சத்திய இஸ்லாத்தை நோக்கி வரும் டென்மார்க் மக்கள்
ஒரு சில விசமிகளால் நமது உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேலிச்சித்திரங்களை வரைந்த டென்மார்க் நாட்டில், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இறைவனருளால் அதி வேகமாக இஸ்லாம் வளர்ந்து வருவதாக டென்மார்க்கைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
இவர் கூறுகையில் இந்த மாதிரியான கேலிச்சித்திரங்களை வரைந்தது மிகச் சொற்பமானவர்களே! நாம் எங்கு சென்றாலும் இது போன்ற இஸ்லாத்தின் எதிரிகளைக் காணமுடியும்!
இறைவன் அவர்களின் இத்தைகய கீழ்த்தரமான சூழ்ச்சிகளை முறியடித்து முஸ்லிம்களுக்கு இதை ஒரு நல்ல வாய்ப்பாக அமைத்துக் கொடுத்ததாகக் கூறுகிறார். மேலும் இவர் கூறுகையில், இஸ்லாத்தின் எதிரிகளான இவர்களின் திட்டங்களை விட அல்லாஹ்வின் திட்டம் மிகப் பெரியது என்றார்.
இதன் விளைவாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக டென்மார்க் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் முன் எப்போதும் பார்த்திராத அளவிற்கு இஸ்லாத்தை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருப்பதாக இவர் கூறுகிறார்.
இவர் கூறுகையில், 25 ஆண்டுகளுக்கு முன்னால் தாம் இஸ்லாத்தைத் தழுவும் போது டென்மார்க்கைச் சேர்ந்த குடிமக்களாகிய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் பத்து அல்லது பதினைந்து நபர்கள் இருந்ததாகவும் இறைவனருளால் தற்போது அந்த எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கில் பெருவிட்டதாகவும் கூறுகிறார். மேலும் ஒவ்வொரு வாரமும் இரண்டு முதல் நான்கு பேர் தம்முடைய அலுவலகத்திற்கு வந்து ஷஹாதா கலிமா மொழிந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாகவும் கூறுகிறார்.
நபி (ஸல்) அவர்களைக் கேலிச் சித்திரம் வரைந்து, இஸ்லாத்தின் மீது சேற்றை வாரியிறைப்பதன் மூலம் இஸ்லாத்திற்கு எதிராக திட்டமிடப்பட்டிருந்த அவர்களுடைய சூழ்ச்சி வெற்றி பெறவில்லை என்றும் அல்லாஹ்வின் உதவியால் உலக முஸ்லிம்கள் ஒன்று திரண்டு அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து விட்டதாகக் கூறுகிறார்.
இவர் கூறுகையில் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஒவ்வொரு நாட்டில் வாழக்கூடியவர்களின் மொழிகளில் இஸ்லாம் எடுத்துரைப்பட வேண்டும் என்றும் இது மிக மிக இன்றியமையாத ஒன்றாக நம் முன்னே இருக்கின்றது என்றும் கூறினார்.