ஜக்காத் பணத்திலிருந்து பள்ளிவாசல் கட்டுவதற்கு கொடுக்கலாமா?
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
ஜக்காத் என்பது யார் யாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறியிருக்கிறான். அதைத் தவிர வேறு யாருக்கும் ஜக்காத் கொடுப்பதற்கு அனுமதியில்லை.
அல்லாஹ் கூறுகிறான்: –
“(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல்-குர்ஆன் 9:60)
பள்ளிவாசல் கட்டுவது என்பது இறைவனின் இந்த எட்டு பிரிவுகளில் வராததால் கடமையான ஜக்காத் நிதியிலிருந்து பள்ளிவாசல் கட்டுவதற்கு கொடுப்பது என்பது அனுமதியளிக்கப்பட்டதன்று. (அஷ்ஷெய்க் இப்னு பாஸ் அவர்களின் “மஜ்மூ பதாவா வமகாலாத் முதநவ்விய்யா”)
ஆனால் ஒருவர் தமது மேலதிகமான செல்வத்திலிருந்து பள்ளிவாசல் கட்டுவதற்காக தர்மமாக கொடுத்தால் அது அவருக்கு மிகப்பெரிய நன்மையைப் பெற்றுத் தரும்.
உபைதுல்லாஹ் அல் கூலானி (ரலி) அவர்கள் கூறினார்கள்: –
உஸ்மான் (ரலி) பள்ளியை விரிவுபடுத்திய போது ‘நீங்கள் மிகவும் விரிவுபடுத்தி விட்டீர்கள்’ என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு ‘அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்” என்று நபி (ஸல்) கூற செவியுற்றுள்ளேன்’ என உஸ்மான் (ரலி) கூறினார். ஆதாரம் : புகாரி.