பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
“அல்லாஹ்வின் அடிமைகளாகிய பெண்களை மஸ்ஜிதுகளுக்குச் செல்வதிலிருந்து தடுத்து வைக்காதீர்கள். அவர்கள் நறுமணம் பூசிக்கொள்ளாமல் செல்லவேண்டும்”. அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், அஹ்மத்
‘நறுமணம் பூசிய பெண்கள் நம்முடன் இரவுத் தொழுகையில் கலந்துக் கொள்ளக் கூடாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம், அபூதாவுத், நஸயீ.
உம்மு ஹூமைத் அஷ்ஷைய்யிதாஹ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ‘ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! நான் உங்களுடன் தொழ விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘அதை நான் அறிவேன், ஆனால் உன் தொழுகையை உன் வீட்டில் தொழுவதே உன் தொழுகையை உன்னுடைய மக்களின் மஸ்ஜிதுகளில் தொழுவதை விடச் சிறந்தது. உன் தொழுகையை உன்னுடைய மக்களின் மஸ்ஜதுகளில் தொழுவது உன்னுடைய தொழுகையை (பெரிய) ஜமாத்தாக தொழும் மஸ்ஜிதிகளில் தொழுவதை விடச் சிறந்ததது. ஆதாரம் : அஹ்மத் மற்றும் அத்தப்ரானி
நபி (ஸல்) அவர்களின் மனைவியும் முஃமின்களின் அன்னையுமான உம்மு ஸலாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதின் வெளிப்புறத்திற்கு வந்து அவர்களின் உரத்த குரலில் “மாதவிடாய் வந்த பெண்களும் குளிப்புக் கடமையானவர்களும் மஸ்ஜிதுகளுக்கு வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்“ ஆதாரம்: இப்னு மாஜா, அத்தப்ரானி.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: –
“பெண்கள் அவர்களின் வீடுகளில் (தொழுவது) சிறந்ததாக இருப்பினும் மஸ்ஜிதுக்கு செல்லும் பெண்களைத் தடுக்காதீர்கள்” ஆதாரம்: அஹ்மத், அபூதாவுத்
மேலும் பல்வேறு ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் முஃமினான பெண்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜமாத்தாக தொழுததாகக் கூறுகிறது.
மேற்கூறப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையில்: –
ஒரு முஃமினான பெண் மஸ்ஜிதுக்குச் சென்று தொழ விரும்பினால் அவருக்கு முழு அனுமதியுள்ளது
மஸ்ஜிதுக்கு சென்று தொழ விரும்பும் பெண்களை யாரும் தடுக்கக் கூடாது. அவ்வாறு தடுப்பவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மார்க்கத்தில் அனுமதித்த ஒரு செயலை தடுத்த குற்றத்திற்கு ஆளாகிறார். ஏனெனில் முழுமைப் பெற்ற மார்க்கத்தில் யாருக்கும் ஒரு புதிய சட்டத்தை உருவாக்கவோ அல்லது நீக்கவோ எந்தவொரு அதிகாரமும் இல்லை.
அதே நேரத்தில் பெண்கள் பள்ளியில் சென்று ஜமாத்தாக தொழுவதை விட பெண்கள் வீடுகளில் தொழுவது விரும்பத்தக்கது
பெண்கள் விரும்பினால் மஸ்ஜிதுகளுக்குச் சென்று ஜமாத்தாக தொழலாம், ஆனால் ஆண்களைக் கவரக் கூடிய ஆடை அணிகலன்களை அணிந்தோ அல்லது வாசனை திரவியங்களோ பூசிக்கொண்டோ செல்லக் கூடாது.
மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், குளிப்புக் கடமையான பெண்களும் பள்ளிக்குச் செல்லக் கூடாது.
இந்த அடிப்படையில் தான் பல நாடுகளில் மக்கா மதீனா உட்பட பல நகரங்களில் பெண்களுக்கென தனி இட வசதியுடன் கூடிய மஸ்ஜிதுகள் அமைத்து பெண்கள் சென்று தொழக் கூடிய ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள்.
சர்வ வல்லமையும், அதிகாரமும் ஞானமும் நிறைந்த அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.