஹ்வுடைய வேதத்திலும் அவனுடைய தூதரின் சுன்னாவிலும் தான் தீர்வு காணவேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்.

எனவே குர்ஆனிலோ அல்லது சுன்னாவிலோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த நானைக் கொண்டாடுமாறு எங்கே கூறப்பட்டிருக்கிறது?

யாரேனும் இந்தச் செயலைச் செய்தால் அல்லது நல்லது எனக் கருதினால் இதிலிருந்து அவர் உடனடியாக மீண்டு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்கவேண்டும். இதுவே உண்மையைத் தேடும் ஒரு முஃமினின் பண்பாகும். ஆனால் இந்த உண்மை தெள்ளத் தெளிவாக விளங்கிய பின்னரும் யாரேனும் பிடிவாதமாகவும் ஆணவமாகவும் இருந்தால் அவருடைய கணக்கு அல்லாஹ்விடமே உள்ளது.

அல்லாஹ்வின் வேதமாகிய அல்-குர்ஆனையும் அவனுடைய இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் தெளிவான சீரிய வழிகாட்டுதல்களையும் நாம் அல்லாஹ்வை சந்திக்கும் வரையிலும் உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு அவற்றைப் பின்பற்றி வாழ வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவோம்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *