ஏகத்துவக் கலிமாவின் பொருள் என்ன? – நன்பர் இருவரின் உரையாடல்
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
சமீபத்தில் இரு முஸ்லிம் சகோதரர்கள் வழக்கமான முறையில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது உலக விசயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் அது மார்க்கம் பற்றிய உரையாடலாக மாறியது. இந்த உரையாடல் முஸ்லிம்களுக்கு பயனளிக்கலாம் என்ற அடிப்படையில் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறோம். அல்லாஹ் இதை பயனுள்ளதாக ஆக்கியருள்வானாகவும்.
இதோ அந்த உரையாடல்: –
முதலாமவர் : (பெருமையுடன்) “எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கு, அதுவும் முஸ்லிம்களுக்கு ‘ஆஸ்கார் விருது’ கிடைத்திருக்கிறது”
இரண்டாமவர் : உங்கள் மாநிலத்தைச் சேர்ந்த (பூர்வீக மாநிலம்) அந்த இருவர் ஆஸ்கார் விருது பெற்றதில் முஸ்லிம்களுக்கு கிடைத்த பயன் என்ன? மேலும் அவர்களில் ஒருவர் தமக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததும் அதற்கு நன்றி செலுத்துவதற்காக சென்ற முதல் இடம் எது என்று தாங்கள் அறிவீர்களா?
முதலாமவர் : எங்கே சென்றார்?
இரண்டாமவர் : பக்கத்து மாநிலத்திலிலுள்ள இறைவனுக்கு இணை வைக்கும் இடமான தர்ஹாவுக்கு சென்று அங்கே அடக்கமாகியிருப்பவரிடம் வழிபாடு நடத்தினார்.
முதலாமவர் : அதனால் என்ன? அவர்களும் முஸ்லிம்கள் தானே! அவர்களை ஏன் குறை கூறுகிறீர்கள்? மேலும் உங்களைப் போன்றவர்களில் சிலர் அவர்களை முஸ்லிம்கள் இல்லை என்று வசைபாடுகிறீர்களே! உங்களுக்கு ஒன்று தெரியுமா?
எவர்’லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறி ஏகத்துவ கலிமாவை மொழிந்தாரோ அவரும் முஸ்லிமாவார்.
இரண்டாமவர் : ஆம் உறுதியாக! எவர்’லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறி ஏகத்துவ கலிமாவை மொழிந்தாரோ அவரும் முஸ்லிமாவார். தாங்கள் தயவு செய்து ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்பதன் பொருள் கூறுங்கள்.
முதலாமவர் : ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்பதாகும்.
இரண்டாமவர் : ஆமாம். வணக்கற்குரிய இறைவனும் அவன் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதையும் தாங்கள் அறிவீர்கள் தானே!
முதலாமவர் : ஆம் இதிலென்ன சந்தேகம்?
இரண்டாமவர் : அப்படியானால் ‘வணக்கம்’ என்பதன் பொருள் கூறுங்கள்.
முதலாமவர் : நாம் வாழ்க்கையில் செய்யும் அனைத்துக் காரியங்களும் ஒரு வகையில் இறைவனுக்கு செய்யும் வணக்கங்களாகும்.
இரண்டாமவர் : சரியாகச் சொன்னீர்கள். ஆனால் பெரும்பாலான நமது முஸ்லிம்களிடம் நீங்கள் வணக்கம் என்றால் என்ன என்று கேட்டால் அவர்கள் ‘தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் போன்றவைகள் தான் வணக்கம் என்று கூறுவார்கள்.
ஆனால் இபாதத் (வணக்கம்) என்பதில் இவைகள் மட்டும் அடங்காது. அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் எவைகளையெல்லாம் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார்களோ அவைகள் அனைத்தும் வணக்கம் ஆகும். அவைகளை அல்லாஹ்வுககு தவிர வேறு யாருக்கும் செய்வதற்கு உரிமையில்லை. உதாரணம் : நேர்ச்சை செய்தல், பிரார்த்தனை செய்தல் போன்றவையாகும்.
முதலாமவர் : அதெல்லாம் சரி. அவர்கள் அந்த மகான்களை வணங்கவில்லையே! பிறகு ஏன் அவர்களை திட்டுகிறீர்கள்.
இரண்டாமவர் : பொதுவாக நாங்கள் யாரையும் திட்டுவதில்லை. ஆனால் அவர்கள் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் கடமை பட்டுள்ளோம். எனேன்றால் ஒரு ஸஹீஹ் ஹதீஸில் வந்துள்ளபடி ‘முஃமின் ஒரு தீமையைக் கண்டால் அவர் தம்முடைய கையால் தடுத்திட வேண்டும். அதற்கு அவர் சக்திபெற வில்லையெனில் அவர் தமது வாயால் தடுத்திட முயல வேண்டும். அதற்கும் அவர் சக்திபெற இயலவில்லையெனில் அவர் தமது மனதால் அவற்றை வெறுத்து ஒதுங்கி விடவேண்டும். இது ஈமானில் குறைந்த பட்சமாகும். எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் நாங்கள் முஸ்லிம்களிடத்தில் காணப்படும் தவறுகளை சுட்டிக் காட்டுகிறோமே தவிர அவர்களை ஏசுவதில்லை,திட்டுவதில்லை.
முதலாமவர் : உங்களுக்குத் தெரியுமா? இந்த மகான்கள் எவ்வளவு புனிதத்துவம் வாய்ந்தவர்கள் என்று? உதாரணத்திற்கு ஒன்று கூறுகிறேன். நபி (ஸல்) அவர்களின் இறுதி பேருரைக்குப் பின்னர் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் சென்ற நபித்தோழர்களில் ஒருவர் எங்கள் மாநிலத்திற்கும் (கேரளாவுக்கும்) வந்தார். அந்தப் புனிதர் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகி இஸ்லாத்தை நம் மக்களிடையே போதித்தார். அவரை நினைவு கூறும் முகமாக அவரின் அடக்கஸ்தலத்திற்கு ஜியாரத் சென்று வருவதில் என்ன தவறு? நாங்கள் அவரை வணங்குவதற்காக செல்ல வில்லையே!
இரண்டாமவர் : முதலில் தாங்கள் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். ஜியாரத் செய்வதற்கென்று இஸ்லாம் சில நியதிகளை விதித்துள்ளது. மேலும் இஸ்லாம் கப்ருகள் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும் தடை செய்திருப்பதோடு அல்லாமல் தரைக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ள கப்ருகளை தரை மட்டமாக்குவதற்கும் கட்டளையிடுகிறது.
“உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்” என்று அலி (ரலி) அவர்கள் கூறியதாக அபுல் ஹய்யாஜ் அல் அஜதி (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸூம் திர்மிதியில் வந்துள்ளது.
மேலும் இப்போது நாம் கப்ருகளுக்கு செல்பவர்களை ஆராய்வோமென்றால் அவர்களை மூன்று வகையினராக்கலாம். அந்த வகையினர் யாவர் எனில்,
முதலாம் வகையினர் : இவர்கள் இறந்து விட்ட இறைநேசர்களின் கப்ருகளுக்கு சென்று அங்கே அடக்கமாகியிருப்பவர்களையே நேரடியாக அழைத்து அவர்களிடமே உதவி கேட்கின்றனர். அவர்களிடமே பிரார்த்தனை (துஆ) செய்கின்றனர். இது அல்லாஹ்வுக்கு பகிரங்கமாக இணை வைக்கும் செயலாகும்.
இரண்டாவது வகையினர் : இவர்கள் முதலாம் வகையினரில் இருந்து சற்று வித்தியாசமாக, இறந்தவர்களும் அல்லாஹ்வின் அடிமைகள் தான்! இருப்பினும் அவர்கள் இறைவனுக்கு மிக நெருக்கமானவர்கள். நாங்கள் பாவங்கள் பல செய்த பாவியாக இருப்பதால் இந்த புனிதர்களின் மூலம் இறைவனிடம் எங்களின் தேவைகளைக் கேட்டுப் பெறுகிறோம் என்கின்றனர். இதுவும் தவறான வாதமாகும். ஏனென்றால் இவர்களின் நிலை மக்கத்து இணை வைப்பாளர்களுக்கு ஒத்திருக்கிறது.
அன்று மக்கத்து காஃபிர்கள் கூறியதையே இன்று இவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ‘அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை’ (என்கின்றனர்). (அல் குர்ஆன் 39:3). எனவே திருமறையின் கூற்றுப்படி இந்த இரண்டாம் வகையினரும் இணை வைப்பவர்களே!
மூன்றாவது வகையினர் : இவர்கள் முதல் இரண்டு வகையினருக்கு சற்று வித்தியாசமாக இறந்தவர்களுக்கு நம்முடைய கோரிக்கையை கேட்கும் சக்தியில்லை என்பது எங்களுக்கு தெரியும். அதனால் நாங்கள் அவர்களிடம் கேட்பதில்லை. மாறாக அந்தப் புனிதர்களின் பொருட்டால் இறைவனிடம் தான் கேட்கிறோம். ஏனென்றால் அந்த மனிதப் புனிதர்கள் இறைவனின் நேசத்திற்குரிய மகான்கள். அவர்கள் பொருட்டால் கேட்டால் இறைவன் மறுக்கமாட்டான்’ என்பது இவர்களின் வாதமாகும்.
இதுவும் தவறான வாதமாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்களால் சுவர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்டவர்களைத் தவிர வேறு யாரையும் இவர் சுவர்க்கவாதி என்றோ அல்லது நரகவாதி என்றோ கூற நமக்கு அனுமதி இல்லை.
அவ்வாறிருக்கையில் நாம் எஞ்ஞனம் ஒருவரை சுவர்க்கவாதி என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் அவர் இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற சான்றிதழும் வழங்குகிறோம்?
எந்த அடிப்படையில் அவ்வாறு நாம் கூறுகிறோம்? இறந்தவர் இறைவனுடைய நேசத்திற்குரியவரா அல்லது கோபத்திற்குரியவரா என்பது நமக்கு எப்படி தெரியும்? மேலும் நபிமொழி ஒன்றை உங்களுக்கு கூற விரும்புகிறேன்!
“ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் செர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.) (ஆதாரம் : புகாரி) எனவே நபியவர்க்ளின் இந்தக் கூற்றுப்படியும் நாம் ஒருவரை சுவர்க்கவாதி என்றோ அல்லது நரகவாதி என்றோ கூறக் கூடாது.
உங்களுக்கு சிரமம் ஏதும் இல்லையென்றால் மேலும் சில கருத்துக்களைக் கூற விரும்புகிறேன்.
முதலாமவர் : சிரமமில்லை! கூறுங்கள்.
இரண்டாமவர் : முதல் இருவகையினரை எடுத்துக் கொள்வோமேயானால் அவர்களின் நம்பிக்கையைப் பற்றி நாம் ஆழமாக சிந்திக்க கடமைபட்டுள்ளோம். அதவாது இறந்தவர்களின் கப்ருகளுக்குச் செல்லும் முதலாம் மற்றும் இரண்டாம் வகையினர் அங்கே அடக்கமாகியிருப்பவர் தமது பிரார்த்தனைகளைச் செவிமெடுத்து தமக்கு உதவுகிறார் என்று நம்புகின்றனர். இது அல்லாஹ் திருமறையில் தன்னுடைய பண்புகளாக கூறுபவற்றுக்கு இணை கற்பிப்பதைப் போன்றதாகும். இதை ஒரு சில உதாரணங்கள் மூலம் உங்களுக்கு நான் விளக்குகிறேன்.
முதலாமவர் : கூறுங்கள்!
இரண்டாமவர் : ஒருவர் நாம் இருக்கும் இந்த வீட்டின் சில வீடுகள் தள்ளியிருந்து நம்மை அழைத்தால் நம்மால் அவர் அழைப்பதை உணர முடியுமா?
முதலாமவர் : உணர முடியாது!
இரண்டாமவர் : அதுபோல் பல ஆயிரம் பேர்கள் நம் கண் எதிரே நின்று நம்மிடம் ஆளுக்கொரு கோரிக்கையை ஒரே நேரத்தில் முன் வைத்தால் நம்மால் அனைவரது கோரிக்கைகளையும் ஒரே நேரத்தில் கேட்க முடியுமா?
முதலாமவர் : கேட்க முடியாது!
இரண்டாமவர் : அதுபோல் அடக்கமாகியிருக்கும் ஒருவரது கப்ரின் அருகே நின்று பல்லாயிரக் கணக்கானோர் ஒரே நேரத்தில் தம் தேவைகைளைக் கேட்பதாக இருந்தால் அங்கே அடக்கமாகி இருப்பவரால் அத்தனை கோரிக்கைகளையும் ஒரே நேரத்தில் கேட்க இயலுமா?
முதலாமவர் : நிச்சயமாக முடியாது.
இரண்டாமவர் : அப்படியானால் ஒரே நேரத்தில் பல்லாயிரம் பேர்கள் அழைக்கும் அழைப்பைச் சேவியேற்கும் சக்தியுடையவன் யார்?
முதலாமவர் : அல்லாஹ் மட்டுமே!
இரண்டாமவர் : ஆமாம். அல்லாஹ் மட்டுமே கோடானு கோடி உயிரினங்கள் ஒரே நேரத்தில் அழைத்தாலும் அவர்களின் அழைப்பைக் கேட்டு அவர்களின் தேவைகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றும் ஆற்றலுடையவன். இறைவனுடைய பண்புகளில் பெயர்களில் ஒன்று தான் ‘ஷமீவுன்’. கேட்கக்கூடியவன் என்பதாகும். நீங்கள், நான் மற்றும் உயிரினங்கள் கேட்கும் சக்தியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நாமும் கேட்கும் சக்தியைப் பெற்றிருக்கிறோம். ஆனால் இறைவனின் கேட்கும் சக்தியோ நம்முடையதிலிருந்து மாறுபட்டு தனித்து நிற்கிறது. அதாவது ஒரே நேரத்தில் அவனது பல்லாயிரங் கோடி படைப்பினங்களின் அழைப்பை ஏற்று அவைகளின் தேவைகளை நிறைவேற்றுபவனாக உள்ளான். இறைவனின் இத்தகைய பண்பை நாம் யாருக்கும் இணை வைக்கக் கூடாது. இறைவனுக்கு மட்டுமே உரிய இந்த பண்பு மற்றவருக்கும் இருக்கிறது என்று கூறுகிற போது அல்லது நம்புகிற போது அது ஷிர்க் என்னும் இணை வைத்தலாகிறது. இதுபோல மற்றுமொரு கேள்வி!
முதலாமவர் : கேளுங்கள்
இரண்டாமவர் : நமது இந்த அறைக்கு பக்கத்து அறையில் யாராவது இருந்தால் நம்மால் அவர்களை இங்கிருந்துக் கொண்டே பார்க்க முடியுமா?
முதலாமவர் : நிச்சயமாக முடியாது!
இரண்டாமவர் : அதுபோல் அடக்கமாகியிருக்கும் ஒருவரது கப்ரின் அருகில் நின்று பல ஆயிரம் பேர்கள் அவரை அழைக்கும் போது அவரால் அவர்களனைவரையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியுமா?
முதலாமவர் : பார்க்க முடியாது!
இரண்டாமவர் : அல்லாஹ் மட்டுமே ஒரே நேரத்தில் அகிலங்கள் அனைத்திலும் உள்ளதைப் பார்க்க முடியும். அப்படியெனில் நாம் எவ்வாறு இறந்து விட்ட இறைநேசர்கள், நாம் அவர்களின் கப்ருகளுக்கு அருகில் வந்து அவரிடம் பிரார்த்தனை செய்கிறோம் என்று பர்ர்த்து அறிந்து நமக்கு உதவ முடியும்?
மேலும் நான் ஒன்று தங்களிடம் கேட்க விரும்புகிறேன்.
முதலாமவர் : கேளுங்கள்
இரண்டாமவர் : என் மனதில் ஒன்று உள்ளது அது என்ன?
முதலாமவர் : எனக்கு எப்படித் தெரியும்? நீங்கள் கூறினால் தான் தெரியும்!
இரண்டாமவர் : அப்படியென்றால் இவ்வுலகில் உயிர் வாழும் வேறு யாருக்காவது அல்லது இதற்கு முன்னர் வாழ்ந்து மரணித்து விட்டவருக்கோ தெரியுமா?
முதலாமவர் : அது எப்படி தெரியும்? மனதில் உள்ளவற்றை அல்லாஹ் மட்டுமே அறிவான்.
இரண்டாமவர் : ஆம். என் மனதில் உள்ளது உங்களுக்கும் உங்கள் மனதில் உள்ளது எனக்கும் மற்றவர்களுக்கும் நாம் கூறனாலே தவிர தெரியாது. ஆனால் நம்மைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கு நாம் கூறினாலும் அல்லது கூறாவிட்டாலும் தெரியும்.
அல்லாஹ் தன் திருமறையின் பல இடங்களில் இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ் மட்டுமே என்று வலியுறுத்திக் கூறியுள்ளான். (பார்க்கவும் அல்-குர்ஆன் : 67:13, 11:5, 11:31, 29:10, 48:18, 67:13, 28:69, 28:69, 2:284, 3:29, 14:38)
இறை நேசர்களின் கப்ருகளுக்குச் செல்வோர்களில் எத்தனை நபர்கள் வாயால் மொழிந்து தம் தேவைகளைக் கேட்கிறார்கள்? அனைவரும் தம் தேவைகளை தம் மனதிற்குள்ளாகவே நினைத்துக் கொண்டு அத்தேவைகளை அங்கே அடக்கமாகி இருக்கும் இறை நேசர்கள் அறிந்து அவற்றை நிறைவேற்றி வைக்கிறார்கள் என்று தானே நம்புகிறார்கள்!
இது மேற்கூறிய ‘இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ் மட்டுமே’ என்பதற்கு முரணாக இல்லையா? மேலும் இது அல்லாஹ்வைத் தவிர இது போன்ற எண்ணற்ற இறை நேசர்களும் இதய இரகசியங்களை அறியக் கூடியவராக உள்ளனர் என்று ஆகாதா?
முதலாமவர் : ஆமாம்.
இரண்டாமவர் : ஆம் சகோதரரே! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களைப் பிறருக்கு செய்வதும் இறைவனுக்கு மட்டுமே உரிய பண்புகளை மற்றவர்களுக்கும் இருப்பதாக நம்பிக்கைக் கொண்டு செயல்படுவது தான் ஷீர்க் என்னும் இணைவைப்பாகும்.
அல்லாஹ் கூறுகிறான் : ‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)
முதலாமவர் : எங்கள் ஊரில் சிலர் பல காலமாக இதைக் கூறி வருகிறார்கள்! ஆனால் அதிகமாக யாரும் பின்பற்றுவதில்லையே!
இரண்டாமவர் : நம்முடைய பணி எடுத்துச் சொல்வதே தவிர வேறில்லை. ஏனென்றால் நேர்வழி காட்டுபவன் அல்லாஹ் மட்டுமே! உங்களுக்குத் தெரியுமா? நமது நபி (ஸல்) அவர்களின் பெரிய தகப்பனார் அபுதாலிப் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். ஆனால் இறுதியில் அவர் அப்துல் முத்தலிப் மார்க்கத்திலே மரணமடைந்தார்!
முதலாமவர் : ஆமாம். நான் படித்திருக்கிறேன்.
இரண்டாமவர் : எனவே நாம் அதைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. அல்லாஹ் நாடியவருக்கு நேர்வழி காட்டுவான்.
சரி சகோதரரே! நான் உங்களின் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டேன். விடை கொடுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
முதலாமவர் : வ அலைக்கும் அஸ்ஸலாம்.