பிரார்த்தனை – ஓரு சிறந்த வணக்கம்
அல்லாஹ் மிக அருகில் இருக்கிறான் : –
அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக’ (அல்-குர்ஆன் 2:186)
பிடரி நரம்பை விட சமீபமாக அல்லாஹ் இருக்கிறான்: –
அல்லாஹ் கூறுகிறான் : மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்-குர்ஆன் 50:16)
பிரார்த்தனை தான் வணக்கம்: –
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பிரார்த்தனை தான் வணக்கம்’ அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி), ஆதாரம் : அபூதாவுத்.
அல்லாஹ் கூறுகிறான் : உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.’ (அல்-குர்ஆன் 40:60)
பணிவுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும்: –
அல்லாஹ் கூறுகிறான்: ‘பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்’ (அல்-குர்ஆன் 7:55)
இறைவனிடம் ஒரு அடியான் நெருக்கமாக இருக்கும் நேரம் : –
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அடியான் தனது இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் அவன் ஸூஜூதில் இருக்கும் போது தான். எனவே (அந்த நிலையில்) அதிகம் துஆ செய்யுங்கள்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.
மூன்றில் ஒன்று நிச்சயம் கிடைக்கும்: –
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
பாவம் சம்பந்தப்படாத இரத்த பந்தத்தை துண்டிக்காத விஷயத்தில் எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அவனுக்கு மூன்றில் ஒன்றை கொடுக்காமலில்லை. அவனின் பிரார்த்தனையை உடன் ஏற்றுக் கொள்கின்றான். அல்லது அதனுடைய நன்மையை மறுமைக்காக சேகரித்து வைக்கின்றான். அல்லது அப்பிரார்த்தனையைப் போன்று (அவனுக்கு நேரவிருந்த) ஒரு ஆபத்தை தடுத்து விடுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அப்படியானால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோமே என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், கேட்பதை விட அல்லாஹ் அதிகமாக பதிலளிக்க தயாராக இருக்கிறான்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரி, ஆதாரம்: திர்மிதி
பிரார்த்திப்பவரை வெருங்கையுடன் திருப்பிவிட வெட்கப்படும் அல்லாஹ்: –
உயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடம் இரு கைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமையாக திருப்பி விட அவன் வெட்கப்படுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: சல்மான் (ரலி)
அளவுக்கு மீறி பாவம் செய்திருப்பினும் மன்னிக்கக் கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான்: –
அல்லாஹ் கூறுகிறான்: –
‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
பார்க்கவும் : என் பிரார்த்தனைக்கு பலனில்லையே ஏன்?