பொய் சத்தியம் செய்வதன் விபரீதங்கள்!
இன்று எதற்கெடுத்தாலும் சத்தியம் செய்வது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அவற்றில் பெரும்பாண்மையானவை பொய் சத்தியங்களாகக் கூட போய்விடுகின்றது. இன்னும் சிலர், தங்களின் வியாபாரங்களில், அல்லது நீதி மன்றங்களில் அல்லது அற்ப உலக ஆதாயத்தை அடைவதற்காக துணிந்து பொய் சத்தியம் செய்கின்றனர்.
ஆனால், பொய் சத்தியம் செய்வதை இஸ்லாம் தடை செய்திருப்பதோடல்லாமல் அவ்வாறு பொய் சத்தியம் செய்வது பெரும்பாவங்களுல் ஒன்று எனவும் எச்சரிக்கின்றது.
அல்லாஹ் கூறுகின்றான்:
“ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரைவிட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்னும் காரணத்தால், நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்குச் சாதனங்களாக்கிக் கொள்கிறீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பதெல்லாம் இதன் மூலமாகத்தான்; இன்னும், நீங்கள் எ(வ்விஷயத்)தில் பேதப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ (அதனை) அவன் உங்களுக்கு மறுமைநாளில் தெளிவாக்குவான்.” (அல்-குர்ஆன் 16:92)
“யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை; அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்; இன்னும், மறுமை நாளில் அவன் அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான்; மேலும், அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையும் உண்டு” (அல்=குர்ஆன் 3:77)
“எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்கள் அறிந்துகொண்டே (உங்களுடன் இருப்பதாக) பொய்யின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்களுக்காக அல்லாஹ் கடினமான வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான்; நிச்சயமாக அவர்கள் செய்துகொண்டிருப்பவையெல்லாம் மிகவும் கெட்டவையே. அவர்கள் தங்கள் சத்தியங்களைக் கேடயமாக ஆக்கிக் கொண்டு, (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள்; ஆகவே அவர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.” (அல்=குர்ஆன் 58:14-16)
நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள்:
“பொய் சத்தியம் செய்வது பெரும் பாவம் ஆகும்!” (புகாரி: 2653)
“பொய் சத்தியம் செய்து பிறரின் பொருளை அபகரிப்வர்கள் மறுமை நாளில் அல்லாஹ்வை கோவம் கொண்ட நிலையிலேயே சந்திப்பார்கள்!” (புகாரி: 2416)
“பொய் சத்தியம் செய்து பொருளை விற்க கூடியவர்கள் உடன் அல்லாஹ் மறுமை நாளில் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உள்ளது!” (புகாரி: 2672)