நோன்பு குறித்து மூஸா நபி அல்லாஹ்வுடன் உரையாடினார்களா?

ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம்,

“யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்.. இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா?”

என கேட்டார்.

அதற்கு அல்லாஹு தஆலா,

“மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்) இன் கூட்டத்தினரை அனுப்புவேன். அவர்கள் காய்ந்த உதடுகளுடனும், வரண்ட நாவுடனும், மெலிந்து கண்கள் குழிவிழுந்த தோற்றத்துடனும் இருப்பதோடு வயிற்றில் பசியுடன் – என்னை அழைப்பர் (துஆ மூலம்). அவர்கள் தான் அதிகம் அதிகம் எனக்கு நெருக்கமானவர்கள்!

மூஸாவே! உங்களுக்கும் எனக்கும் மத்தியில் 70000 தடுப்புக்கள் இருந்தன. ..ஆயினும் இஃப்தார் நேரத்தில் எந்த ஒரு தடுப்பும் எனக்கும் நபி முஹம்மதின் உம்மத்திற்கும் இருக்காது.

மூஸாவே! இஃப்தார் நேரத்தில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப்படாது. அதற்கான பொருப்பை நானே ஏற்கிறேன்”

என்றான்..

ஸூப்ஹானல்லாஹ்!!

இந்த ஹதீஸை அதிகம் அதிகம் பகிரவும்..

தயவு செய்து மகத்துவம் மிக்க கண்ணியப்படுத்தப்பட்ட நோன்பு திறக்கும் நேரத்தை வீணாக கழிக்காமல் இறைவனை பொருத்தம் அடைவீர்..

மேற்படி செய்தி ‘நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்பதற்கான அறிவிப்பாளர் வரிசையுடன் எந்த ஹதீஸ் கிரந்தத்திலும் இடம் பெறவில்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த செய்தியை ஹிஜ்ரி 894 ல் மரணித்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் இப்னு அப்துஸ் ஸலாம் அஸ்ஸபூரி என்பவர் தனது கதைகளும், கப்ஸாக்களும், இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளும் நிறையவே உள்ள ‘நுஸ்ஹதுல் மஜாலிஸ் வமுன்தஹபுன் நபாயிஸ்’ என்ற புத்தகத்தில் 182, 183 ஆகிய பக்கங்களில் எந்த ஒரு ஆதாரத்தையும் முன்வைக்காமல் வெரும் புனையப்பட்ட கதையாக குறிப்பிடுகின்றார்.

மேலும் அவரை தொடர்ந்து ஹிஜ்ரி 1127 இல் மரணித்த இஸ்மாயீல் ஹக்கி அல் ஹலூதி என்பவர் தனது ‘ரூஹுல் பயான்’ எனும் தப்ஸீரில் (8/112) எந்த ஒரு அறிவிப்பாளர் வரிசையையும் குறிப்பிடாமல் எழுதி வைத்திருக்கின்றார்.

இவ்வாறு பிற்பட்ட காலத்தில் வந்தவர்கள் எழுதி வைத்துள்ள மேற்படி செய்தியை நபியவர்களோடு இணைத்து சமூக வலைத்தளங்களில் பரப்புவது பாரிய குற்றமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த செய்தி நபி மூஸா (அலை) அவர்களின் கண்ணியத்தை குறைப்பதாகும் என்பதை நாம் அவதானிக்க வேண்டும். ‘நபியவர்களின் உம்மத்தை சேர்ந்த ஒருவர் நபி மூஸா (அலை) அவர்களை விட அல்லாஹ்விடத்தில் கண்ணியமானவர்’ என்ற தோற்றப்பாட்டை இந்த செய்தி ஏற்படுத்தக் கூடிய அபயாத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே இவ்வாறான எந்த ஒரு ஆதாரமுமற்ற செய்திகளையும் நன்மை என்று நினைத்து பகிர்வதில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம்!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *