நன்மைகளின் பால் ஆர்வம்
தமிழாக்கம்: முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப்
அழைப்பாளர்: அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-ஜுபைல்
بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.
அவனது சாந்தியும், சமாதானமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தவர்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
கேள்வி: சுவனத்தில் அல்லாஹ் உமது அந்தஸ்துகளை உயர்த்தவேண்டுமென விரும்புகின்றீரா?
பதில்: எவர் இறை இல்லத்திற்கு செல்லும் போதும், திரும்பும் போதும் (அதிக) எட்டுக்களை வைத்து செல்கின்றாரோ, அவரது ஒவ்வொரு எட்டுக்கும் செல்லும் போதும், திரும்பும் போதும் சுவர்க்கத்தில் அவரது அந்தஸ்துக்களை அல்லாஹ் உயர்த்துகிறான். (முத்தபகுன் அலைஹி).
கேள்வி: இந்த நபி மொழியை நீங்கள் நடைமுறை படுத்தி இருக்கின்றீரா?
பதில்: ஒவ்வொரு நாளும் காலையில் அடியார்கள் எழும் போது இரு மலக்குகள் இறங்காமல் இல்லை. அவர்கள் இருவரும் இறங்கி அதில் ஒருவர் இவ்வாறு கூறுவார்: யா அல்லாஹ்! (அல்லாஹ்வின் வழியில்) வழங்குபவருக்கு அதை விட சிறந்ததை வழங்குவாயாக! மற்றவர்: யா அல்லாஹ்! (அல்லாஹ்வின் வழியில்) வழங்காது தடுத்துக்கொள்பவருக்கு அழிவை ஏற்படுத்தி விடுவாயாக! என்று பிரார்த்திப்பார். (முஸ்லிம்).
கேள்வி: அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவதை நீங்கள் விரும்புகிறீரா?
பதில்: ‘எவர் என் மீது ஒரு முறை ஸலவாத்துச் சொல்கின்றாரோ அல்லாஹ் அவர் மீது பத்து முறை அருள் புரிகிறான்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
கேள்வி: நீங்கள் சுவர்க்கத்தில் உங்களுக்கு ஒரு மாளிகையை விரும்புகின்றீரா?
பதில்: ‘எந்த ஒரு முஸ்லிமான அடியான் அல்லாஹ்வுக்காக ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத்துகள் (கடமையான தொழுகைகளுக்கு முன் பின்) சுன்னத்துகளை தொழுது வருவாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான்’ (முஸ்லிம்).
கேள்வி: நீங்கள் இந்த அழகிய உபதேசத்தை செவி மடுத்துள்ளீரா?
பதில்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், ‘எனது நண்பர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு இவ்வாறு உபதேசம் செய்தார்கள்: ‘ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்குமாறும், லுஹாவின் இரண்டு ரக்அத்துகளை தொழுது வருமாறும், தூங்கச் செல்ல முன் வித்ரை தொழுமாறும்’ (முத்தபகுன் அலைஹி).
கேள்வி: நீங்கள் மரணித்த பின்பும் உங்கள் நல்லமல்கள் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டுமென விரும்புகின்றீரா?
பதில்: மஸ்ஜித்களை கட்டுங்கள், கிணறுகளை தோண்டுங்கள், ஸாலிஹான குழந்தையை வளர்த்தெடுங்கள், கல்வியை பரப்புவதற்காக புத்தகங்களை அச்சிடுங்கள், அவைகளை விநியோகம் செய்யுங்கள், மார்க்க உபதேசங்களையுடைய சீடிக்கைள, கேஸட்டுகளை பிரதி எடுத்து விநியோகம் செய்யுங்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தின் வளர்ச்சிக்காக பொருளுதவி செய்யுங்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனது அனைத்து அமல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன மூன்றைத் தவிர, (அவர் செய்யும்) நிலையான தர்மம், அல்லது பயனுள்ள கல்வி, அல்லது அவருக்காக பிரார்த்திக்கும் அவரது நல்ல குழந்தை.’ (முஸ்லிம்).
கேள்வி: உங்கள் பிரார்த்தனை அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப் படுவதை நீங்கள் விரும்புகின்றீரா?
பதில்: எவர் தனது சகோதரனுக்காக மறைவில் பிரார்த்திக்கின்றாரோ ஒரு வானவர் நியமிக்கப்பட்டு உமக்கும் அது போன்று எனக் கூறிக் கொண்டிருப்பார்’ (மூஸ்லிம்).
கேள்வி: அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான வார்த்தைகள் என்னவென்று உமக்கு தெரியுமா?
பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வார்த்தைகள் என்ன வென்று உமக்கு அறிவிக்கட்டுமா? எனக் கேட்டு விட்டு ‘ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்).
கேள்வி: உமது பாவங்கள் கடல் நுரைகளைப் போன்ற அளவுக்கு இருந்தாலும் மன்னிக்கப்பட விரும்புகின்றீரா?
பதில்: எவர் ஒருவர் ஒரு நாளைக்கு நூறு தடவை ‘ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என்று கூறுவாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கேள்வி: உமது இறைவனுக்கு மிக நெருகம்மாக இருப்பதற்கு நீர் விரும்புகின்றீரா?
பதில்: ஒரு அடியான் தனது நாயனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் சந்தர்பம் அவன் ஸுஜுதில் இருக்கும் போதாகும். எனவே அப்போது அதிகம் பிரார்த்தியுங்கள்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
கேள்வி: உம்மீது ஸகீனத் எனும் அமைதி இறங்குவதையும், அல்லாஹ்வின் அருள் வியாபிப்பதையும் விரும்புகின்றீரா?
பதில்: சிலர் ஓரிடத்தில் அமர்ந்து அல்லாஹ்வை நினைவு கூறும் போது வானவர்கள் அவர்களை சூழ்ந்து கொள்கின்றனர், அருள் அவர்களை வியாபிக்கிறது, அவர்கள் மீது ஸகீனத் எனும் அமைதி இறங்குகின்றது, அல்லாஹ்விடத்தில் அவர்களைப் பற்றி நினைவுகூறுகின்றனர்’ (முஸ்லிம்).
கேள்வி: நீங்கள் இந்த நபி மொழியை சற்று சிந்தித்தீர்களா?
பதில்: எந்த ஒரு முஸ்லிமுக்காவது ஏதாவதொரு துன்பம், நோய், கவலை, சோதனை, ஏற்படுமாயின் காலில் தைக்கும் முள் உள்பட அல்லாஹ் அவனது பாவங்களுக்கு பரிகாரமாக ஆக்கி விடுகின்றான்.’ (முத்தபகுன் அiஹி).
கேள்வி: நீர் இரவு முழுக்க நின்று வணங்கி நன்மையை பெற விரும்புகின்றீரா?
பதில்: எவர் இஷாவுடைய தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவாரோ அவர் பாதி இரவு நின்று வணங்கிய நன்மையை பெற்றுக் கொள்வார், எவர் ஸுபுஹ் தொழுகையையும் ஜமாஅத்துடன் நிறைவேற்றுவாரோ அவர் இரவு முழுக்க நின்று வணங்கிய நன்மையை பெற்றுக்கொள்வார்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
கேள்வி: மலைகளைப் போன்று நன்மைகளைப் பெற விரும்புகின்றீரா?
பதில்: யார் ஜனாஸாவில் கலந்து தொழுகையையும் நிறைவேற்றுவாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மை கிடைக்கும், ஜனாஸாவை அடக்கும் வரை அவர் இருப்பாரானால் இரண்டு கீராத் நன்மைகள் கிடைக்கும்.’ இரண்டு கீராத் என்பது இரு பெரும் மலைகளைப் போன்றதாகும். (முத்தபகுன் அலைஹி).
கேள்வி: நீங்கள் அல்லாஹ்வின் பாதுகாப்பை விரும்புகின்றீரா?
பதில்: எவர் ஸுப்ஹ் தொழுகையை நிறைவேற்றுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பொறுபிலுள்ளார்.’ (முஸ்லிம்).
கேள்வி: உமக்கும் நரகத்திற்கும் மத்தியில் எழுபது வருட தொலைவை நீர் விரும்புகின்றீரா?
பதில்: எவர் ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை எழுபது வருட தொலைவுக்கு நரகத்தை விட்டு தூரப்படுத்துவான். (முத்தபகுன் அலைஹி).
கேள்வி: உம்மை சுவர்க்கத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு பாதையை நீர் விரும்புகின்றீரா?
பதில்: எவர் (மார்க்கக்) கல்வியைத் தேடி வெளியேறுகின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தின் வழியை இளகு படுத்துகின்றான்.’ (முஸ்லிம்).
கேள்வி: ஒரு நோன்பாளியின், நின்று வணங்குபவரின், ஒரு போராளியின் நன்மையைப் பெற நீர் விரும்புகின்றீரா?
பதில்: ஏழைகளுக்காகவும், விதவைகளுக்காகவும் உழைப்பவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவரைப் போன்றவர், நான் எண்ணுகிறேன். தொடர்ந்து (இரவில்) நின்று வணங்குபவரைப் போன்று, தொடர்ந்து நோன்பு நோற்பவரைப் போன்று.’ (முத்தபகுன் அiஹி).
Salam Alaikkum Wa rahmatullahi wa barahaatuu
Enaku kuzhapamaaga ullathu, oru idatil neengal sollugireergal ALLAHvirkaga oru nonbu vaital 7 varudan ALLAHutaala naragatai tooram aakugiraan endru, veroru idatil solgireergal 70 varudam endru, veroru idatil koorugireergal 700 varudam endru, ethu saryana varudam batil alikkavum